Pages

Tuesday, December 14, 2010

தாயை பிரிந்து தவித்த குட்டி யானை வண்டலூர் பூங்கா வந்தது

தாயை பிரிந்து தவித்த குட்டி யானை வண்டலூர் பூங்கா வந்தது சொகுசு கார் மூலம் கொண்டு வரப்பட்டது

வண்டலூர், டிச.15-
http://dailythanthi.com/article.asp?NewsID=613871&disdate=12/15/2010&advt=1



தாயை பிரிந்து தவித்த குட்டி யானை, மேட்டுப்பாளையத்தில் இருந்து சொகுசு கார் மூலம் வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு கொண்டுவரப்பட்டது.

குட்டி யானை

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தை அடுத்த ஓடந்துறை காப்புகாட்டில் கடந்த 13-ந் தேதி அதிகாலை காட்டுயானைகள் கூட்டமாக வந்தன. அதில் ஒரு பெண் யானை, குட்டியை ஈன்றது. சிறிது நேரத்தில் அங்கு ஆட்கள் நடமாட்டம் அதிகரித்ததால் அந்த யானை கூட்டம் வனப்பகுதிக்குள் சென்று விட்டது.

பிறந்து சில மணி நேரத்தில், அந்த குட்டி யானையை தவிக்க விட்டுவிட்டு தாய் யானையும் வனப்பகுதிக்குள் சென்று விட்டது. வனப்பகுதியில் குட்டி யானை தள்ளாடியபடி நடந்து தவிப்பதை பார்த்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

தேடுதல் வேட்டை

தகவல் அறிந்ததும் வனத்துறை அதிகாரிகள் உள்பட 50-க்கும் வன ஊழியர்கள் அங்கு விரைந்து சென்று குட்டி யானையை மீட்டனர். மிகவும் சோர்வாக காணப்பட்ட குட்டி யானைக்கு இளநீரில் பால் பவுடர், குளூகோஸ் கலந்து சிறிய குழாய் மூலம் கொடுக்கப்பட்டது.

மேலும் குட்டியானையை அதன் தாய் யானையுடன் சேர்க்க வனத்துறையினர் பல்வேறு குழுக்களாக பிரிந்து சென்று வனப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினார்கள். அப்போது சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் யானைகள் கூட்டம் இருப்பது தெரியவந்தது.

கண்டுகொள்ளாத யானைகள்

இதையொட்டி வனச்சரக அலுவலர் நசீர் மற்றும் வனத்துறை ஊழியர்கள், 75 கிலோ எடையுள்ள குட்டி யானையை அந்த பகுதிக்கு தூக்கிச் சென்றனர். யானைகள் நின்றிருந்த இடம் அருகே 50 அடி தூரத்தில் குட்டியானையை வனத்துறையினர் கொண்டுபோய் விட்டனர். யானைகள் கூட்டத்தை கண்டதும் குட்டியானை அங்கும், இங்கும் ஓடியது.

அப்போது குட்டியானையை நோக்கி வந்த யானை கூட்டம் திடீரென்று அதனை கண்டு கொள்ளாமல் பின்வாங்கி வனப்பகுதிக்குள் சென்று விட்டது. குட்டியானையும் யானை கூட்டத்தை பின்தொடர்ந்து செல்லாமல் அங்கேயே நின்றுவிட்டது.

தேடும் முயற்சி கைவிடப்பட்டது

இதனால் ஏமாற்றம் அடைந்த வனத்துறையினர் மீண்டும் குட்டி யானையை காப்புக்காடு பகுதிக்கு கொண்டு வந்தனர். அந்த பகுதியில் யானைகள் கூட்டம் நடமாட்டம் உள்ளதா என்று நேற்று முன்தினம் இரவு வரை கண்காணித்தனர்.

நேற்று காலை வரை குட்டி யானையை தேடியும் யானைகள் கூட்டம் எதுவும் அந்த பகுதிக்கு வரவில்லை. இதனால் குட்டியானையை தாய் யானையுடன் சேர்க்கும் முயற்சியை வனத்துறையினர் கைவிட்டனர்.

சொகுசு காரில்

பின்னர் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் தலைமை வனஉயிரின காப்பாளர் ஆர்.சுந்தர்ராஜ் அறிவுரையின் பேரில் பெண் குட்டி யானையை சொகுசு கார் மூலம் வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டது.

நேற்று காலை வனப்பகுதியில் இருந்த குட்டியானை மேட்டுப்பாளையம்-கோத்தகிரி ரோட்டில் உள்ள அரசு மரக்கிடங்கு வளாகத்திற்கு கொண்டு வரப்பட்டது. பயணத்தின்போது காயம் ஏதும் ஏற்படாமல் இருக்க காரின் உள்பகுதியில் வாழை சருகுகளை துணிகளில் கட்டி மெத்தை போன்று அமைத்தனர்.

பூஜை செய்து அனுப்பி வைத்தனர்

காலை 8 மணி அளவில், குட்டி யானைக்கு மாலை அணிவித்து தேங்காய் உடைக்கப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பூஜையின்போது குட்டியானை துதிக்கையால் அருகில் இருந்தவர்களின் கால்களை வருடியது.

பூஜை முடிந்ததும் குட்டியானை காரில் ஏற்றப்பட்டு வண்டலூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. குட்டியானைக்கு தேவையான உணவு பொருட்களுடன், சில வன ஊழியர்களும் பாதுகாப்பாக அந்த காரில் வந்தனர்.

வண்டலூர் பூங்கா வந்தது

வழியில் குட்டி யானைக்கு பயண களைப்பை போக்குவதற்காக 2 மணி நேரத்திற்கு ஒரு முறை இளநீரில் குளுக்கோஸ் கலந்து கொடுத்தனர். சுமார் 9 மணி நேர பயணத்திற்கு பிறகு நேற்று மாலை 5.20 மணிக்கு குட்டி யானை வண்டலூர் உயிரியல் பூங்கா வந்து சேர்ந்தது.

இதேபோல் தாயை பிரிந்து வந்த சில குட்டி யானைகள் உள்ள இடத்திற்கு சென்று, காரில் இருந்த குட்டி யானையை பத்திரமாக கீழே இறக்கினார்கள். புதிய வரவு குட்டி யானையை, பூங்காவின் உதவி இயக்குனர் ஆர்.எஸ்.சத்தியமூர்த்தி மற்றும் வன ஊழியர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

முதலில் சற்று திகைத்து நின்ற குட்டி யானை, ஏற்கனவே தாயை பிரிந்து வந்து உள்ள குட்டி யானைகளை பார்த்தவுடன் அதன் அருகே போய் நின்றது

பாசப்பிணைப்பு

புதிய குட்டியை பார்த்ததும், பூங்காவில் இருந்த 1 வயது உரிகம் என்ற குட்டி யானை தனது உடன் பிறந்த குட்டி போல பாவித்து தனது துதிக் கையினால் வாஞ்சையுடன் தடவிக்கொடுத்தது. இந்த காட்சி அங்கு இருந்த அதிகாரிகளுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

பின்னர் 2 யானை குட்டிகளும் நீண்ட நேரமாக தங்களது துதிக் கைகளால் அரவணைத்தபடி நின்றன. அதைக்கண்டு வன ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பின்னர் குட்டி யானையை பூங்கா மருத்துவர் திருமுருகன் பரிசோதனை செய்தார்.

24 மணி நேரமும் கண்காணிப்பு

ஏற்கனவே யானை குட்டிகள் உள்ள பாரமரிப்பு இடத்தில் வைத்து இதை பாராமரிப்பது என்று அதிகாரிகள் முடிவு செய்தனர். இதன்படி ஊழியர்கள் இதனை 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர்.

தற்போது குளிர் அதிகமாக இருப்பதால் இந்த பெண் குட்டி யானை இரவில் தூங்கும் போது கம்பளி போர்வை போர்த்தப்படும். நாளை முதல் மற்ற குட்டி யானைகளுடன் பழக விடப்படும்.

4 குட்டி யானைகள்

இந்த புதிய வரவுடன் சேர்த்து பூங்காவில் 7 யானைகள் உள்ளன. இவற்றில் பெரிய யானையின் பெயர் அஸ்வினி (வயது 28), அதற்கடுத்துள்ள யானையின் பெயர் அபிநயா (8) மற்ற நான்கும் குட்டி யானைகள் ஆகும்.

இவற்றுக்கு சரவணன் (2), நரசிம்மன் (2), உரிகம் (1), கிரி (9 மாதம்) என்பதாகும். இந்த 4 யானை குட்டிகளும் பல்வேறு இடங்களில் இருந்து தாயை பிரிந்து வந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.