Pages

Thursday, December 29, 2011

குரங்கை காப்பாற்ற போராடிய சூளகிரி மக்களின் மனிதாபிமானம்

பதிவு செய்த நாள் : டிசம்பர் 30,2011,00:00 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=375899


ஓசூர்: சூளகிரி கோவிலில், குரங்கு ஒன்றின் தொண்டையில் தேங்காய் சிக்கியதால், உயிருக்கு போராடிய குரங்கை காப்பாற்ற, பக்தர்கள் சிகிச்சைக்கு எடுத்துச் சென்றனர். எனினும், சிகிச்சை பலனளிக்காமல் குரங்கு இறந்ததால், சோகமடைந்த பக்தர்கள், குரங்கின் உடலுக்கு மாலை அணிவித்து அடக்கம் செய்தனர்.

சூளகிரி அருகே, பஜார் தெருவில், செல்லாபிரியம்மன் மற்றும் மாரியம்மன் கோவில் உள்ளன. இந்த கோவில் வளாகத்தில், குரங்குகள் நடமாட்டம் அதிகளவில் காணப்படுகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்கள், பூஜையில் படைத்த, பழங்கள், தேங்காய் மற்றும் உணவு பண்டங்களை குரங்குக்கு வழங்குவர். நேற்று, வழக்கம் போல் கோவிலுக்கு வந்த பக்தர்கள், குரங்குக்கு, தேங்காய் வழங்கியுள்ளனர்; அவற்றை, குரங்குகள் எடுத்து சாப்பிட்டன. தேங்காய் சாப்பிட்ட ஒரு குரங்குக்கு, அது, தொண்டையில் சிக்கியதால், கீழே விழுந்து, கோவில் வளாகத்தில், துடிதுடித்து உயிருக்கு போராடியது. இதை பார்த்த மற்ற குரங்குகள், அதிர்ச்சியடைந்து சத்தம் போட்டன. இதனால், பக்தர்கள், உயிருக்கு போராடிய குரங்கை மீட்டு, காப்பாற்ற முயன்றனர். வாணியர் தெருவை சேர்ந்த சிவக்குமார் என்பவர், குளிர்பானம் வாங்கி வந்து குரங்கு வாயில் ஊற்றி, தனது மூச்சை அதன் வாயில் செலுத்தி காப்பாற்ற, பல்வேறு வகையில் முயற்சி செய்தார்.

குரங்கு மயக்கமடைந்ததால், கால்நடை மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். டாக்டர் சீனிவாசனும், உயிருக்கு போராடிய குரங்குக்கு ஊசி போட்டு காப்பாற்ற முயற்சி செய்தார். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல், சிறிது நேரத்தில் குரங்கு இறந்தது. இதனால் சோகமடைந்த பக்தர்கள், இறந்த குரங்கின் உடலுக்கு மாலை அணிவித்து, சிறப்பு பூஜைகள் செய்தனர். அதன்பின், கோவிலுக்கு அருகே உள்ள நிலத்தில், இறந்த குரங்கின் உடலை அடக்கம் செய்தனர். இச்சம்பவம், சூளகிரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஜல்லிக்கட்டுக்கு 77 நிபந்தனைகள்-ஒரு வீரர் 4 காளைகளை மட்டுமே அடக்கலாம்: கலெக்டர் அறிவிப்பு

வியாழக்கிழமை, டிசம்பர் 29, 2011, 17:32 [IST]
http://tamil.oneindia.in/news/2011/12/29/tamilnadu-77-conditions-conducting-jallikattu-aid0091.html

மதுரை: உலகப் புகழ் பெற்ற ஜல்லிக்கட்டுக்கு மதுரை மற்றும் சுற்று வட்டார மக்கள் தயாராகி வரும் நிலையில், ஜல்லிக்கட்டு நடத்த 77 நிபந்தனைகளை மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் சகாயம் அறிவித்துள்ளார். இந்த நிபந்தனைகளுக்கு மாடு பிடி வீரர்கள் கடும் அதிருப்தியும், எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் உள்ள அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் பிரசித்தி பெற்றவையாகும்.அதிலும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலகப் புகழ் பெற்றது. தற்போது உச்சநீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டுக்குத் தடை கோரி வழக்கு நிலுவையில் உள்ளது. இடைக்கால நிவாரணமாக பல்வேறு நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டை நடத்த உச்சநீதிமன்றம் அனுமதித்துள்ளது.

அதன்படி வருகிற ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு 77 நிபந்தனைகளை, உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் சகாயம் இன்று அறிவித்தார்.

நிபந்தனைகள் மிகக் கடுமையாகவே உள்ளன. அவற்றில் சில...

- ஜல்லிக்கட்டு நடத்துவோர் ரூ. 2 லட்சம் டெபாசிட் தொகை கட்ட வேண்டும்.
- புளூகிராசில் சான்றிதழ் வாங்க வேண்டும்.
- 4 காளைகளுக்கு மேல் ஒரு வீரர் அடக்கக் கூடாது.
- ஒரே நேரத்தில் எல்லா காளைகளையும் அவிழ்த்துவிடக் கூடாது.
- கொம்புகள் கூர்மையாக இருந்தால் மரக்கவசம் அணிய வேண்டும்
- போதை வஸ்துகளை காளைகளுக்கு கொடுக்கக் கூடாது
- காளையை அடக்கும் வீரர்கள் வருவாய் துறையினரிடம் பதிவு சான்றிதழ் பெற வேண்டும்
- மாடு பிடி வீரர்கள் மதுபானங்கள் அருந்திருக்கக் கூடாது
- மைதானத்தில் ஆம்புலன்ஸ் இருக்க வேண்டும், மருத்துவக் குழு இருக்க வேண்டும்
- வீரர்கள் அனைவரும் சீருடை அணிந்திருக்க வேண்டும்
- போட்டிகள் முழுவதும் வீடியோ பதிவு செய்ய வேண்டும்
- குடிநீர் வசதி, பார்வையாளர்களுக்கு போதுமான வசதிகளை செய்ய வேண்டும்.

இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள மாடு பிடிவீரர்கள் இந்த நிபந்தனைகள் மிகக் கடுமையானவை.மேலும் பல கிராமங்களில் இந்த நிபந்தனைகளில் உள்ள பல அம்சங்களைக் கடைப்பிடிக்க போதுமான வசதிகள் இல்லை. எனவே இவற்றைப் பூர்த்தி செய்வது மிகக் கடினமானது என்று கூறியுள்ளனர்.

Saturday, December 17, 2011

கவுண்டம்பாளையத்தில் காகங்களிடம் சிக்கிய ஆந்தை


http://www.dinamalar.com/News_Detail.asp?Id=367715
பதிவு செய்த நாள் : டிசம்பர் 14,2011,23:20 IST

பெ.நா.பாளையம் : கவுண்டம்பாளையத்தில் காகங்களிடம் சிக்கிய ஆந்தை வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

கவுண்டம்பாளையம் சரவணா நகர் அருகே அத்வானி நகரில் உள்ள மரத்தில் இருந்த ஆந்தையை அப்பகுதியில் இருந்த 10க்கும் மேற்பட்ட காகங்கள் துரத்தின. இதில், காயமடைந்த ஆந்தையை அப்பகுதியில் வசிக்கும் செந்தில்
குமார் மற்றும் லெவன் ஸ்டார் கிரிக்கட் குழுவை சேர்ந்த இளைஞர்கள் காப்பாற்றினர். ஆந்தையை மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள கோவை மாவட்ட வன அலுவலகத்தில் ஒப்படைத்தனர். முதல் உதவி அளிக்கப்பட்டு, தற்காலிகமாக கூண்டில் அடைக்கப்பட்ட ஆந்தை அடர்ந்த காட்டுக்குள் விடப்படும் என, வனத்துறையினர் தெரிவித்தனர்.

Tuesday, December 13, 2011

முதுமலை யானைகள் சிறப்பு முகாம் இன்று ஆரம்பம்


http://www.dinamalar.com/News_Detail.asp?Id=367011
பதிவு செய்த நாள் : டிசம்பர் 13,2011,23:01 IST

மேட்டுப்பாளையம் : முதுமலை யானைகள் சிறப்பு முகாமுக்கு சென்ற 37 யானைகளுக்கும், மேட்டுப்பாளையம் சிறப்பு நலவாழ்வு முகாமில், மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. முதுமலை தெப்பக்காட்டில் கோவில் யானைகளுக்கு புத்துணர்வு சிறப்பு முகாம் இன்று துவங்குகிறது. தமிழகத்தில் பல்வேறு கோவில்களில் உள்ள யானைகளை, இம்முகாமுக்கு லாரிகளில் கொண்டு சென்றனர். மேட்டுப்பாளையம் வனத்துறை டிப்போவில், இந்து அறநிலையத்துறை மற்றும் வனத்துறை இணைந்து "சிறப்பு நலவாழ்வு முகாமை' அமைத்திருந்தது. முகாமுக்கு சென்று 37 யானைகளுக்கும் வனத்துறை கால்நடை டாக்டர் மனோகரன் தலைமையில் மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர். யானையுடன் வந்த பாகன்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இரவு ஓய்வுக்கு பின் அதிகாலை 4.50 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி வழியாக தெப்பக்காட்டுக்கு யானைகளை அனுப்பினர்.

இன்று துவக்கம்
யானைகள் புத்துணர்வு முகாம், முதுமலையில் இன்று துவக்கி, 48 நாட்களுக்கு நடத்தப்படுகின்றன. முதுமலையில், புத்துணர்வு முகாமில் பங்கேற்கும் யானைகளுக்கு, முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் அமீர் ஹாஜா தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. யானைகளின் எடை பார்க்கப்பட்டது. யானைகளை நோய் கிருமிகள் தாக்காதவாறு, முகாம் நுழைவு வாயிலில், கால்நடை டாக்டர் கலைவாணன் தலைமையில், "சோடியம்- பை - கார்பைட்' கலந்த நீர் தெளிக்கப்பட்டது. பாகன்கள், ஊழியர்களுக்கான அறைகள், சமையலறை, ஓய்வறை அமைக்கும் பணிகளும், சோலார் மின்வேலி அமைக்கும் பணியும், இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.

இந்து அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் தனபால் கூறுகையில், ""யானைகள் முகாம் துவக்க விழா, காலை 9.05 -10.00 மணிக்குள் நடக்கிறது. வனத்துறை அமைச்சர் பச்சைமால், இந்து அறநிலையத் துறை அமைச்சர் ஆனந்தன், இந்து அறநிலையத் துறை ஆணையர் சந்திரகுமார் பங்கேற்க உள்ளனர். 48 நாட்கள் நடக்கும் முகாமில், யானைகளுக்கு உணவு, மருந்துகள், புத்துணர்வு சிகிச்சைகள் வழங்கப்படும்'' என்றார்.

ஜல்லிக்கட்டு தடைக்கு காரணம் என்ன?


பதிவு செய்த நாள் : டிசம்பர் 13,2011,23:13 IST
http://www.dinamalar.com/News_detail_ban_exclu.asp?Id=367026

"முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தை போலவே, மிருக வதை சட்டத்தின் கீழ் யானைகளை சேர்க்காமல், ஜல்லிக்கட்டு காளைக்கு மட்டும் தடை விதித்ததற்கு, கேரளா மீதான பாசம் தான் காரணம்' என, மத்திய அரசின் மீது, தமிழ்நாடு ஜல்லிக்கட்டுக் குழு பரபரப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

தமிழ்நாடு ஜல்லிக்கட்டுக் குழு மாநில நிறுவனர் அம்பலத்தரசு கூறியதாவது: கடந்த 1960ம் ஆண்டு, மிருக வதைச் சட்டத்தின்கீழ், சிங்கம், புலி, கரடி, சிறுத்தை, குரங்கு போன்ற விலங்குகளை, காட்சிப் பொருளாக அடைத்து வைத்து வித்தை காட்டுவதை, மத்திய அரசு தடை செய்தது. தற்போது,
இச்சட்டத்தை விரிவு செய்து, "ஜல்லிக்கட்டில் காளைகள் வதை செய்யப்படுகின்றன' என, உண்மைக்கு புறம்பாகக் கூறி, ஜல்லிக்கட்டு காளைகளையும், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் இப்பட்டியலில் சேர்த்துள்ளார். அதன்படி, ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து, 2011 ஜூலை 11ம் தேதி, ஆணை பிறப்பித்துள்ளார். கேரளாவில், வெளி மாநில, வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில், யானைகளை வைத்து, பல்வேறு வித்தைகள் காட்டப்படுகின்றன. 

சாகச நிகழ்ச்சிகளின்போது, யானைகளுக்கு மதம் பிடித்து, பார்வையாளர்கள், பாகன்களை துதிக்கையால் தூக்கி எறிந்து, கால்களால் மிதித்து
, துவம்சம் செய்வது தொடர் கதையாக இருக்கிறது. யானைகளை காக்க, ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடாத மத்திய அரசு, தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை மட்டும் தடை செய்வதில், மிகுந்த ஆர்வம் காட்டுகிறது. 

கேரள மாநிலத்தின் கலாசாரத்தைக் காக்க, மத்திய அரசின் பல்வேறு துறைகளில் உயர் அதிகாரிகளாக உள்ள கேரளாவைச் சேர்ந்தவர்கள், யானைகளை இப்பட்டியலில் சேர்க்க, கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

அதன் காரணமாகவே, யானைகளை இப்பட்டியலில் சேர்க்கவில்லை. ஜல்லிக்கட்டு காளைகளை மட்டும் இப்பட்டியலில் சேர்த்தது, மத்திய அரசின் கேரள பாசத்தை, அப்பட்டமாக படம் பிடித்து காட்டுகிறது. 

முல்லைப் பெரியாறு விவகாரத்தில், ஒரு தாய் மக்களாக ஒன்று திரண்டு போராடும் தமிழக மக்கள், ஜல்லிக்கட்டு விஷயத்திலும், மத்திய அரசுக்கு நமது எதிர்ப்பை பலமாக பதிவு செய்து, ஜல்லிக்கட்டு விளையாட்டை மீட்க வேண்டும். இவ்வாறு, அம்பலத்தரசு கூறினார்.

Saturday, December 10, 2011

ஏரிக்கரையில் அனுமதியின்றி படப்பிடிப்பு பறவைகளை விரட்டியடித்து அடாவடி

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=365309
பதிவு செய்த நாள் : டிசம்பர் 10,2011,23:22 IST

புதுச்சேரி : ஏரிப் பகுதியில், சரமாரியாக குண்டுகளை வெடிக்கச் செய்து பறவைகளை விரட்டியடித்து, சினிமா படப்பிடிப்புக் குழுவினர் நடத்திய அடாவடி, இயற்கை ஆர்வலர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ஒன்றியம், கூனிமேடு அடுத்த கழுவெளி ஏரியில், மிகப் பெரிய உப்புநீர் கழிமுகப் பகுதி அமைந்துள்ளது. கோடியக்கரை மற்றும் இலங்கைக்கு ஆண்டுதோறும் வலசை செல்லும் பறவை இனங்கள், கழுவெளியில் இளைப்பாறி விட்டு செல்லுகின்றன. கழுவேலி ஏரியில் 120க்கும் மேற்பட்ட பறவையினங்கள் லட்சக்கணக்கில் முகாமிட்டுள்ளன. பறவைகள் வரத்து அதிகரித்துள்ளதால், வனச் சரணாலயமாக அறிவிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில், கழுவெளி பகுதிக்குள் நேற்று காலை 7 மணிக்கு அத்துமீறி நுழைந்த, "வாடாமலர்' சினிமா படப்பிடிப்புக் குழுவினர், 2 கி.மீ., தொலைவிற்கு போக்குவரத்தை தடை செய்தனர். அந்த பகுதிக்குச் சென்ற உள்ளூர் மக்களிடம் கெடுபிடி செய்து விரட்டியடித்தனர். ஏரியைச் சுற்றியுள்ள பகுதிகளில் சண்டைக் காட்சிகளை படப்பிடிப்புக் குழுவினர் படமாக்கினர். இதற்காக அடுத்தடுத்து குண்டுகள் வெடிக்கச் செய்யப்பட்டன. அமைதி குலைந்ததால், அதிர்ச்சியில் கழுவெளியில் முகாமிட்டிருந்த கூழைக்கடா, பூநாரை, கொக்கு, கடற்காகங்கள், உள்ளான், மடையான் உள்ளிட்ட பறவைகள் அந்த பகுதியை விட்டு பறந்தோடின.

இதையறிந்த பறவை ஆராய்ச்சியாளர்கள், இயற்கை ஆர்வலர்கள் அங்கு திரண்டனர். "இந்த பகுதியில் பறவைகள் உள்ளதால், குண்டு வெடிக்காமல் படப்பிடிப்பு நடத்த வேண்டும்' என கேட்டுக் கொண்டனர். ஆனால், சினிமா படப்பிடிப்பு குழுவினர், எதையும் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. பறவை ஆராய்ச்சியாளர்களுக்கு மிரட்டல் விடுத்து, சினிமா படப்பிடிப்பு குழுவினர் விரட்டியடித்தனர். செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்களையும் அந்த கும்பல் விட்டு வைக்கவில்லை.

"நாங்கள் இப்படித்தான் படப்பிடிப்பு நடத்துவோம்... எங்களை யாரும் எதுவும் செய்ய முடியாது... எடுத்த படத்தை டெலிட் செய்து விடு...' என, படத்தின் டைரக்டர் ஆனந்தராஜன், மிரட்டல் விடுத்து கேமராவை பறிக்க முயன்றார்.
இன்னொரு கும்பல், "பத்திரிகையாளர்களை வீடியோ எடுத்ததுடன், போட்டோகிராபரிடம் இருந்த அடையாள அட்டையை பிடுங்கிச் சென்றது. இதை கேள்விப்பட்ட நடிகர் நந்தா, "இப்பகுதியில் பறவைகள் இருப்பது எங்களுக்குத் தெரியாது. குண்டுகள் வெடிக்காமல் படப்பிடிப்பு நடத்துகிறோம். டைரக்டர் செய்த செயலுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்' எனக் கூறி, போட்டோகிராபரிடம் பிடுங்கப்பட்ட அடையாள அட்டையை மீண்டும் ஒப்படைத்தார். அதேசமயம், மீண்டும் மீண்டும் குண்டுகளை வெடித்து, சினிமா படப்பிடிப்பு தொடர்ந்து நடத்தப்பட்டது. அதிர்ச்சியடைந்த பறவை ஆராய்ச்சியாளர்கள், மரக்காணம் போலீஸ் ஸ்டேஷனிலும், வனத்துறைக்கும் தகவல் கொடுத்தனர். விசாரணை நடத்திய மரக்காணம் போலீசார், அனுமதி பெறாததால் படப்பிடிப்பை தடுத்து நிறுத்தினர்.

வனத்துறை அதிகாரி அண்ணாதுரை கூறும்போது, "கழுவெளியை ஒட்டியுள்ள பகுதிகளில் பறவைகளுக்கு இடையூறாக சினிமா படப்பிடிப்பு நடத்தக்கூடாது. அதை மீறி அனுமதியில்லாமல் சினிமா படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

அனுமதியின்றி படப்பிடிப்பு

சினிமா படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்றால் சுற்றுச்சூழல், வனத்துறை, சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷனிலும் அனுமதி பெற்றிருக்க வேண்டும். அப்படி எந்த அனுமதியும் இல்லாமல், பறவைகள் முகாமிட்டுள்ள பகுதியில் அத்துமீறி நுழைந்து, சினிமா படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. கூனிமேடு ஊராட்சியில் 7,000 ரூபாய் செலுத்தி முன் அனுமதி மட்டுமே பெறப்பட்டுள்ளது. இதில், பறவைகளை தொந்தரவு செய்ய மாட்டோம், குண்டு வெடிக்க மாட்டோம் என எந்த உறுதிமொழியும் கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மடத்துக்குளம் அருகே இலவச ஆடுகள் பலி


http://www.dinamalar.com/News_Detail.asp?Id=364145
பதிவு செய்த நாள் : டிசம்பர் 09,2011,00:26 IST

மடத்துக்குளம் : மடத்துக்குளம் அருகே கடத்தூரில் அரசு வழங்கிய இலவச ஆடுகள் தொடர்ந்து இறந்து வருவதால் பொது மக்களிடையே பீதி எற்பட்டுள்ளது. தமிழக அரசு வழங்கி வரும் இலவச திட்டத்தில் ஆடுகள் முக்கிய பங்கு வகிக்கிறது. தற்போது கிராம ஊராட்சிகளில் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு இலவச ஆடுகள் வழங்கப்படுகிறது. மடத்துக்குளம் ஒன்றியத்தில் கடத்தூர் புதூர் பகுதியில் 18 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு இலவச ஆடுகள் வழங்கப்பட்டன.பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட ஆடுகள் கடந்த வாரம் முதல் தொடர்ந்து இறந்து வந்துள்ளன. நேற்று இரவு வரை கடத்தூரில் மட்டும் ஆறு ஆடுகள் இறந்துள்ளன. இதனால் பயனாளிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பயனாளிகள் கூறியதாவது: என்ன காரணத்தினால் ஆடுகள் இறக்கின்றன என தெரியவில்லை. தொடர்ந்து ஆடுகள் இறப்பதால் புதியவகை நோய் இந்த பகுதியில் பரவியுள்ளதோ என அச்சமடைந்துள்ளோம். இது குறித்து ஊராட்சி நிர்வாகத்துக்கு கடந்த வாரத்தில் முதல் ஆடு இறந்த உடனேயே தகவல் கொடுத்துள்ளோம். ஆனால் இது வரை ஆடுகள் இறப்பு குறித்து மருத்துவசோதனை எதுவும் நடத்தவில்லை. இறந்த ஆடுகளை தொடர்ந்து புதைத்து வருகிறோம். மீதமுள்ள ஆடுகளை காப்பாற்ற உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.

கால்நடை மருத்துவர்கள் கூறியதாவது: ஆடுகளுக்கு வழங்க வேண்டிய மருந்துகள் மற்றும் பாதுகாப்பு குறித்து அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால் தொடர்ந்து ஆடுகள் இறந்து வருவது குறித்து உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு பாக்கி உள்ள ஆடுகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்படும் என்றனர்.

இது குறித்து கடத்தூர் ஊராட்சி தலைவர் ராசு கூறியதாவது: தக்க பாதுகாப்பு ஏற்பாடுகள், மருத்துவ வசதிகள் இருந்தும் அரசு வழங்கிய இலவச ஆடுகள் இறந்தது அதிர்ச்சி அளிக்கிறது. இது குறித்து ஆய்வு செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.மடத்துக்குளம் ஒன்றியக்குழு தலைவர் அண்ணாதுரை கூறுகையில், ""ஆடுகள் இறந்தது வருத்தமானது தான். இதுகுறித்து உரிய துறை அதிகாரிகளிடம் தெரிவிக்கப்படும்'' என்றார்.

சிறை வளாகத்தில் நாய்கள் சுட்டுக்கொலை : மர்ம நபர்களின் கைவரிசையால் பரபரப்பு


http://www.dinamalar.com//News_Detail.asp?Id=357101&
பதிவு செய்த நாள் : நவம்பர் 27,2011,21:52 IST

புழல் : மத்திய சிறை அருகே, துப்பாக்கியால் நாய்களை சுட்டுக் கொன்று, உடல்களை வீசியதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மர்ம நபர்களின் கைவரிசையால், சிறை பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. சென்னை, புழல் மத்திய சிறையை ஒட்டி சிறை ஊழியர்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில், நேற்று அதிகாலை 50க்கும் மேற்பட்ட நாய்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டன. இது பற்றி வேளச்சேரி, "புளூ கிராஸ் அமைப்பு பொது மேலாளர் டான் வில்லியத்திற்கு தகவல் கிடைத்தது. அமைப்பைச் சேர்ந்தவர்கள், போலீசில் புகார் செய்தனர். புழல் போலீசார் சுட்டுக்கொல்லப்பட்ட நாய்களின் உடல்களைக் கண்டுபிடித்தனர்.
நன்கு கொழுத்திருந்த நாய்களை, நேற்று அதிகாலை சிலர் விரட்டி சுட்டதாக, அங்கிருந்தவர்கள் மற்றும் போலீசார், "புளூ கிராஸ்' அமைப்பினரிடம் தெரிவித்தனர். 50க்கும் மேற்பட்ட நாய்கள் சுடப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், சிறை வளாகக் குடியிருப்புகள், சிறுவர்கள் விளையாட்டு பூங்கா மற்றும் குடியிருப்புகளுக்கு செல்லும் சாலை ஆகிய பகுதிகளில், 8 ஆண் மற்றும் 5 பெண் உட்பட, 13 நாய்களின் உடல்கள் மட்டுமே கிடைத்தன. மற்ற நாய்களின் உடல்களைத் தேடும் பணி நடக்கிறது. அவை பழலேரியில் வீசப்பட்டதா என்று, போலீசார் விசாரிக்கின்றனர்.
மீட்கப்பட்ட நாய்களின் உடல்கள், பிரேத பரிசோதனைக்காக வேப்பேரி கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டன. பலத்த மழையின் போது, நாய்கள் வேட்டையாடப்பட்டுள்ளன. நாய்களை சுட பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி குறித்தும், விசாரணை நடக்கிறது. சிறை வளாகத்தில் நடந்துள்ள இது போன்ற சம்பவத்தால், மத்திய சிறையின் பாதுகாப்பு குறித்த கேள்வியும் எழுந்துள்ளது.

மான் கறி சமைத்த 5 ஜவான்கள்: விசாரணைக்கு ஆஜராக மறுப்பு


http://www.dinamalar.com//News_Detail.asp?Id=357614&
பதிவு செய்த நாள் : நவம்பர் 28,2011,02:07 IST

ஜோத்பூர்: ராஜஸ்தானில் அரியவகை சிங்காரா மான்களை வேட்டையாடி சமையல் செய்ததாக 5 ராணுவ வீரர்கள் ‌மீது தொடரப்பட்ட வழக்கில் நேற்று அவர்கள் வனத்துறையினரின் விசாரணைக்கு ஆஜராகாமல் த‌லைமறைவாயினர். ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் உள்ள நீம்பாலா வனப்பகுதியில் ராணுவ தளவாடத்தொழிற்சாலையில் பணியாற்றிய ராணுவ வீரர்கள் சிலர் கடந்த 25-ம் தேதி சிங்காரா மான்களை வேட்டையாடி சமைத்து சாப்பிடுவதாக வனத்துறை புகார் தெரிவித்தது. 


இதைத்தொடர்ந்து 5 ராணுவீரர்கள் மீது வழக்குப்பதியப்பட்டு அவர்களிடம் 3 மான்களின் தலைகள் மற்றும் மான்கறிகள் பறிமுதல் செய்யப்பட்டன.இது தொடர்பாக வனத்துறை அதிகாரி பி.ஆர்.பஹாதி, ராணுவ கோர்டில் 5 ஜவான்களையும் விசாரணை நடத்த வேண்டும் என கூறினார். முன்னதாக அவர்கள் மீது இந்திய வன உயிரினங்கள் பாதுகாப்புச்சட்டம் 1972-ன் 9 ம்ற்றும் 51பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நேற்று வனத்துறையினரின் விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறப்பட்டிருந்தது.


ஆனால் அவர்கள் 5 பேரும் ஆஜராகவில்லை. இவர்கள் வனத்துறையினரின் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்தனர்.இது குறித்து ராணுவ செய்தி தொடர்பாளர் கர்னல்.எஸ்.டி. கோஸ்வாமி கூறுகையில், இந்த விவகாரம் குறித்து ராணுவ தலைமையகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. முதற்கட்ட விசாரணையில் அவர்களிடமிருந்து ச‌மைப்பதற்காக வைத்திருந்த மூன்று மான் தலைகள் கைப்பற்றப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் இவர்களுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை உறுதி. இதனால் அவர்கள் தண்டனையிலிருந்து தப்ப முடியாது என்றார்.

சிறகடித்து பறந்த காகங்கள் செத்து விழுந்த சோகம் க.க.சாவடியில் பரிதாபம்

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=364850
பதிவு செய்த நாள் : டிசம்பர் 09,2011,23:43 IST


கோவை:கோவை அருகே, க.க.சாவடி பகுதியில் 200க்கும் மேற்பட்ட காகங்கள் நேற்று திடீரென செத்து விழுந்தன. அதிர்ச்சியடைந்த போலீசார், அருகேயுள்ள ஓட்டல்களில் விசாரணை நடத்தினர்.க.க.சாவடி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய பகுதியில், நேற்று பிற்பகலில் பறந்து சென்ற காகங்கள் சில, தடுமாறி கீழே விழுந்தன. அவற்றால் எழுந்து நிற்கக் கூட முடியவில்லை. சற்று நேரத்திலேயே கால்களை இழுத்தபடி இறந்தன. தொடர்ந்து, இப்பகுதியில் பறந்து சென்று கொண்டிருந்த மேலும் பல காகங்கள், இதே போல் ஆங்காங்கே விழுந்தன. விழுந்த சில வினாடிகளில் இறந்தும் விட்டன.

இறக்கும் முன், வாயில் இருந்து வெள்ளையாக எதையோ கக்கி விட்டு, வாய் திறந்த நிலையில் அப்படியே இறந்தன. கொத்து கொத்தாக, 200க்கும் மேற்பட்ட காகங்கள், ஒரே நேரத்தில் இறந்து விழுந்த தகவலை அறிந்த க.க.சாவடி போலீசார், அங்கு வந்தனர்.பள்ளி வளாகம், தோட்டம், சாலை, புதர்களில் செத்து விழுந்திருந்த காகங்களை, இப்பகுதி மக்களின் துணையுடன் அள்ளி ஓரிடத்தில் குவித்தனர். அருகில் உள்ள ஓட்டல்களில் சோதனை நடத்தினர். பரிசோதனைக்காக அதில் ஒரு சில காகங்களின் உடலை அனுப்பி வைத்தனர்.

இந்த பரிதாப சம்பவம் குறித்து இப்பகுதி மக்கள் கூறுகையில், ""இவ்வளவு காகங்கள் ஒரே நேரத்தில் செத்து விழுவது இதுவே முதல் முறை. இறப்புக்கான காரணம் மர்மமாகவே உள்ளது. ஏதாவது விவசாயத் தோட்டத்தில் பூச்சி மருந்து கலந்த தண்ணீரை குடித்திருக்கலாம் அல்லது சாலைகளில் கொட்டப்படும் மருத்துவ, ரசாயன கழிவுகளை சாப்பிட்டிருக்கலாம். இதைத் தவிர, இவ்வளவு காகங்களை எவரும் கொல்ல வேண்டிய அவசியம் இல்லை,'' என்றனர்.காகங்களின் மர்ம மரணத்தின் பின்னணி குறித்து இப்பகுதியில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tuesday, December 6, 2011

எல்லை தாண்டியதாக இந்திய குரங்கு பாகிஸ்தானில் சிறைபிடிப்பு


http://www.dinamalar.com/News_Detail.asp?Id=362933
பதிவு செய்த நாள் : டிசம்பர் 07,2011,00:29 IST

இஸ்லாமாபாத்: தெரிந்தோ தெரியாமலோ இந்திய எல்லையை தாண்டி சென்ற குரங்கு, பாகிஸ்தான் வனத்துறையிடம் சிக்கியது. அது உளவு பார்க்க அனுப்பப்பட்டதா என அதிகாரிகள் சோதித்து வருகின்றனர். தற்போது அக்குரங்கு பாகல்பூர் மிருக காட்சி சாலையில் அடைக்கப்பட்டுள்ளது.

இந்திய எல்லை பகுதியிலிருந்து எல்லை தாண்டிய குரங்கு, பாகிஸ்தான் மாநிலம் பாகல்பூர் பகுதிக்கு தாவியோடி விட்டது. அதை, அங்கிருந்த பொதுமக்கள் பார்த்து, பிடிக்க பல முறை முயன்றும், அவர்களுக்கு "பெப்பே' காட்டி விட்டு, மரம் விட்டு மரம் தாவியது. இதுகுறித்து பொதுமக்கள் அளித்த தகவலை அடுத்து வனத்துறையினர் விரைந்து வந்து, குரங்கை தேடினர். நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு, குரங்கு வனத்துறையினரின் கண்களில் தென்பட்டது. அதை பிடிக்க வனத்துறையினர் நீண்ட போராட்டம் நடத்தி, ஒருவழியாக பிடித்தனர். உடனடியாக அதை அங்குள்ள மிருக காட்சி சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டது. அதற்கு அங்குள்ள அதிகாரிகள் "பாபி' என பெயரிட்டு அழைத்து வருகின்றனர். அக்குரங்கு இந்தியாவில் இருந்து பாகிஸ்தானை உளவு பார்க்க அனுப்பப்பட்டதா என அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். கடந்தாண்டு மே மாதம் பாகிஸ்தானில் இருந்து பறந்து வந்த புறாவை உளவு பார்க்க வந்த தூதர் என, இந்திய அதிகாரிகள் பிடித்து பாதுகாத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Saturday, December 3, 2011

ஜல்லிக்கட்டு தடையை நீக்க கோரி மதுரை மாவட்ட கலெக்டர் சகாயத்திடம் மனு


சனிக்கிழமை, டிசம்பர் 3, 2011, 14:44
http://tamil.oneindia.in/news/2011/12/03/tamilnadu-petition-given-cancel-the-ban-the-jallikattu-aid0176.html

மதுரை: தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு உள்ள தடையை நீக்க வேண்டும் என்று மதுரை மாவட்ட ஜல்லிக்கட்டு விழா குழுவினர் மதுரை மாவட்ட கலெக்டர் சகாயத்திடம் மனு அளித்தனர்.

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு உள்ள தடையை நீக்க வேண்டும் என்று பேராசிரியர் அம்பலத்தரசு தலைமையிலான பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஜல்லிகட்டு விழா குழுவினர் மதுரை கலெக்டர் அலுவலகத்துக்கு காளைகளுடன் வந்து மாவட்ட கலெக்டர் சகாயத்திடம் மனு அளித்தனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது,

தமிழகத்தில் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு பல ஆண்டுகளாக தெடார்ந்து நடந்து வருகின்றது. இதனை தடை செய்ய கோரி விலங்குகள் நலவாரியம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. சில நிபந்தனைகளுடன் விளையாட்டை நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது. அதனையேற்று ஜல்லிக்கட்டு விளையாட்டு நடந்து வருகின்றது.

இந்த நிலையில் ஜல்லிக்கட்டு விளையாட்டை தடை செய்யும்படி, நடிகை ஹேமமாலினி மத்திய அரசிடம் கோரி விடுத்தார். அதனை தொடர்ந்து மத்திய சுற்று சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் விலங்குகள் நலவாரிய சட்டத்தை விரிவுபடுத்தி, ஜல்லிக்கட்டு காளையை காட்சிப் பொருளாக வேடிக்கை காட்டக் கூடாது என்று தடை உத்தரவிட்டுள்ளார்.

இந்த முடிவு எடுக்கும் போது எம்.பி.க்களையோ, எங்களை போன்ற குழுவினரிடமோ எந்த கருத்தும் கேட்கவில்லை. தன்னிச்சையாக விளையாட்டுக்கு தடை விதித்துள்ளார். இது இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை மீறிய செயலாகும். எனவே தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு உள்ள தடையை நீக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறியுள்ளார்.

Friday, December 2, 2011

ஆண் யானையிடம் மடியை தேடிய குட்டி: வண்டலூர் பூங்காவில் பரிதாபம்

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=360087
பதிவு செய்த நாள் : டிசம்பர் 02,2011,01:04 IST

ஈரோடு: ஈரோட்டில் இருந்து, சென்னை, வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு அனுப்பப்பட்ட குட்டி யானை, அங்கிருந்த ஆண் யானையிடம் மடியை தேடியது, வனத்துறையினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் சென்னம்பட்டி காப்புக்காட்டில் இருந்து வழி தவறிய குட்டியானை, ஜரத்தல் என்ற ஏரிக்கரை அருகே பரிதாபமாக நின்றது. ஒன்றரை மாதமேயான குட்டி யானையை, காட்டுக்குள் அனுப்ப வனத்துறையினர் மேற்கொண்ட முயற்சி யாவும் தோல்வியில் முடிந்தது. இதனால், மண்டல வன பாதுகாவலர் அருண் உத்தரவின் பேரில், வனத்துறை அலுவலகத்துக்கு கொண்ட வரப்பட்ட குட்டியானைக்கு, ராஜ உபச்சாரம் நடந்தது. வனத்துறை அலுவலர்களிடம் குழந்தை போல பழகிய குட்டியானை, 29ம் தேதி இரவு, 8.30க்கு நீண்ட நேர பாச போராட்டத்துக்கு பின், சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு கொண்டு செல்லப்பட்டது. பூங்கா ஊழியர்களுடன் முதலில் பழகவும், அவர்கள் வைக்கும் உணவையும் உண்ண மறுத்த குட்டியானை, அதன் பின் அவர்களிடம் நன்கு பழகியது. அதே பூங்காவில் உள்ள சற்று பெரிய யானையுடன், நேற்று காலை குட்டி யானையை பழக விட்டனர். ஆனால், தன் தாய் வந்து விட்டதாக எண்ணிய குட்டி யானை, ஆண் யானையின் உடல் முழுவதும், தன் துதிக்கையால் முத்தமிட்டது. அதன் பின் துதிக்கையை தூக்கி பால் குடிக்க ஆண் யானையிடம் மடியை தேடியது. மடி இல்லாததால் ஏமாற்றமடைந்த குட்டி யானை, சில மணி நேரத்தில் ஆண் யானையிடம் நன்கு பழகியது.

குட்டி யானை தங்களிடம் குழந்தை போல் பழகியதாகவும், அதை நன்கு பராமரிக்க வேண்டும் என்றும், ஈரோடு மாவட்ட வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். குட்டி யானையை ஈரோட்டில் குளிக்க வைக்கும் போது காதில் ஏற்பட்ட காயத்துக்கு, வனத்துறை டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். வண்டலூர் உயிரியல் பூங்கா அதிகாரிகளும், ஊழியர்களும் இரவு பகலாக குட்டியானையை கவனித்து வருகின்றனர்.