Pages

Wednesday, January 18, 2012

நல்ல பாம்பின் உடலில் புற்று நோய் கட்டி அகற்றம் : கோவையில் சாதனை


பதிவு செய்த நாள் : ஜனவரி 17,2012,23:51 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=387563

கோவை: இந்தியாவில் முதல் முறையாக, ஒரு விஷப்பாம்பின் உடலில் ஏற்பட்ட புற்றுநோய் கட்டியை, ஒரு மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து, வெற்றிகரமாக அகற்றி சாதனை புரிந்துள்ளனர், கோவை உயிரியல் பூங்கா மருத்துவக் குழுவினர். கோவை மாநகராட்சி உயிரியல் பூங்காவில், 20 எண்ணிக்கையில் உள்ள ஐந்து வகையான பாம்புகள், பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதில், ஐந்து வயது, நல்ல பாம்பு ஒன்றின் வயிறு, கடந்த சில நாட்களாக, சற்று உப்பலாக இருந்ததை, பூங்கா ஊழியர்கள் கவனித்தனர். இது குறித்து, மாநகராட்சி கால்நடை டாக்டர் அசோகனிடம் தெரிவித்தனர். பரிசோதித்ததில், உப்பலான பகுதிகள் அனைத்தும், புற்றுநோய் கட்டிகள் என, அவர் கண்டறிந்தார். உயிரியல் பூங்காவில் உள்ள மருத்துவ உபகரணங்களின் உதவியுடன், முதலில் பாம்பின் வயிற்றில் இருந்த, பெரிய கட்டியை அகற்றினார். அறுவை சிகிச்சைக்குப் பின், தற்போது பாம்பு நலமுடன் உள்ளது.

டாக்டர் அசோகன் கூறியதாவது: இந்த ஆண் பாம்பின் வயிறு, வால், மார்பு ஆகிய, மூன்று பகுதிகளில், கட்டிகள் இருந்தன. அமுக்கி பார்த்ததில், வேதனை தாங்க முடியாமல் ஆக்ரோஷமானது. கட்டிகள் நாளுக்கு நாள் பெரிதாகியதால், அவை புற்று நோய் கட்டிகள் என, உறுதியானது. பரவினால் பாம்பின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால், மயக்கமடையச் செய்து, வயிற்றில் இருந்த கட்டியை, வெட்டி எடுத்துள்ளோம். வெட்டி எடுக்கப்பட்ட, 100 கிராம் கட்டியை, பரிசோதனைக்காக அனுப்பியுள்ளோம். பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில், மீதமுள்ள இரு கட்டிகளுக்கும், சிகிச்சை அளிக்கப்படும். இந்த அறுவை சிகிச்சை மூலம், உடலின் பிற பகுதிகளுக்கும், கட்டி பரவுவதை தடுக்கலாம். கட்டியை அகற்றும் அறுவை சிகிச்சை, ஒரு மணி நேரம் நடந்தது. சிகிச்சைக்குப் பின், நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரை அளித்து வருகிறோம். கோழி முட்டையை உடைத்து, குழாய் மூலம், பாம்பின் வாய் வழியே செலுத்தி வருகிறோம். காயம் ஆறிய பின், தானாகவே சாப்பிடத் துவங்கும். அதன்பின், மீதமுள்ள இரண்டு கட்டிகளும் அகற்றப்படும். அவற்றை அகற்றி விட்டால், பாம்பின் உயிருக்கு எந்த ஆபத்தும் வராது. பாம்புக்கு, இது போன்ற புற்றுநோய் கட்டிகள் தோன்றுவது, மிகவும் அரிது. அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில், இதே போல் ஏராளமான அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகின்றன. ஆனால், இதுவரை எந்த அறுவை சிகிச்சையும், வெற்றி அடைந்ததில்லை. இந்தியாவில் ஒரு விஷப்பாம்புக்கு செய்யப்பட்டுள்ள, முதல் புற்றுநோய் அறுவை சிகிச்சை இது. இவ்வாறு, டாக்டர் கூறினார்.