http://www.dinamalar.com/News_Detail.asp?Id=485870
பதிவு செய்த நாள் : ஜூன் 13,2012,22:49 IST
ஈரோடு: ஈரோட்டில் குடற்புழுக்கள் நோயால் இறக்கும் யானைகள் எண்ணிக்கை, அதிகரித்து வருகிறது. யானையின் இனம் காக்க, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஈரோடு மாவட்டத்தில், ஈரோடு டிவிஷனில் பர்கூர், காங்கேயம், அந்தியூர், எப்.எஸ்., பெருந்துறை, சென்னம்பட்டியிலும், சத்தியமங்கலம் டிவிஷனில் பவானிசாகர், ஹாசனூர், தாளவாடி, டி.என்.பாளையம் ஆகிய பகுதிகளிலும், காப்புக் காடுகள் உள்ளன. ஈரோடு மாவட்டத்தில், 2,276 சதுர கி.மீ., பரப்பளவில், 27.72 சதவீதம், வனப்பகுதி உள்ளது. மாநிலத்திலேயே, அதிக வனப் பரப்பு மற்றும் வன விலங்குகளை கொண்ட மாவட்டமாக, ஈரோடு மாவட்டம் திகழ்கிறது. மாநிலம் முழுவதும் உள்ள, 3,867 யானைகளில், 1,200க்கும் மேற்பட்ட யானைகள், ஈரோடு மாவட்ட வனப்பகுதியில் தான் உலா வருகின்றன. கடந்த சில ஆண்டுகளில் மட்டும், நூற்றுக் கணக்கான யானைகளை, ஈரோடு மாவட்ட வனப்பகுதி இழந்துள்ளது. இதில், குடற்புழுக்களால் இறந்த யானைகளின் எண்ணிக்கையே அதிகம். உரிய மருத்துவப் பரிசோதனை இல்லாமல், வனத்துக்குள் கால்நடை மேய்ப்பதால் பரவும் ஒட்டுண்ணியால், ஈரோடு வனப்பகுதியில், யானை இனமே முற்றிலும் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மண்டல வனப் பாதுகாவலர் அருண் கூறியதாவது: கால்நடைகளை உரிய மருத்துவ பரிசோதனை செய்யாமல், வனத்துக்குள் மேய விடுவதால், கால்நடைகளின் சாணம் மூலம், பாரசைட் என்ற ஒட்டுண்ணி பரவுகிறது. இந்த ஒட்டுண்ணி, வன விலங்குகளின் உடலுக்குள் பரவி, அவற்றின் இறப்புக்கு காரணமாகிறது. சத்தியமங்கலம், மாக்காம்பாளையம் வனப் பகுதியில், சில தினத்துக்கு முன் இறந்த யானையின் உடலை, பிரேத பரிசோதனை செய்ததில், வயிற்றில் ஆயிரக்கணக்கான பாரசைட் புழுக்கள் இருந்தன. இந்த ஒட்டுண்ணி, யானையின் செரிமானத்தை குறைத்து, யானைக்கு, குடற்புண் ஏற்பட காரணமாகி உள்ளது. வனத் துறையினரின் வேண்டுகோளை ஏற்காமல், அத்துமீறி வனத்துக்குள் கால்நடையை மேய்ப்பதால், வன உயிர்கள் இறக்க நேர்கிறது. வனம் மற்றும் வன விலங்குகளைக் காக்க மக்களிடையே விழிப்புணர்வும், இரக்க குணமும் தேவை. இவ்வாறு அருண் கூறினார்.