Pages

Saturday, January 15, 2011

சலங்கை மாடு திருவிழா

அனைத்து மதத்தினரும் கொண்டாடும் சலங்கை மாடு திருவிழா

ஜனவரி 15,2011,00:03 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=166332

கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு தேவராடிபாளையம் கிராமத்தில் மட்டும், பல தலைமுறைக ளாக பூப்பொங்கலன்று அனைத்து மதத்தினரும் சலங்கை மாடு மஞ்சள் நீராட்டு விழாவை விமரிசையாக கொண்டாடுகின்றனர்.

கோவை மாவட்டம், கிணத்துக்கடவில் இருந்து மூன்று கி.மீ., தூரத்தில் கோடங்கிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட தேவராடிபாளையம் கிராமம் உள்ளது. இங்கு பல தலைமுறைகளாக பொங்கல் விழாவில் வரும் மூன்று நாட்களில், பசு மாடு கன்று ஈன்றால், அந்த மாட்டை அடுத்த ஆண்டு வரும் மாட்டுப்பொங்கலன்று, கன்று ஈன்ற வீட்டுக்கு சொந்தமான தாய்மாமன் வீட்டிற்கு செல்கின்றனர். அங்கு தாய்மாமனுக்கும், அவரது குடும்பத்திற்கும் புத்தாடைகள் எடுத்து கொடுத்து, விருந்து வைக்கின்றனர். மாட்டின் இரண்டு காதுகளில் கத்தியால், மூன்று கிறல் போடப்படுகிறது.

அதனால், சாமிக்கு மாடு அர்ப்பணிக்கப்படுவதாக கூறப்படுகிறது. மேலும், சாமியும் மாடும் ஒன்று என்று நினைக்கின்றனர். இதனால், மாட்டிற்கு மஞ்சள் துணியை கழுத்தில் கட்டி, சலங்கை கட்டிய பின் மஞ்சள் நீர் ஊற்றப்படுகிறது. இதனை தொடர்ந்து, பூப்பொங்கலன்று காலை 6.00 மணியளவில், தேவராடிபாளையம் கிராமம் மைதானத்தில் சலங்கை மாடுகள் நிறுத்தப்படுகின்றன. பின், கிராமத்தில் உள்ள அனைத்து மதப்பிரிவினர் வீட்டிற்கும் மாடுகள் பிரிக்கப்பட்டு மதியம் 2.00 மணி வரை வீடு வீடாக அழைத்துச்செல்லப்படுகிறது.ஒவ்வொரு வீட்டினரும் சலங்கை மாட்டை வீட்டிற்குள் அழைத்து சென்று அதன் மேல் மஞ்சள் நீர் ஊற்றி வழிபாடு செய்கின்றனர். பின், குடும்பத்தினர் மீது ஒருவருக்கு ஒருவர் மஞ்சள் நீர் ஊற்றி மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்.

ஒவ்வொரு வீட்டிற்கும் சலங்கை மாடு வந்து சென்றால், ஐஸ்வர்யம் கொழிக்கும், சாமியே நேரில் வீட்டிற்குள் வந்ததாக ஐதீகம் என்று இக்கிராம மக்கள் கூறுகின்றனர். அன்று மதியம் 2.00 மணிக்கு மேல், சலங்கை மாடுகளை அருகில் உள்ள கோதவாடி மாலை கோவிலுக்கு அழைத்து செல்கின்றனர்.

அங்கும் மாட்டிற்கு வழிபாடு செய்த பின், மாலை 5.00 மணிக்கு அக்கிராமத்திற்கு அழைத்து வரப்பட்டு மைதானத்தில் பல்வேறு விளையாட்டுகள் நடத்தப்படுகின்றன.மாட்டுக்கு சொந்தக்காரர், மாட்டை வீட்டிற்கு அழைத்து சென்ற பின், பொதுமக்கள் சார்பில், கும்மிப்பாட்டு, ஒயிலாட்டம் போன்ற விளையாட்டுகளும் நடத்தப்படுகிறது. இதனால் தேவராடிபாளையம் கிராமம் முழுவதும் திருவிழா கோலம் பூண்டு காணப்படும். இந்த சலங்கை மாடு இறக்கும் காலம் வரை மாட்டின் சொந்தக்காரர் பராமரித்து வருவார். இடையில் இம்மாட்டை விற்பனை செய்தால், அதற்காக கிடைக்கும் பணம் மாலை கோவிலுக்கு வழங்கப்படுகிறது. இக்கிராமத்தில் மட்டுமே இந்நிகழ்ச்சி வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.