Pages

Monday, January 30, 2012

ஜல்லிக்கட்டு: ஐகோர்ட் கிளையில் அறிக்கை தாக்கல்


பதிவு செய்த நாள் : ஜனவரி 30,2012,13:00 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=395949

மதுரை: ஜல்லிக்கட்டு நடத்தியது குறித்து மதுரை ஐகோர்ட் கிளையில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. விலங்குகள் நல வாரியம் சார்பில் வினோத் குமார் என்பவர், காளைகளை காட்சிபொருளாக வைக்கக்கூடாது என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே ஜல்லிக்கட்டை தடை செய்ய வேண்டும் என கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கோரி ராஜசேகரன் உள்ளிட்ட சிலர் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த மதுரை ஐகோர்ட் கிளை, ஜல்லிக்கட்டு நடத்த இடைக்கால அனுமதி வழங்கியதுடன், ஜல்லிக்கட்டு குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர். இந்த நிலையில் இந்த வழக்கு இன்று ஐகோர்ட் கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மதுரை மாவட்ட கலெக்டர் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த வழக்கில் மத்திய அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய வசதியாக வழக்கை வரும் பிப்ரவரி 23ம் தேதி வரை ஒத்திவைத்து நீதிபதிகள் சித்ரா லட்சுமணன், கருப்பையா கொண்ட பெஞ்ச் உத்தரவிட்டது

Wednesday, January 25, 2012

ஜல்லிக்கட்டை உடனே நிறுத்தணுமாம்..அயர்லாந்து அமைப்பு எச்சரிக்கை


புதன்கிழமை, ஜனவரி 25, 2012, 17:49 [IST]
http://tamil.oneindia.in/news/2012/01/25/world-ireland-animal-rights-group-warns-india-aid0180.html

டப்ளின்: தமிழகத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு விளையாட்டை உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் ஜல்லிக்கட்டுக்கு எதிராக பிரச்சாரத்தில் ஈடுபடப்போவதாக அயர்லாந்து நாட்டு விலங்குகள் உரிமை அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து விலங்குகள் நல அமைப்பான 'பீட்டா' வழக்கு தொடுத்தது. சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை அளித்த இடைக்கால தீர்ப்பின் பேரில் சமீபத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. இதில் கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்பட்டன.

இந்த நிலையில் அயர்லாந்தைச் சேர்ந்த விலங்குகள் உரிமைகள் அமைப்பு (ஏ.ஆர்.ஏ.என்) ஜல்லிக்கட்டுக்கு கடும் கண்டனம் தெரிவித்து மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் சுபோத் கான்ட் சகாய்க்கு கடிதம் அனுப்பி உள்ளது.

அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது,

விலங்குகளை மதிப்புடன் நடத்துவதில் இந்தியா முன்னணியில் உள்ளது. எனினும் ஜல்லிக்கட்டு விளையாட்டில் அடித்தல், குத்துதல், வாலைத் திருகுதல், இழுத்தல், கொம்புகளை உடைத்தல் உள்ளிட்ட செயல்களும், நிகழ்ச்சிகளுக்கு முன்பாக காளைகளுக்கு வலுக்கட்டாயமாக சாராயம் குடிக்க வைப்பதும் நடக்கின்றது.

காளைகளை கொடுமைப்படுத்தும் நிகழ்ச்சியான ஜல்லிக்கட்டுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அழகான இந்தியாவில் ஒரு மாநிலத்தில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போன்ற விளையாட்டால் நாட்டின் அழகு கெட்டுப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு என்பது காளைகளுக்கு மட்டுமல்ல மனிதர்களுக்கும், பாதிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது. ஜல்லிக்கட்டு போன்ற கொடுமையான செயல்களுக்கு இந்திய அரசு உடனடியாக தடை விதிக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்தியாவிற்கு சுற்றுலா வரும் வெளிநாட்டு பயணிகளிடம் ஜல்லிக்கட்டை எதிர்த்து பிரச்சாரம் செய்து, இந்தியாவை புறக்கணிக்குமாறு வலியுறுத்துவோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sunday, January 22, 2012

மான் வேட்டை 2 பேர் அதிரடி கைது மான் வேட்டை 2 பேர் அதிரடி கைது


பதிவு செய்த நாள் : ஜனவரி 19,2012,02:16 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=388703

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே மான் வேட்டையாடிய மூன்று பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

செங்கம் அடுத்த மேல்ராவந்தவாடி வன பகுதியில் வனச்சரகர் ஜெயரான், காப்பாளர்கள் ஏழுமலை, கோவிந்தன் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர். அப்போது, வனப்பகுதியில் மான் வேட்டையாடிய கட்டமடுவு ராஜாபாளையம் கிராமத்தை சேர்ந்த விஜயன் (34), பாண்டியன் (25), ஆகியோரை வனத்துறையினர் சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்களிடமிருந்து வேட்டையாடிய மான், முயல், காட்டுப்பூனை ஆகியவற்றை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து இரு நாட்டு துப்பாக்கிகளையும் வனத்துறையினர் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

Wednesday, January 18, 2012

நல்ல பாம்பின் உடலில் புற்று நோய் கட்டி அகற்றம் : கோவையில் சாதனை


பதிவு செய்த நாள் : ஜனவரி 17,2012,23:51 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=387563

கோவை: இந்தியாவில் முதல் முறையாக, ஒரு விஷப்பாம்பின் உடலில் ஏற்பட்ட புற்றுநோய் கட்டியை, ஒரு மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து, வெற்றிகரமாக அகற்றி சாதனை புரிந்துள்ளனர், கோவை உயிரியல் பூங்கா மருத்துவக் குழுவினர். கோவை மாநகராட்சி உயிரியல் பூங்காவில், 20 எண்ணிக்கையில் உள்ள ஐந்து வகையான பாம்புகள், பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதில், ஐந்து வயது, நல்ல பாம்பு ஒன்றின் வயிறு, கடந்த சில நாட்களாக, சற்று உப்பலாக இருந்ததை, பூங்கா ஊழியர்கள் கவனித்தனர். இது குறித்து, மாநகராட்சி கால்நடை டாக்டர் அசோகனிடம் தெரிவித்தனர். பரிசோதித்ததில், உப்பலான பகுதிகள் அனைத்தும், புற்றுநோய் கட்டிகள் என, அவர் கண்டறிந்தார். உயிரியல் பூங்காவில் உள்ள மருத்துவ உபகரணங்களின் உதவியுடன், முதலில் பாம்பின் வயிற்றில் இருந்த, பெரிய கட்டியை அகற்றினார். அறுவை சிகிச்சைக்குப் பின், தற்போது பாம்பு நலமுடன் உள்ளது.

டாக்டர் அசோகன் கூறியதாவது: இந்த ஆண் பாம்பின் வயிறு, வால், மார்பு ஆகிய, மூன்று பகுதிகளில், கட்டிகள் இருந்தன. அமுக்கி பார்த்ததில், வேதனை தாங்க முடியாமல் ஆக்ரோஷமானது. கட்டிகள் நாளுக்கு நாள் பெரிதாகியதால், அவை புற்று நோய் கட்டிகள் என, உறுதியானது. பரவினால் பாம்பின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால், மயக்கமடையச் செய்து, வயிற்றில் இருந்த கட்டியை, வெட்டி எடுத்துள்ளோம். வெட்டி எடுக்கப்பட்ட, 100 கிராம் கட்டியை, பரிசோதனைக்காக அனுப்பியுள்ளோம். பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில், மீதமுள்ள இரு கட்டிகளுக்கும், சிகிச்சை அளிக்கப்படும். இந்த அறுவை சிகிச்சை மூலம், உடலின் பிற பகுதிகளுக்கும், கட்டி பரவுவதை தடுக்கலாம். கட்டியை அகற்றும் அறுவை சிகிச்சை, ஒரு மணி நேரம் நடந்தது. சிகிச்சைக்குப் பின், நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரை அளித்து வருகிறோம். கோழி முட்டையை உடைத்து, குழாய் மூலம், பாம்பின் வாய் வழியே செலுத்தி வருகிறோம். காயம் ஆறிய பின், தானாகவே சாப்பிடத் துவங்கும். அதன்பின், மீதமுள்ள இரண்டு கட்டிகளும் அகற்றப்படும். அவற்றை அகற்றி விட்டால், பாம்பின் உயிருக்கு எந்த ஆபத்தும் வராது. பாம்புக்கு, இது போன்ற புற்றுநோய் கட்டிகள் தோன்றுவது, மிகவும் அரிது. அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில், இதே போல் ஏராளமான அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகின்றன. ஆனால், இதுவரை எந்த அறுவை சிகிச்சையும், வெற்றி அடைந்ததில்லை. இந்தியாவில் ஒரு விஷப்பாம்புக்கு செய்யப்பட்டுள்ள, முதல் புற்றுநோய் அறுவை சிகிச்சை இது. இவ்வாறு, டாக்டர் கூறினார்.

Tuesday, January 17, 2012

பாலமேடு ஜல்லிக்கட்டில் காளைகள் அடக்க முயன்ற 20 பேர் படுகாயம்


செவ்வாய்க்கிழமை, ஜனவரி 17, 2012, 8:13 [IST]
http://tamil.oneindia.in/news/2012/01/17/tamilnadu-20-competitors-injured-palamedu-jallikattu-aid0090.html

மதுரை: பாலமேட்டில் நடந்த ஜல்லிக்கட்டில் மாடுகள் முட்டி 20 பேர் படுகாயமடைந்தனர்.

நேற்று முன்தினம் மதுரை அவனியாபுரத்திலும், நேற்று பாலமேட்டில் உள்ள மஞ்சள்மலை ஆற்றுத்திடலிலும் ஜல்லிக்கட்டு நடந்தது.

ஜல்லிக்கட்டை காண அதிகாலை முதலே பார்வையாளர்கள் குவியத் தொடங்கினர். ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

ஜல்லிக்கட்டு தொடங்குவதற்கு முன்னதாக மதுரை மாவட்ட கலெக்டர் சகாயம் ஜல்லிக்கட்டு விதிமுறைகளை எடுத்து கூறினார். அவர் பேசுகையில், மதுரை உயர் நீதிமன்றக் கிளை உத்தரவுப்படி நிபந்தனைகளுக்குட்பட்டு இந்த ஜல்லிக்கட்டு நடக்கிறது. பல்வேறு சிரமங்களுக்கிடையே இந்த ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது. எனவே எந்த சூழ்நிலையிலும், எந்த விதத்திலும் மாடுகளை துன்புறுத்தக் கூடாது. வாலைப் பிடித்து மாடுகளை அடக்க முயற்சிக்க கூடாது. விதிகளை மீறி யாரும் செயல்பட்டால் மைதானத்தில் இருந்து வெளியேற்றப்படுவார்கள்' என்றார்.

காலை 9.45 மணியளவில் ஜல்லிக்கட்டு தொடங்கியது. முதலில் கோவில்களுக்கு சொந்தமான காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. மரியாதை நிமித்தமாக அந்த காளைகளை யாரும் பிடிக்கவில்லை.

அதைத் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்துவிடப்பட்டன. சீறிப்பாய்ந்து வந்த காளைகளை இளைஞர்கள் அடக்க முயன்றனர்.

மாடுகளை பிடித்த வீரர்களுக்கு உடனுக்குடன் பரிசுகள் வழங்கப்பட்டன. பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

காளைகளை அடக்க முயன்ற 20 பேர் படுகாயமடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவக்குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர். இதில் மிக பலத்த காயமடைந்த 8 பேர் ஆம்புலன்ஸ்களில் ஏற்றப்பட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Monday, January 16, 2012

மதுரையில் ஜல்லிக்கட்டு ஆரம்பம்.. அவனியாபுரத்தில் 42 பேர் படுகாயம்

http://tamil.oneindia.in/news/2012/01/16/tamilnadu-avaniyapuram-jallikattu-begins-42-injured-aid0090.html
திங்கள்கிழமை, ஜனவரி 16, 2012, 9:57


மதுரை: பல்வேறு தடைகளைத் தாண்டி, கடுமையான நிபந்தனைகளுடன் மதுரை அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு விழா கோலாகலமாகத் தொடங்கியது. காளையை அட‌க்க முய‌ன்ற 42 வீர‌ர்க‌ள் காய‌மடை‌ந்து‌ள்ளன‌ர்.

மதுரை மாவட்ட எஸ்.பி. அஸ்ரா கார்க் தலைமையில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இன்று மதுரை அவனியாபுரத்திலும் நாளை பாலமேட்டிலும் நாளை மறுநாள் அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்கின்றன.

இந்த வீர விளையாட்டைக் காண தமிழகம் முழுவதிலும் இருந்தும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் மதுரையில் குவிந்துள்ளனர்.

அவ‌னியாபுர‌த்‌தி‌ல் ஜ‌ல்‌லி‌க்க‌ட்டு போ‌ட்டி இ‌ன்று காலை தொட‌ங்‌கியது. இ‌ந்த போ‌ட்டி‌யி‌ல் ப‌ல்வேறு மாவ‌ட்ட‌ங்க‌ளி‌ல் இரு‌ந்து வ‌ந்த 280 காளைக‌ள் ப‌ங்கே‌ற்றன. காளை அட‌க்க 195 ‌வீர‌ர்க‌ள் கள‌த்‌தி‌ல் குதித்தனர்.

ஜ‌ல்‌லி‌க்க‌ட்டு போ‌ட்டியை மாவ‌ட்ட ‌‌ஆ‌ட்‌சிய‌ர் சகாய‌ம் நே‌‌ரி‌ல் க‌ண்கா‌ணி‌த்து வரு‌‌கிறா‌ர். வி‌திமுறைகளை ‌மீறு‌ம் ‌வீர‌ர்க‌ள் உடனடியாக போட‌்டி‌யி‌ல் இரு‌ந்து வெ‌ளியே‌ற்ற‌ப்ப‌டு‌கி‌‌ன்றன‌ர். காளை‌யி‌ன் வாலை ‌பிடி‌த்த ‌வீர‌ர் ஒருவரை போ‌ட்டி‌யி‌ல் இரு‌ந்து வெ‌ளியே‌ற்ற காவ‌ல்துறை‌யின‌ர் அ‌ந்த ‌வீர‌ர் ‌மீது வழ‌க்கு‌ப் ப‌திவு செ‌ய்தன‌ர்.

காளைகளை அட‌க்க முய‌ன்ற 42 பே‌ர் காய‌மடைந்தனர். உடனடியாக அவ‌ர்களு‌க்கு முதலுத‌வி அ‌ளி‌க்க‌ப்ப‌ட்டது. இ‌தி‌ல் படுகாயமடைந்த 12 பே‌ர் மரு‌த்துவமனை‌யி‌ல் அனும‌தி‌க்க‌ப்ப‌ட்டுள்ளன‌ர்.

இதைத் தொடர்ந்து நாளை பாலமே‌ட்டிலு‌ம், நாளை மறுநா‌ள் அல‌ங்காந‌ல்லூ‌ரிலு‌ம் ஜ‌ல்‌லி‌க்க‌ட்டு‌ப் போ‌ட்டிகள் நடைபெறு‌கின்றன. இ‌ந்தப் போட்டிகளில் ஆ‌யிர‌த்து‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட காளைக‌ள் ப‌ங்கே‌ற்‌கவுள்ளன.

விலங்குகள் நலவாரியம் தொடர்ந்த வழக்கால் ஜல்லிக்கட்டுக்கு சிக்கல் ஏற்பட்டது. ஆனாலும் உச்ச நீதிமன்றம் விதித்துள்ள 77 கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு 4 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது.

இந் நிலையில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகள் துவங்கிய நிலையில், விலங்குகள் நலவாரியம் ஜல்லிக்கட்டு நடத்த கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், 2011 ஜூலை 11ம் தேதி காளை களை பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகள் பட்டியலில் சேர்த்தது. இதன்படி காளைகளை துன்புறுத்தவோ, காட்சி பொருளாக பயன்படுத்தவோ கூடாது. இதனால் ஜல்லிக்கட்டில் காளைகளை அனுமதிக்க முடியாது என விலங்குகள் நலவாரியம் தெரிவித்தது.

இதையடுத்து ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் தமிழக அரசிடம் முறையிட்டனர். உச்ச நீதிமன்ற கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகளை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனாலும், விலங்குகள் நலவாரியம் ஜல்லிக்கட்டை நிறுத்தும் முயற்சியில் தீவிரம் காட்டியது.

இந்நிலையில் ஜல்லிக்கட்டு நடக்குமா, நடக்காதா என்ற கேள்வி எழுந்தது. காளைகள் குறித்து மத்திய அரசு பிறப்பித்துள்ள உத்தரவை ரத்து செய்யும்படி ஜல்லிக்கட்டு வீரவிளையாட்டு பேரவை தலைவர் அம்பலத்தரசு, மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் வழக்குத் தொடர்ந்தார். ஜல்லிக்கட்டை தடை செய்யக்கோரி சமூக ஆர்வலர் ராதாராஜன் மனுதாக்கல் செய்தார்.

தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் ஆஜராகி, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அரசின் நிலையை விளக்கினார். இதை தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடத்த அனுமதியளித்து, உயர் நீதிமன்றம் கடந்த 12ம் தேதி உத்தரவிட்டது. இதையடுத்து உச்ச நீதிமன்றம் விதித்துள்ள கட்டுப்பாடுகளுடன், உயிரிழப்பை தடுக்க மேலும் பல புதிய கட்டுப்பாடுகளையும் உயர் நீதீிமன்றம் விதித்தது. இதன்படி போட்டிகள் நடந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

திருச்சி அருகே ஜல்லிக்கட்டில் 10 பேர் காயம்:

அதே போல திருச்சி மாவட்டம் சூரியூர் பகுதியில் நிகழ்ந்த ஜல்லிக்கட்டில், 10 பேர் காயமடைந்தனர்.

Tuesday, January 10, 2012

நசுக்கிக் கொல்லும் யானைகள் 'ஓ.கே'.-காளைகளுக்கு மட்டும் தடை-பின்னணியில் மலையாள அதிகாரிகள்?

http://tamil.oneindia.in/news/2012/01/10/india-is-malayala-lobby-behind-ban-on-jallikattu-aid0091.html
செவ்வாய்க்கிழமை, ஜனவரி 10, 2012, 12:01 [IST]

டெல்லி: 1960ம் ஆண்டு வன விலங்குகள் சட்டத்தில் ஜல்லிக்கட்டுக் காளைகளை மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் சேர்த்துள்ளதன் பின்னணியில் மலையாள அதிகாரிகளின் சதி இருப்பதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழகத்தில் பாரம்பரியமாக பல நூறு ஆண்டுகளாக நடந்து வருவது ஜல்லிக்கட்டு. அக்காலத்தில் தென் தமிழகத்தின் வீரக் கதைகளை விளைவிக்கும் வித்தைக் களமாக விளங்கியது ஜல்லிக்கட்டு. பெண் எடுக்க விரும்பும் ஆண் மகன் தங்களது வீட்டுக் காளைகளை அடக்கி வென்றால்தான் அக்காலத்து தமிழர்கள் பெண் கொடுப்பார்களாம். அந்த அளவுக்கு தமிழர்களின் கலாச்சாரத்தோடு பின்னிப் பிணைந்திருப்பது இந்த வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு.

அப்படிப்பட் ஜல்லிக்கட்டை முழுமையாக அழித்தொழிக்க டெல்லி வட்டாரத்தில் மிகப் பெரிய அளவில் ஒரு பெரிய குரூப்பே தீவிர நடவடிக்கைகளில் இறங்கியிருப்பதாக கூறுகிறார்கள். அதன் ஒரு அங்கம்தான் ஜல்லிக்கட்டுக் காளைகளை வன விலங்குகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கொண்டு வந்தது என்கிறார்கள்.

மேலும் இப்படி காளைகளை சட்டத்தின் கீழ் கொண்டு வந்து ஜல்லிக்கட்டை முடக்க முயல்வது மலையாள அதிகாரிகள் சிலர் செய்த சதி வேலை என்றும் பேச்சு அடிபடுகிறது.

இதுகுறித்து ஜல்லிக்கட்டு பாதுகாப்புக் குழுவின் தலைவரான பேராசிரியர் அம்பலத்தரசு என்பவர் கூறுகையில், சிங்கம், புலி, சிறுத்தை போன்ற வன விலங்குகளைப் பாதுகாக்கும் நோக்கில்தான் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் இதில் போய் தற்போது காளைகளை சேர்த்துள்ளனர்.

அதேசமயம், கேரளாவில் ஆண்டுதோறும் யானைகளை வைத்து பல விளையாட்டுகளை நடத்துகின்றனர். யானைகளை பல்வேறு வகைகளில் கொடுமைப்படுத்துகின்றனர், சித்திரவதை செய்கின்றனர். யானை ஓட்டம் என்ற பெயரில் ரேஸே நடத்துகின்றனர்.

இதுபோன்ற ரேஸ் உள்ளிட்ட நிகழ்ச்சிகளின்போது யானைகள் தாக்கி பலர் கொல்லப்பட்டுள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். மக்களைத் தாக்குவதும், கடைகளை தாக்கி சூறையாடுவதும் என யானைகளால் கேரளாவில் ஏகப்பட்ட பாதிப்புகள் இன்று வரை தொடர் கதையாக உள்ளது.

ஆனால் இதுவரை கேரளாவில் நடந்து வரும் யானை ஓட்டம் உள்ளிட்டவற்றுக்கு மத்திய அரசு ஒரு ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை, தடுக்க முயலவில்லை, தடை செய்ய விரும்பவில்லை. காரணம் டெல்லியில் வலுவான பதவிகளில் உட்கார்ந்திருக்கும் மலையாள அதிகாரிகள்தான் என்றார்.

கேரள மக்களுக்கு யானை பாரம்பரியச் சின்னம் என்றால் தமிழர்களுக்கு ஜல்லிக்கட்டுதான் பாரம்பரிய அடையாளம். கேரளாவுக்கு ஒரு நியாயம், தமிழகத்திற்கு ஒரு நியாயம் என மத்திய அரசு நடந்து வருவதாகவும் அம்பலத்தரசு போன்றவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த விஷயத்திலும் கூட தமிழர்களை அவமதிக்கும் வகையில்தான் மத்திய அமைச்சர் ஜெயராம் ரமேஷ் போன்றவர்கள் நடந்து வருவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.

காளைகளை வன விலங்குகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் படு வேகமாக கொண்டு வந்த ஜெய்ராம் ரமேஷ், யானைகளை மட்டும் அதில் சேர்க்காமல் இருப்பதற்கு மலையாள லாபிதான் காரணம் என்கிறார்கள். உண்மையில் யானைதான் இந்தியாவின் பாரம்பரிய விலங்கு, அதைத்தான் நாம் உண்மையில் பாதுகாக்க வேண்டும். யானைகள் இந்தியா முழுவதும் பல்வேறு வகைகளில் சித்திரவதைக்குள்ளாக்கப்படுகின்றன. பிச்சை எடுக்க வைக்கிறார்கள், போட்டி என்ற பெயரில் கொடுமைப்படுத்துகிறார்கள். பலரது உயிரிழப்புகளுக்கும் யானை காரணமாக அமைகிறது. எனவே யானையைத்தான் பாதுகாக்க வேண்டும் என்பது அம்பலத்தரசுவின் வாதமாகும்.

ஜல்லிக்கட்டைக் காக்கவும், காளைகளை வன விலங்குகள் சட்டத்திலிருந்து மீட்டு கொண்டு வரவும் தமிழகம் தழுவிய மிகப் பெரிய போராட்டம் அவசியம், தமிழர்கள் தங்களது கலாச்சார, பாரம்பரிய விளையாட்டை அழிக்கும் சதியைப் புரிந்து கொண்டு ஒன்றுபட்டு குரல் கொடுத்து போராட வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

தற்போது மத்தியில் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக ஜெயந்தி நடராஜன் இருக்கிறார். எனவே நல்லது நடக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஊருக்கு பெருமை சேர்த்த ஜல்லிக்கட்டு காளைக்கு மணிமண்டபம்: மதுரையில் ஆச்சர்ய கிராமம்

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=381431
பதிவு செய்த நாள் : ஜனவரி 07,2012,23:33 IST


மதுரை:வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு பெயர் பெற்ற மதுரையில், ஒவ்வொரு கிராமத்திலும் ஒவ்வொருவரும் காளைகள் வளர்த்தாலும், ஜாதி பேதமின்றி அனைத்து மக்களும் சேர்ந்து ஜல்லிக்கட்டுக்காக காளைகள் வளர்க்கிறார்கள். அதுவும் ஊருக்கு பெருமை சேர்த்து மறைந்த காளைக்கு மணிமண்டபம் கட்டியிருக்கிறார்கள் என்றால் ஆச்சரியம்தானே.

அலங்காநல்லூரில் இருந்து பாலமேடு வழியாக 7 கி.மீ., தூரம் பயணித்தால் வரவேற்கிறது "பொந்துகம்பட்டி' கிராமம். இங்குள்ள முத்தாலம்மன் கோயிலுக்கு, ஊர் சார்பில் "கோயில் காளை' ஒன்று கம்பீரமாக வலம் வந்தது. திடீரென்று ஐந்தாண்டுகளுக்கு முன், இறந்துபோனது. ஊரே அழுதது. "எந்த ஜல்லிக்கட்டுக்கு போனாலும், பரிசு இல்லாமல் திரும்பி வராது. அப்படி நம்ம ஊருக்கு பெருமை சேர்த்த இந்த காளைக்கு, கோயிலுக்கு எதிரேயே நினைவுச் சின்னம் அமைக்கணும்,' என ஊர் மக்கள் கூடி முடிவெடுத்தனர்.சில லட்சம் ரூபாயில், அழகிய மணிமண்டபம் உருவானது. அதில் கம்பீரமாக காளை உட்கார்ந்து ஊரை காப்பது போல் சிலை வடிவமைக்கப்பட்டது. இன்றும் பாலமேடு ஜல்லிக்கட்டு நடக்கும் தினத்தன்று, இந்த கோயில் காளைக்கு விசேஷ பூஜைகள் உண்டு. இக்கோயிலுக்கு பல காளைகள் இரு(ற)ந்த போதும், இந்த காளைக்கு மட்டும் ஏன் இவ்வளவு முக்கியத்துவம்?

கவுன்சிலர் பெரியசாமி கூறியதாவது : அது என்னமோ தெரியலைங்க. மத்த காளைகளைவிட, இந்த காளை எல்லாரையும் ஈர்த்துச்சு. மக்கள் அதுமேல அன்பு வச்சாங்க. காளையும் அவுங்க மேல பாசமா இருந்துச்சு. ஊரில ஒருத்தரைகூட இது குத்தலைனா பார்த்துக்கோங்க. அதேசமயம், ஜல்லிக்கட்டுனா போதும், சும்மா... நின்னு விளையாடி, பரிசுகளை அள்ளிகிட்டு வரும். ஒரு ஊரில காளை இருந்துச்சுனா, அந்த ஊருக்கே அது பெருமை. இது பாரம்பரியமாக நடந்துட்டு வருது. அதனாலதான், இப்ப கோயில் காளை ஒன்றை வளர்த்துட்டு வர்றோம். வர்ற ஜல்லிக்கட்டுல முதன்முறையா விளையாட போகுது. எங்க ஊருக்கு பெருமை சேர்க்கப்போகுது, என்றார்.

Friday, January 6, 2012

ஆண் யானை பலி : தந்தங்கள் மீட்பு


http://www.dinamalar.com/News_Detail.asp?Id=380797
பதிவு செய்த நாள் : ஜனவரி 07,2012,00:19 IST

அந்தியூர்: ஈரோடு மாவட்டம், அத்தாணி வனச்சரகத்தில், வரக்கோம்பை வனப்பகுதியில், 45 வயது மதிக்கத்தக்க ஆண் யானை இறந்து கிடந்தது. அத்தாணி பாரஸ்டர் ராமலிங்கம் தலைமையில், நேற்று வன ஊழியர்கள் ரோந்து சென்றனர். வனத்துக்குள் துர்நாற்றம் வீசியது. அங்கு, ஆண் யானை இறந்து கிடந்தது. அந்தியூர் கால்நடை மருத்துவர் அர்ஜூனன், யானையை பிரேத பரிசோதனை செய்தார். வயது மூப்பின் காரணமாக யானை இறந்தது தெரியவந்தது. யானையிலிருந்து எடுக்கப்பட்ட, தலா ஐந்தடி நீளமுள்ள இரண்டு தந்தங்களை, வனத்துறையினர் மீட்டனர். கடந்த ஆறு மாதத்தில், பத்துக்கும் மேற்பட்ட யானைகள் இறந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது