சர்வதேச வேங்கைப் புலி நாள்: ஜூலை 29
இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் இறுதிவரை நாடு முழுவதும் 34 வேங்கைப் புலிகள் இறந்திருப்பதாகத் தேசியப் புலிகள் காப்பக ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 32 வேங்கைப் புலிகள் இறந்திருந்தது கவனிக்கத்தக்கது.
அதிலும் தமிழகம், கேரளம் மற்றும் கர்நாடகம் ஆகிய மாநிலங்களில்தான் அதிக அளவில் புலிகள் இறந்திருக்கின்றன. இவற்றின் எண்ணிக்கை மட்டும் 18. ஜனவரி மாதம் மட்டும் இந்த மூன்று மாநிலங்களில் 9 புலிகள் இறந்திருக்கின்றன.
தமிழக நிலை
தமிழகத்தில் முதல் 6 மாதங்களில் 5 புலிகள் இறந்திருக்கின்றன. இவை இயற்கையான மரணங்களா அல்லது கள்ள வேட்டை-கடத்தல் காரணத்தால் ஏற்பட்ட மரணங்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
இவ்வளவு காலம் கள்ள வேட்டை என்பது வட மாநிலங்களில்தான் மோசமாக இருந்தது. சமீப காலமாகத் தமிழகத்திலும் வேங்கைப் புலி கள்ள வேட்டை அதிகரித்திருப்பது கவலையளிக்கும் அம்சம்தான்.
ஆனால், ‘இந்தியக் காட்டுயிர் பாதுகாப்புச் சங்கம்' எனும் அமைப்பின் கணக்கின்படி, இந்த மாதம்வரை நாடு முழுக்க 49 புலிகள் இறந்திருக்கின்றன. இவற்றில் இயற்கையான முறையில் 33 புலிகளும், கள்ள வேட்டை காரணமாக 16 புலிகளும் இறந்திருப்பதாகத் தெரியவந்துள்ளது.
இயற்கை காரணம் சரியா?
எனினும், வாழிட அழிப்பு மற்றும் நோய் உள்ளிட்ட காரணங்களால் ஏற்படுவதையே இயற்கை மரணங்கள் என்று குறிப்பிடுகிறார்கள். ஒவ்வோர் ஆண்டும் கள்ள வேட்டை காரணமாகப் புலிகள் இறப்பதைவிடவும், மேற்கண்ட காரணங்களால் வேங்கைப் புலிகளின் இறப்பு அதிகரித்துவருவது சுற்றுச்சூழல் ஆர்வலர்களைக் கவலையுறச் செய்கிறது. இயற்கை மரணம் என்பது வகைப்பாட்டுக்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம்; ஆனால், மேற்கண்ட இரண்டு காரணங்களும் தடுத்து நிறுத்தப்பட வேண்டியவையே.
உண்மைக் காரணம்
வேங்கைப் புலிகளின் இயற்கை மரணங்கள் ஏன் அதிகரிக்கின்றன? மக்கள்தொகை அதிகரிப்பு காரணமாக வேங்கைகளின் வாழிடங்கள் ஆக்கிரமிக்கப்படுவதால் மக்கள் - புலிகளிடையே உணவு மற்றும் இடத்துக்கான போட்டி அதிகரித்துவருகிறது. காட்டின் எல்லைகளில் வாழ்பவர்கள் விறகு, தீவனம், வெட்டுமரம் ஆகியவற்றுக்காக வேங்கைப் புலிகளின் வாழிடமான காட்டையே சார்ந்திருக்கிறார்கள். வாழிடங்கள் சுருங்கச் சுருங்க மக்கள் காட்டுக்குள் நுழைவதும் அதிகரிக்கிறது. மற்றொருபுறம் வேங்கைகள் மனிதர்களைத் தாக்குவதும் அதிகரித்துவருகிறது.
காட்டுக்குள் இரை கிடைக்காத நிலையில்தான், மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும் கால்நடைகளை வேங்கைப் புலிகள் அடித்துச் சாப்பிட ஆரம்பிக்கின்றன. அப்போது உள்ளூர் மக்கள் புலிகளுக்கு எதிராகத் திரள்கிறார்கள். பெரும்பாலும் அவை கொல்லப்படுகின்றன; அல்லது பிடித்து வேறிடத்தில் விடப்படுகின்றன. இப்படி வெளிச்சத்துக்கு வராமல் கொல்லப்படும் புலிகளும் கள்ளச் சந்தைக்கே போகின்றன என்பதைக் கவனிக்க வேண்டும்.
News Courtesy:
http://tamil.thehindu.com/general/environment/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF/article7464108.ece