http://www.dinamalar.com/News_Detail.asp?Id=484412
பதிவு செய்த நாள் : ஜூன் 11,2012,20:37 IST
கூடலூர்:முதுமலை புலிகள் காப்பக முகாமில் உள்ள, வளர்ப்பு யானைகளின் எடை, 100 முதல் 200 கிலோ வரை அதிகரித்துள்ளதாக, வனத்துறையினர் தெரிவித்தனர்.நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு யானைகள் முகாமில், மூன்று குட்டி யானைகள், இரண்டு "மக்னா' உள்ளிட்ட 25 யானைகள் உள்ளன. மூன்று மாதத்துக்கு ஒருமுறை, இவற்றின் எடை அளவிடப்படுகிறது. இதன் மூலம், யானைகளின் உடல்நிலை அறியப்பட்டு, அதற்கேற்ப உணவு முறையில் மாற்றம் மற்றும் சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.முதுமலை முகாம் யானைகளுக்கு, கடந்த ஜனவரி மாதம், எடை பார்க்கப்பட்டது. தற்போது, முதுமலை அருகே உள்ள தொரப்பள்ளியில் உள்ள எடை மேடையில், வளர்ப்பு யானைகளின் எடை சோதனையிடும் பணி நடைபெற்றது. குட்டி யானை மசினி, இரண்டு மக்னா யானைகள், நான்கு பெண் யானைகள் உள்ளிட்ட 16 யானைகளின் எடை சோதனையிடப்பட்டன. இதில், யானைகளின் உடல் எடை, 100 முதல் 200 கிலோ வரை அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது.