Pages

Wednesday, February 2, 2011

நடமாடும் கால்நடை மருத்துவ ஆய்வுக்கூட வாகனம்


திருச்சியில் ரூ.9 லட்சம் மதிப்பில் நடமாடும் கால்நடை மருத்துவ ஆய்வுக்கூட வாகனம் அமைச்சர் நேரு தொடங்கி வைத்தார்

திருச்சி, பிப்.2-
http://dailythanthi.com/article.asp?NewsID=624590&disdate=2/2/2011&advt=2

திருச்சியில் ரூ.9 லட்சம் மதிப்பில் நடமாடும் கால்நடை மருத்துவ ஆய்வுக்கூட வாகனத்தை அமைச்சர் நேரு தொடங்கி வைத்தார்.

ஆய்வுக்கூட வாகனம்

திருச்சி பாலக்கரையில் உள்ள கால்நடை பன்முக மருத்துவமனையில் நடமாடும் கால்நடை மருத்துவ ஆய்வுக்கூட வாகனம் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் மகேசன் காசிராஜன் தலைமை தாங்கினார்.

விழாவில் போக்குவரத்து துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு ரூ.9 லட்சத்து 4 ஆயிரத்து 283 மதிப்பில் தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் வாங்கப்பட்ட நடமாடும் கால்நடை மருத்துவ ஆய்வுக்கூட வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

விழாவில் மேயர் சுஜாதா, அன்பில் பெரியசாமி எம்.எல்.ஏ., மாநகராட்சி துணை மேயர் அன்பழகன், மாநகராட்சி கமிஷனர் பால்சாமி, கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குனர் டாக்டர் ராஜேந்திரன், துணை இயக்குனர் டாக்டர் இப்ராகீம், உதவி இயக்குனர் டாக்டர் சந்திரசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கால்நடை பாதுகாப்பு முகாம்

நடமாடும் கால்நடை மருத்துவ ஆய்வுக்கூட வாகனம் திருச்சியை தலைமையிடமாக கொண்டு திருச்சி, பெரம்பலூர், அரியலூர் ஆகிய 3 மாவட்டங்களுக்கு பயன்படுத்தப்பட உள்ளது. கிராமங்களுக்கு சென்று அதே இடத்தில் கால்நடைகளிலிருந்து ரத்தம், சாணம், சிறுநீர், சளி போன்ற மாதிரிகளை சேகரித்து உடனடியாக பரிசோதனை செய்து நோய்களை பற்றி ஆய்வு செய்யவும், நோய் கிளர்ச்சி ஏற்படும் சமயங்களில் உடனடியாக கிராமங்களுக்கு சென்று ஆய்வு செய்து நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கும் இந்த வாகனம் பயன்படுத்தப்படும்.

அவசர காலங்களில் கிராமங்களில் கால்நடைகளுக்கு தடுப்பூசி போட தேவையான ஊநீர் உடனடியாக எடுத்து செல்லவும், கிராமங்களில் உள்ள பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு சென்று பால் மாதிரிகளை சோதனை செய்யவும், தரம், தன்மைகளை பரிசோதனை செய்யவும், கிராமங்களில் நடைபெறும் கால்நடை பாதுகாப்பு திட்ட முகாம்கள் மற்றும் மலடு நீக்க சிகிச்சை முகாம்களுக்கு சென்று மாதிரி சேகரித்தல் மற்றும் பரிசோதனை செய்யவும் பணி மேற்கொள்ளவும் பயன்படுத்தப்
படும்.

நோய் தன்மை கண்டறிய...

மேலும் பறவை காய்ச்சல் நோய் தொடர்பான ஆய்வு செய்வதற்கு கரைவெட்டி பறவைகள் சரணாலயம் மற்றும் தனியார் கோழிப்பண்ணைகளில் மாதிரி சேகரித்து பரிசோதனை செய்யவும், கால்நடைகளுக்கு செலுத்தப்படும். தடுப்பூசியின் நோய் எதிர்ப்பு திறன் கண்டறியவும் இந்த வாகனம் பயன்படுத்தப்படும். இந்த வாகனம் செல்லும் இடம் குறித்து முன்கூட்டியே பொதுமக்களுக்கு விளம்பரப்படுத்தப்படும்.