http://www.dinamalar.com/News_Detail.asp?Id=483798
பதிவு செய்த நாள் : ஜூன் 10,2012,23:49 IST
கோவை : கோவையில் வெட்டி வீழ்த்தப்படும் மரங்களால், அதில் வாழ்ந்த வந்த பறவை இனங்கள், ஆபத்து நிறைந்த "மொபைல்போன் டவர்'களிலும், உயர் கோபுர மின்கம்பங்களிலும் தஞ்சம் அடைந்து வருகின்றன. இதே நிலை தொடர்ந்தால், கோவையில் பறவைகளை காண்பது மிகவும் அரிதாக போய்விடும்.
அவினாசி ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு, மருதமலை ரோடு என, கோவையின் அனைத்து முக்கிய பகுதிகளும் மரங்கள் இல்லாமல், கட்டடங்களாய் காட்சியளிக்கின்றன. நகர வீதிகளில் புற்றீசல் போல் ஓடும் வாகனங்கள், தொழிற்சாலை புகை உள்ளிட்டவற்றால் காற்றும் பெருமளவு மாசடைந்துள்ளது. நிலம், நீர், காற்று என சுற்றுச்சூழல் மாசு அதிகரித்திருப்பதோடு, காற்றை சுத்திகரிக்கும் செயலை செய்யும் மரங்களும், அவற்றை நம்பி வாழ்ந்த பறவைகளும் மறைந்து வருகின்றன. இயற்கை கழிவுகளை அகற்றும் செயலையும், மரங்களின் விதைகளை பல இடங்களுக்கு பரப்பும் பணிகளையும் செய்த பறவைகள், கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்பட்டு வருகின்றன.
மரங்களிலுள்ள பூச்சிகளை உண்டு, பூச்சி இனங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தி வந்த, சிட்டு குருவி, தூக்கணாங் குருவி, கிளி, காடை, காகம் என நூற்றுக்கணக்கான சிறிய பறவை இனங்களை தற்போது காண அரிதாக போய்விட்டது. பறவைகளை பொறுத்தவரை, வசிக்க மரம் மற்றும் உணவு மட்டுமேதேவை. குருவி, காகம் உள்ளிட்ட சிறிய பறவைகளுக்கு சராசரி உயரமுள்ள மரங்களும், பருந்துகளுக்கு பல அடி உயரமுள்ள பனை மரமும் வேண்டும். கோவையில் பல இடங்களில் தற்போது மரங்களே இல்லாமல், வெறும் கட்டடங்கள் மட்டுமே உள்ளதால், பறவை இனங்கள் தங்க இடமில்லாமல் போய்விட்டது.
எஞ்சிய குறைந்தளவு பறவைகளும் ஆபத்தை உணராமல், "மொபைல்போன் டவர்'களிலும், உயர் கோபுர மின்கம்பங்களிலும் தஞ்சமடைய வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.
"ஓசை' அமைப்பின் தலைவர் காளிதாசன் கூறியதாவது:ஒரு மரத்தின் கிளை, உச்சி, தண்டு என அனைத்து பகுதிகளும் பலதரப்பட்ட பறவைகள் வாழ அடைக்கலமாக திகழ்கின்றன. சர்வதேச அளவில் 6,000 பறவை இனங்களும், குறிப்பாக இந்திய துணை கண்டத்தில் 1,250 பறவை இனங்களும் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளன. கடந்த பத்தாண்டுகளில் 150க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் அழிவை சந்தித்துள்ளதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. டோடோ, பனங்காடை, இருவரிக்காடை என 25க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் அழிவை சந்தித்துள்ளன. பறவை சப்தங்களுடன் வாழும் மனிதனின் மனநிலை அமைதியாக இருக்கும் என்றும், நகரத்தில் வாகன சப்தங்களுடன் வாழும் மனிதனின் மனநிலை அமைதியற்று இருக்கும் என்றும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.அதிகளவு எண்ணிக்கையில் காணப்பட்ட காகம், பருந்து ஆகியவை மிகவும் சொற்ப எண்ணிக்கையிலேயே தற்போது தென்படுகின்றன. பறவைகள் தானே என்று மெத்தனமாக இருந்தால், பிற்காலத்தில் பாதிப்பு மனிதர்களுக்கு தான்.இவ்வாறு, காளிதாசன் கூறினார்.