Pages

Friday, April 22, 2011

வனவிலங்குகள் இடம் பெயரும் போது போக்குவரத்திற்கு தடை விதிக்கப்படுமா?


பதிவு செய்த நாள் : ஏப்ரல் 22,2011,22:53 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=229585

உடுமலை : உடுமலை-மூணாறு ரோட்டில் குடிநீர் மற்றும் உணவு தேவைக்காக வனவிலங்குகள் இடம் பெயரும் பகுதியில் மனிதர்களால் ஏற்படுத்தப்படும் இடையூறுகளால் அவற்றின் வழித்தடம் மாறி பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு வருகிறது. நிரந்தர தீர்வாக இந்த ரோட்டில் குறிப்பிட்ட நேரம் போக்குவரத்திற்கு தடை விதிக்க வேண்டும்.உடுமலை-மூணாறு ரோடு ஆனைமலை புலிகள் காப்பகம் அமராவதி வனச்சரகத்தின் வழியாக செல்கிறது. வனசரகத்திற்குட்பட்ட மேற்கு கோம்பை, காமனூத்து, ஏழுமலையான் கோவில் உட்பட பல்வேறு பகுதிகளிலிருந்து வனவிலங்குகள் மாலை நேரத்தில் ரோட்டை கடந்து அமராவதி அணை பகுதிக்கு செல்கிறது.கோடை காலத்தில் வனத்தில் நிலவும் வறட்சியால் உணவு மற்றும் குடிநீர் தேவைக்காக விலங்குகள் ரோட்டை கடக்கின்றன. குறிப்பாக 40 க்கும் அதிகமான யானைகள், மான், காட்டெருமை உட்பட விலங்குகள் நாள்தோறும் மூணாறு ரோட்டை கடந்து சென்று வருகின்றன.

மூணாறு ரோட்டில் அதிகரித்துள்ள போக்குவரத்தால் வனவிலங்குகள் பாதிக்கப்பட்டுள்ளது. அவ்வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் விலங்குகளுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படுத்தி வருகின்றனர்.யானைகளை சத்தம் எழுப்பி விரட்டுவது, குச்சிகளை வீசுவது, அதிக வெளிச்சத்துடன் கூடிய ப்ளாஸ்களை பயன்படுத்தி போட்டோ எடுப்பது மற்றும் இரவு நேரங்களில் வாகனங்களில் ஸ்பாட் லைட் பயன்படுத்துதல் போன்ற காரணங்களால் விலங்குகள் பாதிக்கப்பட்டு மனிதர்களை துரத்துவது போன்ற சம்பவங்கள் தொடர்கதையாகியுள்ளன.

இது குறித்து வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தாலும் எந்த பயனும் இல்லை. தொடர் துன்புறுத்தலுக்கு ஆளாகும் வனவிலங்குகள் குறிப்பாக யானைகள் தங்கள் இயல்பான நடவடிக்கைகளை மறந்து மனிதர்களை பார்த்ததும் துரத்தும் நிலை ஏற்படலாம் என வன ஆர்வலர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். இந்த ரோட்டில் கடந்த வாரத்தில் மட்டும் பல முறை பல கி.மீ., தூரத்திற்கு வாகனங்களை யானைகள் விரட்டிய சம்பவம் நடந்துள்ளது. மாலை நேரத்தில் இப்பகுதியில் காற்றோட்டத்திற்காக விலங்குகள் நிற்பதும் குறைந்துள்ளது.

இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், உடுமலை-மூணாறு ரோட்டில் வனவிலங்குகள் ரோட்டை கடக்கும் பகுதியில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து பல முறை எச்சரித்தாலும் சுற்றுலா பயணிகள் கண்டுகொள்வதில்லை. யானைகள் நடமாட்டம் உள்ள பகுதியில் வாகனங்களை நிறுத்தக்கூடாது; யாரும் கீழே இறங்க கூடாது ஆகிய விதிமுறைகளை சுற்றுலா பயணிகள் பின்பற்றுவதில்லை. விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. கேரளாவை சேர்ந்த ஏழு பேருக்கு வனவிலங்குகளை இடையூறு செய்ததற்காக 7 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கோடை காலம் முடியும் வரை தொடர்ந்து கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்', என்றனர்.வன ஆர்வலர்கள் கூறுகையில், உடுமலை-மூணாறு ரோட்டில் யானை மற்றும் மான் கூட்டங்களுக்கு தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதை தடுக்க மூணாறு ரோட்டில் விலங்குகள் ரோட்டை கடக்கும் நேரத்தில் போக்குவரத்திற்கு தடை விதிக்க வேண்டும். போக்குவரத்து அதிகமுள்ள கோழிக்கோடு-மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் விலங்குகள் பாதுகாப்பிற்காக இரவு முழுவதும் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.இந்த வழித்தடத்தில் கேரள முத்தாங்காக தேசிய வன உயிரின சரணாலயமும், கர்நாடாகபந்திப்பூர் புலிகள் காப்பகமும், தமிழ்நாட்டின் முதுமலை வனசரகமும் உள்ளது. மூன்று மாநில அரசுகளும் இணைந்து இந்த ரோட்டில் போக்குவரத்திற்கு தடை விதித்துள்ளன. அதே போல் உடுமலை-மூணாறு ரோட்டில் மாலை 4.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை போக்குவரத்திற்கு தடை விதிக்க வேண்டும்', என்றனர்.