Pages

Friday, December 3, 2010

செல்லப்பிராணிகள் கண்காட்சி

செல்லப்பிராணிகள் கண்காட்சியில் குழந்தைகளை கவர்ந்த அரிய வகை நாய்கள், வெளிநாட்டு பறவைகள்

கோவை,டிச.4-
http://dailythanthi.com/article.asp?NewsID=611346&disdate=12/4/2010&advt=2

கோவையில் நேற்று தொடங்கிய செல்லப்பிராணிகள் கண்காட்சியில் இடம்பெற்றிருந்த அரிய வகை நாய்கள், வெளிநாட்டு பறவைகள் பெண்கள், குழந்தைகளை வெகுவாக கவர்ந்தன.

செல்லப்பிராணிகள் கண்காட்சி

கோவை அவினாசி ரோடு சுகுணா கல்யாண மண்டபத்தில் செல்லப்பிராணிகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி அமைத்து உள்ளது. இந்த கண்காட்சி நேற்று காலை தொடங்கியது. கண்காட்சி தொடக்க விழாவில் துணை மேயர் நா.கார்த்திக் மற்றும் கண்காட்சி நிர்வாகிகள் முருகன், ஸ்ரீனிவாசன் மற்றும் வெங்கடேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

செல்லப்பிராணிகள் கண்காட்சியில் மினியேச்சர் பின்செர், கிரெடென், சில்கிடேரியர், டாபர்மேன், டார்க்பில்லர், ஜெர்மென் ஷெப்பர்டு உள்பட 20-க்கு மேற்பட்ட அரிய வகை நாய்கள் இடம்பெற்று உள்ளன. இந்த நாய்களை செல்லப்பிராணிகள் வளர்ப்போர் மிகவும் ஆர்வத்துடன் பார்த்து அதன் விபரங்களை சேகரித்தனர்.

அரிய வகை நாய்கள்

கண்காட்சியில் இருக்கும் நாய்களில் மினியேச்சர் பின்செர் என்ற நாய் மிகவும் சிறிய அளவிலானது. 3 மாத வயது உடைய அந்த நாய்க்குட்டியின் உயரம் 9 அங்குலம் ஆகும். அதன் விலை ரூ.15 ஆயிரம். அந்த நாய்க்குட்டியை பெண்கள், குழந்தைகள் ஆசையோடு கையில் தூக்கி பார்த்து சென்றனர். அதற்கு நேர்மாறாக கண்காட்சியில் ராட்சத நாய் ஒன்று இருந்தது. அதன் பெயர் ராம்போ. அது கிரேடென் வகையை சேர்ந்தது.

அதன் உயரம் 4 அடி ஆகும். அது முன்னங்கால்களை தூக்கி மேலே எழுந்து நின்றால் 6 அடியை தொடுகிறது. அந்த அளவுக்கு ராட்சத உருவம் கொண்ட அந்த நாய் கண்காட்சிக்கு வருவோரை மிரட்டும் வகையில் நிற்கிறது.

வெளிநாட்டு பறவைகள்

அதேபோல் கண்காட்சியில் குழந்தைகளை மட்டுமின்றி அனைவரையும் கவரும் மற்றொரு அம்சமாக வெளிநாட்டு பறவைகள் இடம்பெற்றிருந்தன. ஆஸ்திரேலிய நாட்டை பிறப்பிடமாக கொண்ட காக்கட்டோ வகை பறவைகள் பார்ப்பதற்கு வெள்ளை கிளிபோல் காணப்படுகின்றன. மேலும் காக்டேல், மெக்கோவ், காதல் பறவைகள் என வெளிநாடுகளை சேர்ந்த பல பறவையினங்களும் இடம்பெற்று உள்ளன. அங்கு உள்ள பறவைகளின் விலை குறைந்தபட்சம் ரூ.1,500 முதல் ரூ.1 லட்சம் வரை ஆகும்.

மேலும் சுகுணா கல்யாண மண்படத்தில் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சியும் இடம்பெற்று உள்ளது. அங்கு அமைக்கப்பட்டு உள்ள 70 ஸ்டால்களில் அனைத்து வீட்டு உபயோக பொருட்களும் இடம்பெற்று உள்ளன.

இந்த கண்காட்சி நாளை (5-ந்தேதி) வரை நடக்கிறது. கண்காட்சி ஏற்பாடுகளை கோவை ஸ்பார்க் கிரியேஷன்ஸ் ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனம், ஒமேகா அட்வர்டைசிங் ஆகியவை செய்துள்ளன.