தெரு நாய்களை கொல்லுங்கள், நாய்களை விட மனித உயிர்கள் தான் மேலானது என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு மலையான சூப்பர் ஸ்டார் மோகன்லால் தனது பிளாக்கில் எழுதி பரபரப்பை ஏற்படுத்தினார். ஏனெனில் தமிழகத்தை விட கேரளாவில் உள்ள தெருநாய்களின் எண்ணிக்கை 3 மடங்கு அதிகம். எனவே அங்கு பெரும்பாலும் தெரு நாய்க்கடிக்கு சிறுவர்களும், சிறுமிகளும் ஆளாக நேரிடுகிறது என பரவலாக புகார்கள் எழுந்தன. நாய்கடிக்கு ஆளானவர்கள் சிலர் அலட்சியமாக இருந்ததால் உயிரிழக்கும் அபாயங்களும் அங்கு ஏற்பட்டன. எனவே தெரு நாய்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை மோகன்லாலின் அறிவிப்புக்கு பிறகு அங்கு பரவலான விவாதத்திற்கு உள்ளானது. தெரு நாய்கள் என்று நாம் கூறும் ஆசிய நாய்கள் மனிதர்களோடு பழக தொடங்கி நீண்ட நூற்றாண்டுகள் ஆகி விட்டன. தெரு நாய்களாக இருந்தாலும், வீட்டு நாய்களாக இருந்தாலும் அவையும் ஒரு காலத்தில் காட்டு விலங்குகளாகவே இருந்தன. மனிதன் வேட்டையாடிய கால கட்டத்தில் தனது உதவிக்காக பழக்கப்படுத்திய ஆதி விலங்குகளில் நாயும், குதிரையும் இன்று வரை அவனுடன் வசித்து வருகின்றன. பின்னர் ஒரு கால கட்டத்தில் ஒவ்வொரு பிரதேசத்தை சேர்ந்த நாய்களும் அதன் தனி குணாம்சம் காரணமாக சிறப்பு தகுதியை பெறத் தொடங்கின.
ஜெர்மன் ஷெப்பர்டு, டாபர்மேன், லாப்ரடார் என வெளிநாட்டு நாய்கள் அனைத்தும் அதன் வேட்டையாடும் குணங்களை கொண்டும், பிரதேசத்தை கொண்டும் வகைப்படுத்தப்பட்டு வருகின்றன. பின்னர் இவை சிறப்பு தகுதி பெற்று உயர் ரக நாய்களாகவும், வீடுகளில் வளர்ப்பு நாய்களாகவும் ஆக்கப்பட்டன. பின்னர் மன்னராட்சி கால கட்டங்களில் குறிப்பிட்ட வகை நாய்களை வைத்திருப்பதே மிகப் பெரிய கவுரவமாக கருதப்பட்டது. இது தவிர தமிழகம் போன்ற உள்நாட்டிலும் ராஜபாளையம், கோம்பை போன்ற ரகங்களும் தங்களது ேவட்டை குணங்களால் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்று மக்களின் விருப்பத்திற்குரிய காவல் நாய்களாகவும், செல்லப்பிராணிகளாகவும் வளர்க்கப்பட்டது. மேலும் வெளிநாடுகளில் உள்ள குளிர் பிரதேசத்தில் வளர்ந்து வந்த சிறிய பொம்மை போன்று காட்சியளித்து பெண்களையும், குழந்தைகளையும் கவரக் கூடிய பொமரேனியன் போன்ற வகை நாய்களும் மக்களின் செல்லமான வளர்ப்பு பிராணியாக விரைவில் மக்கள் மத்தியில் இடம் பிடித்தது.
இன்றைக்கு நடுத்தர, உயர் நடுத்தர வர்க்க மக்கள் மத்தியில் வீடுகளில் நாய் வளர்ப்பதை மிகவும் விருப்பமான, தங்களது வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிவிட்டதை காணமுடிகிறது. செல்லப் பிராணிகள் இன்றைக்கு நகர்புறங்களில் கூண்டுகளில் அடைபட்டும், மாடிப்படிகளின் அடியில் சங்கிலியால் கட்டப்பட்டும், குளிரூட்டப்பட்ட கார்களில் அழைத்து செல்லப்பட்டு கடற்கரைகளில் விளையாட வைக்கப்படுவதையும் பார்க்க முடிகிறது.
இப்படி மனிதனோடு பின்னி பிணைந்த செல்ல பிராணியான நாய்கள் கடந்த சில நாட்களாக சென்ைன தெருக்களில் சீரழிவதாக செய்திகள் வெளியாகின. இது மிருக ஆர்வலர்களை மட்டுமின்றி, செல்ல பிராணிகளை வளர்ப்பவர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பெரும்பாலும் இரு பாலாரும் வேலைக்கு சென்று விடும் வீடுகளில் நாய்களை வளர்க்க முடியாத முதியவர்கள், சிறு குழந்தைகளை வைத்திருப்போர், ஆசைக்கு வாங்கி விட்டு போதிய பராமரிப்பை தர முடியாதவர்கள் என பலரும் தற்போது தங்களது செல்ல பிராணிகளை தெருக்களில் விட்டு விடுவதாக கூறப்படுகிறது. பெரும்பாலும் வீடுகளில் வளர்ந்த நாய்களுக்கும், தெரு நாய்களுக்கும் ஆகவே ஆகாது. இதனால் இவைகள் தெரு நாய்களோடு சண்டையிடுவதால் அப்பகுதியில் நடந்து ெசல்வோருக்கு ஆபத்தாக மாறும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது. பொதுவாக சென்னையில் பல இடங்களிலும் தெரு நாய் தொல்லை இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில் தற்போது புதிதாக வீடுகளில் வளர்க்கப்பட்ட நாய்களும் கைவிடப்பட்டு தெருக்களில் அலைவதாக செய்திகள் வருகின்றன.
இதற்காக சென்னை போன்ற நகரங்களில் தெருக்களில் கைவிடப்படும் வீட்டு வளர்ப்பு நாய்களை மீட்பதற்காகவே என்று செயல்படும் இந்திய செல்ல பிராணிகளுக்கான மக்கள் என்ற தன்னார்வ அமைப்பினர் 52 உயர் ரக நாய்களை மீட்டுள்ளனர். கடந்த 3 மாதத்தில் மட்டும் நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இது போன்று வீடுகளில் வளர்க்கப்பட்டு தெருக்களில் கைவிடப்பட்ட உயர் ரக நாய்களை இந்த தன்னார்வலர்கள் மீட்டுள்ளனர்.
ஏற்கனவே தெருக்களில் அலையும் தெரு நாய்களை மக்கள் புகார் கொடுத்தால் பிடித்து செல்வதற்கென்று மாநகராட்சியில் தனிப்பிரிவு செயல்பட்டு வந்த போதிலும், இது போல வளர்ப்பு நாய்களை மீட்க இந்த தன்னார்வலர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இவ்வாறு இவர்கள் மீட்டதில் சென்னையில் மட்டும் ஜெர்மன் ஷெப்பர்டு, பொமரேனியன், லேப்ரடார், டெர்ரியர்ஸ், கிரேட் டேன்ஸ் உள்ளிட்ட பல உயர் ரகங்களும் அடங்கும். இவர்கள் மீட்ட பெரும்பாலான நாய்களும் மிகவும் நோய்வாய்ப்பட்டும், உடல் நலம் குன்றியும், வயது முதிர்ந்தும் காணப்பட்டுள்ளன. மேலும் சில நாய்கள் போதிய பராமரிப்பு இல்லாத காரணத்தால் கடுமையான பட்டினியால் பாதிக்கப்பட்டு எலும்பும் தோலுமாக காணப்பட்டன.
இதுகுறித்து இந்த தன்னார்வ அமைப்பின் நிறுவன உறுப்பினர் அருண் கூறுகையில், வீதிகளில் கைவிடப்பட்ட 52 உயர் ரக நாய்களை கடந்த 3 மாதங்களில் மீட்டுள்ளோம். இவற்றில் பெரும்பாலான நாய்கள் கொளத்தூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்துதான் மீட்கப்பட்டுள்ளது என்கிறார். இதன் மேலாளர் தினேஷ் பாபா கூறுகையில் இவற்றில் இரண்டு நாய்களுக்கு போதிய சிகிச்சை கிடைக்காத காரணத்தால் இறந்தன. மேலும் 18 நாய்களுக்கு மருத்துவ உதவி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் எங்களது முயற்சியின் காரணமாக 32 நாய்களை பராமரிப்பதற்கு உரிமையாளர்கள் கிடைத்தனர் என்றார். தெரு நாய்களை போல, வீடுகளில் இருந்து கைவிடப்பட்ட நாய்களால் தெருக்களில் எளிதில் வசிக்க முடியாது. எனவே இவை விரைவில் நோய் வாய் பட்டும், உணவு இன்றியும் இறக்கும் நிலை ஏற்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார். ஏற்கனவே சென்னை நகரத்தில் தெரு நாய் தொல்லைகள் பரவலாக காணப்படுவதாக பொது மக்கள் குற்றம் சாட்டி வரும் நிலையில் வீடுகளில் இருந்து கைவிடப்பட்ட நாய்கள் நோயாலும், பராமரிப்பு இன்றியும் தெருக்களில் கிடந்து இறப்பதால் நோய்கள் பரவும் அபாயம் இருப்பதாக சென்னை வாசிகள் கவலை தெரிவித்தனர்.
ஏற்கனவே சென்னையில் உள்ள பெரும்பாலான பறக்கும் ரயில் நிலையங்கள் ஆள் அரவமின்றி நாய்கள் தங்கி செல்லும் கூடங்களாகவே இருக்கின்றன. இதனால் இரவு நேரங்களில் மக்கள் நடந்து செல்ல அச்சம் தெரிவித்துள்ளனர். மேலும் கமிஷனர் அலுவலகம், ரயில் நிலையம் உள்ளிட்ட பொதுமக்கள் பெரும்பாலும் வந்து ெசல்லும் இடங்களில் கூட தெருநாய்கள் தொல்லை இருப்பதாக ஏற்கனவே பல முறை புகார்கள் வந்துள்ளன. மேலும் சமீப காலமாக தெருநாய்களை கட்டுப்படுத்துவதில் மாநகராட்சி மெத்தனமாக செயல்படுவதாகவே பொதுமக்கள் கூறி வருகின்றனர். சென்னையை பொறுத்த வரை தெரு நாய்கள் எண்ணிக்கையை கேட்டால் தலை சுற்றும். விரிவாக்கப்பட்ட பகுதிகளையும் சேர்த்து சென்னையில் சுமார் 2 லட்சம் தெரு நாய்கள் உள்ளதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. நூற்றுக்கணக்கான தெருக்கள் இரவு நேரத்தில் இந்த நாய்களின் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. சில தெருக்களில் இரவில் டூ விலரில் சென்றால் கூட நாய்கள் கூட்டமாக துரத்துவதாக பொது மக்கள் கூறுகிறார்கள்.
வேலை முடிந்து இரவு 11 மணியளவில் சிந்தாதிரிப்பேட்டை கூவம் சாலை வழியாக சென்ற போது சுமார் 8 தெரு நாய்கள் சூழ்ந்து கொண்டு நகரவிடாமல் தடுத்ததாகவும், பின்னர் அந்த வழியாக வந்த இரண்டு வாலிபர்கள் கல்லால் அந்த நாய்களை விரட்டிய பிறகுதான் வீடு திரும்ப முடிந்ததாக பெண் ஒருவர் தனது அனுபவத்தை திகிலுடன் தெரிவித்தார். சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்கள், கோயம்பேடு உள்ளிட்ட பஸ் நிலையங்களிலும் தெரு நாய்கள் மக்களுக்கு பெரும் இடையூறாக உள்ளது. மக்களை பயமுறுத்தும் வகையிலும் உள்ளன. கடந்த 1996ம் ஆண்டுக்கு முன்பு தெரு நாய்களை மின்சார ஷாக்கொடுத்து பிடித்து விஷ ஊசி மூலம் சாகடித்து வந்தார்கள். ஆனால் பின்னர் நாய்களை கொல்லுதல் சட்டப்படி குற்றமானதாக அறிவிக்கப்பட்டது. எனவே 1996 முதல் நாய்களை பிடித்து கருத்தடை ஆபரேஷன் செய்து நோய்களுக்கு சிகிச்சை அளித்து, வெறி நோய் தடுப்பூசியும் போட்டு பிடித்த இடத்திலேயே கொண்டு விட்டுவிடுவார்கள். இந்த முறை இந்தியாவிலேயே முதல் முதலில் சென்னை மாநகராட்சியில்தான் அறிமுகப்படுத்தப்பட்டது. இன்று வரை தொடர்ந்து இந்த முறையைதான் மாநகராட்சி பின்பற்றி வருகிறது.
மாநகராட்சி மூலம் நாய்களுக்கு ஆபரேஷன் செய்ய 15 அறைகளுடன் கூடிய தனி ஆஸ்பத்திரி கட்டப்பட்டுள்ளது. புளூகிராஸ் அமைப்புடன் இணைந்து தெரு நாய்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை மாநகராட்சி தீவிரப்படுத்தி வருகிறது.ஒரு பக்கம் நாய்களை கட்டுப்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுத்தாலும் இன்னொரு பக்கம் அவற்றின் தொல்லையும் எல்லை மீறி விட்டதுதான் உண்மை. 2010-ம் ஆண்டு 40 ஆயிரத்து 446 பேரும் 2011-ம் ஆண்டு 38 ஆயிரத்து 454 பேரும் தெரு நாய்களிடம் கடிபட்டுள்ளார்கள் என்கிறது மாநகராட்சி புள்ளிவிபரம். அதே நேரத்தில் 2011-ம் ஆண்டு 14 ஆயிரத்து 2 நாய்களும், 2012-ம் ஆண்டு 19 ஆயிரத்து 193 நாய்களும் பிடிக்கப்பட்டு கருத்தடை செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. சென்னையை அழகுபடுத்த மாநகராட்சி என்ன நடவடிக்கை எடுத்தாலும் தெரு நாய்களோடு, தற்போது தெருக்களில் கைவிடப்பட்டுள்ள வீட்டு நாய்களையும் முறையாக பிடித்து செல்லவும், பொதுமக்கள் அச்சமின்றி தெருக்களில் நடந்து செல்லும் வகையில் தெரு நாய்களை கட்டுப்படுத்தவும் போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் சென்னைவாசிகள் நிம்மதியாக தெருக்களில் நடந்து செல்ல முடியும்.
News Courtesy:
http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=157719