Pages

Wednesday, January 25, 2012

ஜல்லிக்கட்டை உடனே நிறுத்தணுமாம்..அயர்லாந்து அமைப்பு எச்சரிக்கை


புதன்கிழமை, ஜனவரி 25, 2012, 17:49 [IST]
http://tamil.oneindia.in/news/2012/01/25/world-ireland-animal-rights-group-warns-india-aid0180.html

டப்ளின்: தமிழகத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு விளையாட்டை உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் ஜல்லிக்கட்டுக்கு எதிராக பிரச்சாரத்தில் ஈடுபடப்போவதாக அயர்லாந்து நாட்டு விலங்குகள் உரிமை அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து விலங்குகள் நல அமைப்பான 'பீட்டா' வழக்கு தொடுத்தது. சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை அளித்த இடைக்கால தீர்ப்பின் பேரில் சமீபத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. இதில் கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்பட்டன.

இந்த நிலையில் அயர்லாந்தைச் சேர்ந்த விலங்குகள் உரிமைகள் அமைப்பு (ஏ.ஆர்.ஏ.என்) ஜல்லிக்கட்டுக்கு கடும் கண்டனம் தெரிவித்து மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் சுபோத் கான்ட் சகாய்க்கு கடிதம் அனுப்பி உள்ளது.

அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது,

விலங்குகளை மதிப்புடன் நடத்துவதில் இந்தியா முன்னணியில் உள்ளது. எனினும் ஜல்லிக்கட்டு விளையாட்டில் அடித்தல், குத்துதல், வாலைத் திருகுதல், இழுத்தல், கொம்புகளை உடைத்தல் உள்ளிட்ட செயல்களும், நிகழ்ச்சிகளுக்கு முன்பாக காளைகளுக்கு வலுக்கட்டாயமாக சாராயம் குடிக்க வைப்பதும் நடக்கின்றது.

காளைகளை கொடுமைப்படுத்தும் நிகழ்ச்சியான ஜல்லிக்கட்டுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அழகான இந்தியாவில் ஒரு மாநிலத்தில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போன்ற விளையாட்டால் நாட்டின் அழகு கெட்டுப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு என்பது காளைகளுக்கு மட்டுமல்ல மனிதர்களுக்கும், பாதிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது. ஜல்லிக்கட்டு போன்ற கொடுமையான செயல்களுக்கு இந்திய அரசு உடனடியாக தடை விதிக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்தியாவிற்கு சுற்றுலா வரும் வெளிநாட்டு பயணிகளிடம் ஜல்லிக்கட்டை எதிர்த்து பிரச்சாரம் செய்து, இந்தியாவை புறக்கணிக்குமாறு வலியுறுத்துவோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.