Pages

Saturday, June 9, 2012

வால்பாறையில் சிறுத்தை மர்மச்சாவு : சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அதிர்ச்சி


http://www.dinamalar.com/News_Detail.asp?Id=482519
பதிவு செய்த நாள் : ஜூன் 08,2012,22:52 IST


வால்பாறை: வால்பாறை டவுன் பகுதியில் மர்மமான முறையில் இறந்த சிறுத்தையை, பிரேதப் பரிசோதனை செய்ய முடியாமல், வனத்துறையினர் தவித்தனர். கோவை மாவட்டம், வால்பாறை டவுன் சிறுவர் பூங்கா பகுதியைச் சேர்ந்தவர், பெரிய அக்கா. இவரது வீட்டின் பின்பக்கம் உள்ள சமையல் அறையில், இரண்டு வயது பெண் சிறுத்தை மர்மமான முறையில் இறந்து கிடந்ததை, இப்பகுதி மக்கள் நேற்று காலை பார்த்தனர். இத்தகவலை வனத்துறைக்கு தெரிவித்தனர். வால்பாறை வனத்துறையினர் இறந்த சிறுத்தையை மீட்டு, அலுவலகத்துக்குக் கொண்டு சென்றனர்.

சம்பவம் குறித்து, பொதுமக்களிடம் வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மர்மமான முறையில் இறந்த சிறுத்தையை பரிசோதிக்க, வனத்துறையின் கால்நடை மருத்துவர் இல்லை. எனவே, வேறு மாவட்டத்தில் பணிபுரியும் வனத்துறை கால்நடை மருத்துவர் வரும்வரை, பிரேதப் பரிசோதனைக்காக காத்திருந்தனர். இதுகுறித்து, வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: பலியான சிறுத்தை, செந்நாய் விரட்டியோ அல்லது உடல் நலக்குறைவாலோ இறந்திருக்கலாம். கால்நடை மருத்துவர் வர தாமதமாகும் என்பதால், சிறுத்தையின் உடலை ஐஸ் கட்டி வைத்து, பத்திரமாக பாதுகாத்து வருகிறோம். இறந்த சிறுத்தை பிரேதப் பரிசோதனைக்கு பின், எரியூட்டப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர். வால்பாறையில் சமீப காலமாக, காட்டுப் புலி, யானை, சிறுத்தை, காட்டெருமை, கரடி, மான், சிங்கவால் குரங்கு போன்ற வனவிலங்குகள், மர்மமான முறையில் இறந்து வருவது, சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.