Pages

Friday, April 22, 2011

மெரினாவில் நாய்கள் கடும் தொல்லை அதிகாலையில் நடைபயிற்சி செல்பவர்களை கடித்து குதறுகின்றன


சென்னை, ஏப்.22-
http://dailythanthi.com/article.asp?NewsID=641774&disdate=4/22/2011&advt=2


மெரினா கடற்கரையில் நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. அதிகாலையில் `நடைபயிற்சி' செல்பவர்களை விரட்டி, விரட்டி கடித்து குதறுகிறது.

நாய்கள் அதிகரிப்பு

சென்னை நகரில் தெருக்களில் நாய்களின் எண்ணிக்கை சமீபகாலமாக பெருகிவிட்டது. மாநகராட்சி அதிகாரிகள் இதை கண்டு கொண்ட மாதிரி தெரியவில்லை.

இரவு நேரத்தில் தெருக்களில் நின்று கொண்டு சத்தம் போட்டு குரைக்கின்றன. தெருவில் நடந்து செல்பவர்களையும் கடிக்க பாய்கின்றன. தெருக்களில் மட்டுமல்லாது, மெரினா கடற்கரையிலும் இரவு நேரத்தில் நாய்களின் தொல்லை கடுமையாக இருப்பதாக புகார் எழுந்துள்ளது.

கடற்கரை மணலில் தூக்கம்

கோடைகாலம் தொடங்கி விட்டதால் வீடுகளில் படுத்து தூங்க முடியாதவர்கள், காற்றுக்காக மொட்டை மாடியில் படுத்து தூங்குகிறார்கள். மெரினாவை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் இரவு நேரத்தில் குடும்பத்தோடு கடற்கரையில் வந்து படுத்து தூங்குகிறார்கள்.

மெரினா காந்திசிலை பின்புறம் ஆண்களும், பெண்களும், குழந்தைகளுமாக தினமும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கடற்கரை மணலில் படுத்து தூங்குகின்றனர். அவ்வாறு தூங்க வருபவர்கள் தாங்கள் வளர்க்கும் செல்ல நாய்களையும் தங்களோடு அழைத்து வந்துவிடுகின்றனர். இவ்வாறு வரும் நாய்கள்தான் கடும் தொல்லை கொடுப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடைபயிற்சி செல்பவர்கள்

மெரினா கடற்கரையில் அதிகாலை 4 மணியில் இருந்து நூற்றுக்கணக்கானோர் நடைபயிற்சி செல்வது வழக்கம். வி.ஐ.பி.க்கள் கூட மெரினா கடற்கரை மணலில் நடைபயிற்சி செல்வதை பழக்கமாக வைத்துள்ளனர்.

இவ்வாறு நடைபயிற்சி செல்பவர்களை, இந்த நாய்கள் கூட்டம் குரைத்த படியே தொல்லை கொடுக்கின்றன. நேற்று முன்தினம் நடைபயிற்சி சென்ற 3 போலீஸ்காரர்களை இந்த நாய்கள் விரட்டி விரட்டி கடித்து குதறிவிட்டன. இது போல ஏராளமானோர் நாய்களிடம் கடிபட்டுள்ளதாக புகார் தெரிவித்துள்ளனர்.

கடற்கரை மணலில் படுத்து தூங்க வரும் பொதுமக்கள் தங்களது செல்ல நாய்களை அழைத்து வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நடைபயிற்சி செல்பவர்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர். ஒருவேளை அழைத்து வந்தால் தங்கள் நாய்களை கட்டுப்பாட்டில் அதட்டி வைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்கள்.