Pages

Friday, May 4, 2012


கோவிலுக்கு மாவிளக்கு எடுத்த "நன்றியுள்ள ஜீவன்' : பம்பை முழங்க பவனி

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=461610
பதிவு செய்த நாள் : மே 05,2012,00:05 IST

காரிமங்கலம்: காரிமங்கலத்தில், விபத்தில் கால் முறிந்த நாயை காப்பாற்ற, அதன் உரிமையாளர் கோவிலுக்கு வேண்டி கொண்டதை தொடர்ந்து, குணமடைந்த நாய் மாவிளக்கு எடுத்து நேர்த்தி கடன் செலுத்தியது.

தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்துள்ள கீழ் தும்பலஅள்ளியை சேர்ந்தவர் விவசாயி தங்கவேல். இவர், கால்நடைகள் வளர்த்து வருகிறது. மாடுகளில் பால் கறந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கூட்டுறவு சங்க பால் விற்பனை நிலையத்துக்கு கொண்டு செல்வார்.கடந்த சில ஆண்டுக்கு முன் தங்கவேல் பால் ஊற்றி விட்டு வீட்டுக்கு திரும்பிய போது, தெருவில் சுற்றிய சிறிய நாய் குட்டி அவரை பின் தொடர்ந்து வந்தது. அவர், அந்த நாய் குட்டியை வீட்டுக்கு தூக்கிச் சென்று, "மணி' எனப்பெயர் சூட்டி செல்லமாக வளர்த்து வந்தார்.தினம் தங்கவேல் காலையும், மாலையும் சைக்கிளில் பால் கொண்டு செல்லும் போது, உடன் மணியும் சைக்கிள் பின்னால் சென்று வந்தது. ஒரு முறை தங்கவேலுக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்படவே, நாயின் வாயில் சிறிய கேனில் பாலை கொடுத்து அனுப்பி வைத்தனர். நாயும், கூட்டுறவு சங்கத்துக்கு செல்ல அங்குள்ளவர்கள் இதை புரிந்து கொண்டு பாலை வாங்கி கொண்டு காலி கேனை திரும்ப கொடுத்து அனுப்பினர். அதன் பின், மாட்டு வண்டி போல் சிறிய வண்டியை தயார் செய்து, அதில், 10 லிட்டர் கொள்ளவு கொண்ட இரண்டு கேனில் பால் ஊற்றி, மணியை வண்டியில் பூட்டி தினம் கூட்டுறவு சங்கத்துக்கு அனுப்பி வைத்தார். தினமும் மணியே பாலை எடுத்து சென்று காலி கேனுடன் வீடு திரும்பி விடும்.

ஓராண்டுக்கு முன் வீட்டின் முன் நின்ற போது, அந்த வழியாக வந்த பால் வேன், செல்லப்பிராணி மீது மோதியது. இதில், பின்னங்கால்கள் இரண்டும் எலும்பு முறிவு ஏற்பட்டது. துடித்து போன தங்கவேல் கால்நடை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தார். மேலும், நாயின் கால்கள் குணமடைந்தால், ராமசாமி கோவிலுக்கு மாவிளக்கு எடுப்பதாக தங்கவேல் குடும்பத்தினருடன் வேண்டி கொண்டனர்.
சிகிச்சை பெற்ற மணி மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி, வழக்கம் போல் பால் கேனை எடுத்து சென்று வருகிறது. நேற்று காரிமங்கலம் ராமசாமி கோவிலில் வேண்டுதல் நிறைவேற்ற தங்கவேல் குடும்பத்தினரும், நாய் மணியும், காரிமங்கலம் பஸ் ஸ்டாண்டில் இருந்து கோவிலுக்கு, பம்பை முழங்க ஊர்வலமாக மாவிளக்கு எடுத்து வந்தனர்.
இதை பார்த்த பக்தர்கள் பலரும் வியந்து பாராட்டினர்.