Pages

Saturday, June 16, 2012

குரங்குகளிடம் குறும்பு செய்தால் ரூ.25 ஆயிரம் அபராதம்


http://www.dinamalar.com/News_Detail.asp?Id=488147
பதிவு செய்த நாள் : ஜூன் 17,2012,01:54 IST

குன்னூர்:"குன்னூர்-பர்லியாறு சாலையில், குரங்குகளுக்கு தீங்கு ஏற்படுத்தினால், ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்' என, வனத்துறை எச்சரித்துள்ளது.
வடக்கு வனக்கோட்டத்துக்கு உட்பட்ட பகுதி குன்னூர்-பர்லியாறு மலைப்பாதை. இந்த சாலை அடர்ந்த வனப்பகுதியில் செல்வதால், வனவிலங்குகள் அவ்வப்போது சாலையை கடக்கின்றன. சாலையில், குரங்குகள் கூட்டம் அதிகமாக உள்ளதால், இவற்றை காணும் சுற்றுலாப் பயணிகள் பலர், அவற்றுக்கு உணவு வழங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். குறிப்பாக, குன்னூர்-பர்லியாறு சாலையில் இருபக்கமும் உள்ள வனப்பகுதிகளில், தங்கள் வாகனங்களை நிறுத்தி புகைப்படங்களை எடுப்பதுடன், உட்கொள்ளும் பொருட்களின் மீதியை வீசி விட்டு செல்கின்றனர். தவிர, கொண்டு வரும் பிளாஸ்டிக் பொருட்களையும் விட்டுச் செல்வதால், இவற்றை ருசி பார்க்கும் விலங்குகள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

இதனால், குன்னூர்-பர்லியாறு சாலையில் செல்லும் சுற்றுலாப் பயணிகள், குரங்குகளுக்கு உணவளிக்கக் கூடாது என, வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். அறிவிப்பு பலகையிலும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், வன விலங்குகளுக்கு தீங்கு விளைவித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கும் வனத்துறை, சட்டத்தை கடுமையாக அமல்படுத்துவதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், இதுவரை குரங்குகளுக்கு உணவளிப்பவர்களுக்கு 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது, 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.a