Pages

Thursday, December 9, 2010

செல்ல பிராணிகளுக்கு சென்னையில் சுடுகாடு

பதிவு செய்த நாள் 12/9/2010 2:29:51 PM
http://dinakaran.com/highdetail.aspx?id=23099&id1=13

சென்னை: நாய், பூனை, பசு, குதிரை.. எத்தனையோ செல்லப் பிராணிகள். குடும்பத்தில் ஒன்றாகவே வளர்ந்து வரும் இவற்றின் மறைவு மிகவும் துக்கமானது. உடலை புதைக்க இடம் தேடி அலைவது கொடுமையானது. ஊருக்கு ஒதுக்குப்புறத்தில், ஆற்றோரமாக, வீட்டின் கொல்லையில் என்று கிடைக்கிற இடத்தில் புதைப்பார்கள். சென்னை போன்ற இடங்களில் வசிப்பதற்கே இடமில்லை. இதில் தோப்பாவது, கொல்லையாவது.

வெளிநாடுகளில் பொதுவான கல்லறையில் செல்லப் பிராணிகளுக்கு என தனி இடம் ஒதுக்கப்பட்டிருக்கும். பெங்களூர் உள்பட சில நகரங்களிலும் இதுபோல இருக்கிறது. சென்னை மயிலாப்பூரில் செல்லப் பிராணிகளுக்கான தனி சுடுகாட்டை அமைக்க முன்வந்திருக்கிறது மெட்ராஸ் கேனைன் கிளப் (எம்.சி.சி). 

இதற்காக சென்னை மாநகராட்சி 2.5 கிரவுண்டு நிலம் வழங்கியுள்ளது. மின்சார தகன வசதி ஏற்பட உள்ள இதற்கு ரூ.40 லட்சம் வரை செலவாகும் என்று கணக்கிடப்பட்டு நிதி திரட்டும் வேலையை எம்சிசி கிளப் தொடங்கி உள்ளது. இடுகாடு செயல்பட துவங்கியதும் ப்ளூ கிராஸ் நிறுவனம் இதன் நிர்வாக பணிகளை மேற்கொள்ளும். பிராணிகள் தகனத்துக்கு குறைந்த கட்டணமே வசூலிக்கப்பட உள்ளது. தெருநாய்கள் கட்டணமின்றி தகனம் செய்யப்படும்.

இதுபற்றி எம்சிசி நிறுவனர் சுதர்சன் கூறுகையில், ‘‘சுற்றுச்சூழல் மாசுபாட்டை தவிர்க்கவும் செல்லப்பிராணிகளுக்கு மரியாதை செலுத்தும் வகையிலும் அவற்றின் இறப்பை நினைவுகூரும் வகையிலும் சென்னையில் முதல்முறையாக பிரத்யேக இடுகாடு அமைக்கப்படுகிறது. வரவேற்பை பொருத்து நகரின் மற்ற பகுதிகளிலும் அமைக்கப்படும். வேப்பேரி கால்நடை மருத்துவமனையில் இறக்கும் விலங்குகள் மாதவரத்தில் பெரிய குழி தோண்டி புதைக்கப்பட்டு வருகின்றன. அவையும் இனி இந்த இடுகாட்டில் எரியூட்டப்படும்’’ என்றார்.