Pages

Tuesday, December 13, 2011

முதுமலை யானைகள் சிறப்பு முகாம் இன்று ஆரம்பம்


http://www.dinamalar.com/News_Detail.asp?Id=367011
பதிவு செய்த நாள் : டிசம்பர் 13,2011,23:01 IST

மேட்டுப்பாளையம் : முதுமலை யானைகள் சிறப்பு முகாமுக்கு சென்ற 37 யானைகளுக்கும், மேட்டுப்பாளையம் சிறப்பு நலவாழ்வு முகாமில், மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. முதுமலை தெப்பக்காட்டில் கோவில் யானைகளுக்கு புத்துணர்வு சிறப்பு முகாம் இன்று துவங்குகிறது. தமிழகத்தில் பல்வேறு கோவில்களில் உள்ள யானைகளை, இம்முகாமுக்கு லாரிகளில் கொண்டு சென்றனர். மேட்டுப்பாளையம் வனத்துறை டிப்போவில், இந்து அறநிலையத்துறை மற்றும் வனத்துறை இணைந்து "சிறப்பு நலவாழ்வு முகாமை' அமைத்திருந்தது. முகாமுக்கு சென்று 37 யானைகளுக்கும் வனத்துறை கால்நடை டாக்டர் மனோகரன் தலைமையில் மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர். யானையுடன் வந்த பாகன்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இரவு ஓய்வுக்கு பின் அதிகாலை 4.50 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி வழியாக தெப்பக்காட்டுக்கு யானைகளை அனுப்பினர்.

இன்று துவக்கம்
யானைகள் புத்துணர்வு முகாம், முதுமலையில் இன்று துவக்கி, 48 நாட்களுக்கு நடத்தப்படுகின்றன. முதுமலையில், புத்துணர்வு முகாமில் பங்கேற்கும் யானைகளுக்கு, முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் அமீர் ஹாஜா தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. யானைகளின் எடை பார்க்கப்பட்டது. யானைகளை நோய் கிருமிகள் தாக்காதவாறு, முகாம் நுழைவு வாயிலில், கால்நடை டாக்டர் கலைவாணன் தலைமையில், "சோடியம்- பை - கார்பைட்' கலந்த நீர் தெளிக்கப்பட்டது. பாகன்கள், ஊழியர்களுக்கான அறைகள், சமையலறை, ஓய்வறை அமைக்கும் பணிகளும், சோலார் மின்வேலி அமைக்கும் பணியும், இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.

இந்து அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் தனபால் கூறுகையில், ""யானைகள் முகாம் துவக்க விழா, காலை 9.05 -10.00 மணிக்குள் நடக்கிறது. வனத்துறை அமைச்சர் பச்சைமால், இந்து அறநிலையத் துறை அமைச்சர் ஆனந்தன், இந்து அறநிலையத் துறை ஆணையர் சந்திரகுமார் பங்கேற்க உள்ளனர். 48 நாட்கள் நடக்கும் முகாமில், யானைகளுக்கு உணவு, மருந்துகள், புத்துணர்வு சிகிச்சைகள் வழங்கப்படும்'' என்றார்.