Pages

Tuesday, July 17, 2012

மயில் இறகு விற்ற மூவர் கைது


http://www.dinamalar.com/News_Detail.asp?Id=494574
பதிவு செய்த நாள் : ஜூன் 26,2012,02:32 IST

சென்னை: சென்னையில், மயில் இறகு விற்பனையில் ஈடுபட்ட மூன்று பேரை, வனத்துறையினர் பிடித்தனர். அவர்களிடம் இருந்த, மயில் இறகுகள் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னையில், தி.நகர் உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில், மயில் இறகுகள் விற்பனை செய்யப்பட்டு வந்தன. இதுகுறித்து, வனத்துறைக்குப் புகார் வந்தது. வேளச்சேரி தலைமையிட வனச்சரகர் டேவிட்ராஜ் தலைமையில், வனக்காப்பாளர் கெஜபதி மற்றும் வன ஊழியர்கள், தி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, மயில் இறகுகளை விற்பனை செய்த மூன்று நபர்கள் கையும் களவுமாகச் சிக்கினர். விசாரணையில், அவர்கள் ஆக்ராவைச் சேர்ந்த நவல்சிங்,24, ஜிஜேந்தர்,25, மற்றும் பவன்,20, என்பது தெரிந்தது. அவர்கள், ஆக்ராவில் உள்ள இறகுகள் விற்பனையகத்தில் இருந்து கொள்முதல் செய்துவந்து விற்பனை செய்வதாகத் தெரிவித்தனர். இருப்பினும், கைப்பற்றப்பட்ட மயில் இறகுகள், உதிர்ந்தவையா அல்லது மயில்களின் உடலில் இருந்து பிடுங்கப்பட்டவையா என்பதை உறுதி செய்யும் வகையில், ஆய்விற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. வேளச்சேரி தலைமையிட வனச்சரகர் டேவிட்ராஜ் கூறுகையில், ""மயில் தேசியச் சின்னம் என்பதால், வன உயிரினப் பாதுகாப்புச் சட்டப்படி, பாதுகாக்கப்பட்டு வரும் பறவையினம். அதைத் துன்புறுத்துவது, கொல்வது, வளர்ப்பது சட்டப்படி குற்றம். தமிழகத்தை பொறுத்தவரை, வன உயிரின பொருட்களை விற்பனை செய்வதற்கும், வைத்துக் கொள்வதற்கும் அனுமதிக்கப்படுவதில்லை,'' என்றார்