Pages

Monday, December 13, 2010

குட்டி யானை மீட்பு

சிறுமுகை வனப்பகுதியில் பிறந்த சில நிமிடங்களில் தாய் யானையை பிரிந்து தவித்த குட்டி யானை மீட்பு தாயுடன் சேர்க்க வனத்துறையினர் தீவிர முயற்சி


மேட்டுப்பாளையம், டிச.14-
http://dailythanthi.com/article.asp?NewsID=613547&disdate=12/14/2010&advt=1

பிறந்த சில நிமிடத்திலேயே தாய் யானையை பிரிந்த குட்டி யானையை வனத்துறையினர் மீட்டனர். அதை தாய் யானையிடம் சேர்க்க வனத்துறையினர் தீவிர முயற்சி எடுத்து வருகிறார்கள்.

காட்டு யானைகள் கூட்டம்

கோவை வனக்கோட்டத்திற்கு உட்பட்ட மேட்டுப்பாளையம், சிறுமுகை, காரமடை, பெரியநாயக்கன்பாளையம், மற்றும் அதனை சுற்றியுள்ள அடர்ந்த வனப்பகுதிகளில் காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக நடமாடி வருகின்றன.

மேட்டுப்பாளையம் அருகேயுள்ள ஓடந்துறை காப்பு காடு வனப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு காட்டு யானைகள் நீர்நிலைகளை தேடி கூட்டம், கூட்டமாக வந்தன.

குட்டியானை தவிப்பு

யானைக்கூட்டத்தில் இருந்த ஒரு பெண் யானை நேற்று அதிகாலை 5.30 மணிக்கு அழகான பெண் குட்டி யானையை ஈன்றெடுத்தது. அந்த பகுதியில் ஆட்கள் நடமாடும் சத்தம் கேட்டதால் காட்டு யானைகள் கூட்டத்துடன் இருந்த தாய் யானை ஈன்றெடுத்த குட்டி யானையை அங்கேயே விட்டு விட்டு வனப்பகுதிக்குள் சென்று விட்டது.

தாய் யானையை விட்டு பிரிந்த குட்டி யானை வனப்பகுதிக்குள் எங்கு செல்வது என்று தெரியாமல் அங்கும், இங்கும் அலைந்து நடமாட முடியாமல் தவித்துக் கொண்டிருந்தது. இதைப்பார்த்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிறுமுகை வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதிகாரிகள் விரைந்தனர்

இதையடுத்து வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இதற்கிடையில் குட்டி யானையை பார்க்க அங்கு திரண்ட பொதுமக்களை கலைந்து செல்லுமாறு வனத்துறையினர் கூறினார்கள்.

பின்னர் வனத்துறையினர் வனப்பகுதிக்குள் பல்வேறு குழுக்களாக பிரிந்து சென்று காட்டு யானைகள் கூட்டமாக நடமாடுகிறதா? அந்த கூட்டத்தில் தாய் யானை இருக்கிறதா என்பதை கண்டறிய தேடினார்கள். மாவட்ட வன அலுவலர் திருநாவுக்கரசு அந்த குட்டி யானையை பார்வையிட்டார். அதை தாய் யானையுடன் சேர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்து வனத்துறை ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

குட்டி யானை பராமரிப்பு

பிறந்த ஒரு சில மணி நேரமேயான குட்டி பெண் யானை தாய் யானையின் பராமரிப்பு இல்லாததால் மிகவும் சோர்ந்து காணப்பட்டது. இதனால் வன கால்நடை டாக்டர் மனோகரன் குட்டி யானைக்கு சிறிய ரப்பர் குழாய் மூலம் இளநீர் வழங்கினார். அதன் பிறகு இளநீருடன் குளுக்கோசும் கலந்து கொடுக்கப்பட்டது.

குட்டி யானையை தேடி காட்டு யானைகளுடன் தாய் யானையும் வரக்கூடும் என்பதால் குட்டி யானையை வனப்பகுதியிலேயே நிறுத்தி பராமரிப்பது என வனத்துறையினர் முடிவு செய்தனர். அப்படி தாய் யானை வராவிட்டால் வனத்துறையினர் வனப்பகுதிக்குள் சென்று யானை கூட்டங்களில் எது தாய் யானை என கண்டறிந்து அங்கு சென்று குட்டி யானையை விட்டு விடுவது எனவும் முடிவு செய்தனர்.

இந்த 2 வழிமுறைகளிலும் குட்டி யானையை தாய் யானையுடன் சேர்க்க முடியாவிட்டால் முதுமலை அல்லது டாப்சிலிப் முகாமுக்கு கொண்டு சென்று விடுவது என்றும் வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.