Pages

Sunday, May 20, 2012

தொல்லை தீருமா?


http://www.dailythanthi.com/article.asp?NewsID=731732&disdate=5/20/2012
20 May, 2012

ஞாயிறு கட்டுரை : தொல்லை தீருமா?

நாய்...

`நன்றி' என்ற மூன்றெழுத்து வார்த்தையின் நடமாடும் உதாரணம்.

எஜமான விசுவாசத்தை பற்றி குறிப்பிடும் போது, ``நாயாக இருப்பேன்'' என்று சொல்வார்கள்.

அந்த அளவுக்கு நன்றியும், விசுவாசமும் உள்ள பிராணி நாய். மனிதர்களோடு எளிதில் ஐக்கியமாகிவிடும் பிராணி இது. இதனால்தான் வளர்ப்பு பிராணிகளில் நாய் முதல் இடத்தை வகிக்கிறது. நாய் வீட்டை காக்கும். கொஞ்சம் பழக்கப்படுத்தி விட்டால் எஜமானர் சொல்லும் கட்டளைகளை ஏற்று சின்ன சின்ன வேலைகளை கூட செய்யும். நாய் வளர்த்தால் அந்த வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு அது நல்ல விளையாட்டு தோழனாகவும் இருக்கும்.

மோப்ப சக்தியின் மூலம் எதையும் அடையாளம் கண்டுபிடிப்பதில் நாய்கள் கில்லாடி. அதனால்தான் குற்றவாளிகளை பற்றி துப்பறிவதற்கு மோப்ப நாய்களை பயன்படுத்துகிறார்கள்.

இப்படியாக நாய் பலவகைகளிலும் நமக்கு நெருக்கமாகவும் உபகாரமாகவும் இருந்து வருகிறது.

இதனால்தான் செல்லப் பிராணிகள் வளர்ப்பில் நாய்களுக்கு மக்கள் முதல் இடம் அளிக்கிறார்கள். நாய்க்கு அப்புறம்தான் பூனை, கிளி, அணில் எல்லாம்...

சிலவகை நாய்களை பார்த்தாலே கை, கால் உதறல் எடுக்கும். அந்த அளவுக்கு வாட்டசாட்டமாக பயில்வான் போல் இருக்கும். அப்படிப்பட்ட நாய்கள் உள்ள வீட்டுப்பக்கம் திருடர்கள் எட்டிக்கூட பார்க்கமாட்டார்கள்.

இன்னும் சில நாய்கள் இருக்கின்றன.. பஞ்சு மிட்டாய் சைசுக்கு `புசுபுசு' என்று பொம்மை மாதிரி இருக்கும். அந்த நாய் வீட்டை பாதுகாக்க உதவாது; நாம்தான் அதை பாதுகாக்க வேண்டும்.

தனக்கு ஆபத்து கருதினாலோ அல்லது யாரையாவது விரோதி என்று கருதினாலோ அவர்கள் மீது பாய்ந்து கடித்து குதற நாய்கள் தயங்குவது இல்லை. சிறுவர்களுக்கும் நாய்களுக்கும் `ரொம்ப ராசி'. தெருவில் கல்லைக் கண்டால், உடனே நாயைத்தான் தேடுவார்கள். இதனால் நாய்களும், அறிமுகம் இல்லாத சிறுவர்களை பார்த்தால், ``எதற்கு வம்பு?'' என்று பம்மியபடியே அந்த இடத்திலிருந்து நகர்ந்து விடும்.

சில நாய்களை சீண்டிப்பார்த்தால் சற்று முறைக்கும். எதிர்த்து போராட முடியாது என்று தெரிந்தால் வாலை சுருட்டிக் கொண்டு மின்னல் வேகத்தில் இடத்தை காலி செய்து விடும்.

மனிதர்களை சார்ந்துதான் வாழ்க்கையை ஓட்ட வேண்டும் என்பதால், நாய்கள் மனிதர்களை நன்றாக அறிந்தே வைத்து இருக்கின்றன. அவர்களுடைய மனநிலைக்கு ஏற்ப நடந்து கொண்டு வயிற்றை கழுவி வருகின்றன.

மக்களுடன் மிகவும் நெருக்கமாகவும், விசுவாசமாகவும் இருக்கும் பிராணியான நாய் சில சமயங்களில் அவர்களுக்கு பாரமாகவும், தொல்லை தருவதாகவும் அமைந்து விடுகிறது. சில சமயங்களில் விரோதியாக கூட அமைந்து விடுகிறது.

நாய்க்கடிக்கு உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ளாவிட்டால் மரணத்தில் முடியலாம்.

வீட்டில் வளர்க்கும் நாய்கள் மனிதர்களை கடிப்பது அரிது. ஆனால் தெரு நாய்கள் அப்படி அல்ல. தீனி போடுபவர்களை பார்த்து வாலை ஆட்டும். மற்றவர்களை பார்த்து முறைக்கும். அறிமுகம் இல்லாதவர்களை தெருநாய்கள் கடிக்க தயங்குவது இல்லை. சில நாய்கள் ஆவேசம் தீரும் வரை விரட்டி விரட்டி கடிக்கும். சும்மா போனால் கூட திரும்பி பார்த்து குரைக்கும். இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களை காரணம் இல்லாமல் துரத்திச் சென்று குரைக்கும். கடிக்கவும் முயற்சிக்கும்.

இதனால் நாய்கள் என்றாலே சிலருக்கு வெறுப்பு, சிம்மசொப்பனம். வீட்டின் அருகே வந்தாலே அவற்றை துரத்தி அடிப்பார்கள்.

சென்னையிலும் மற்றும் சில நகரங்களிலும் சமீப காலமாக இதுபோன்ற தெருநாய்களின் தொல்லை மிகவும் அதிகரித்து உள்ளது. தெருக்களில் சகட்டுமேனிக்கு தெருநாய்கள் அலைகின்றன. இதனால் குழந்தைகளை கடித்து விடுமோ? என்று பெற்றோர்கள் அஞ்சுகிறார்கள். பஸ், ரெயில் நிலையங்களிலும் சுதந்திரமாக சுற்றித் திரிகின்றன. இரவில் எழும்பூர் ரெயில் நிலைய நடைமேம்பாலத்திலும், நடைமேடைகளிலும் நாய்களின் ராஜ்ஜியம்தான். சர்வ சாதாரணமாக அங்கும் இங்குமாக ஓடியபடி போவோர் வருவோரையெல்லாம் பயமுறுத்துகின்றன.

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை சென்னையில் நாய் வளர்ப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அப்போதெல்லாம் தெரு நாய்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக செயல்பட்டனர். தெருக்களில் சுற்றித் திரியும் வெறி நாய்களை அவ்வப்போது பிடித்து சென்று அப்புறப்படுத்திவிடுவார்கள்.

அப்போது, வீடுகளில் நாய் வளர்க்க விரும்புகிறவர்கள், மாநகராட்சியிடம் தனியாக அனுமதி வாங்க வேண்டும். அதற்கான வரியை பெற்றுக் கொண்டு மாநகராட்சியினர் வழங்கும் வில்லைகளை (டோக்கன்) நாய்களுடைய கழுத்தில் கட்டி தொங்க விட வேண்டும். இல்லையெனில், மக்களுக்கு தொல்லை கொடுக்கும் தெருநாய்களை பிடிக்க வரும் பணியாளர்கள், அனுமதி வில்லை கட்டப்படாத வீட்டு நாய்களையும் பிடித்துக் கொண்டு போய் விடுவார்கள்.

தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களை, மாநகராட்சி ஊழியர்கள் பிடித்துக் கொண்டு போய் குடும்பக் கட்டுப்பாடும் செய்து விடுவது வழக்கம். தெருநாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்த இதுதான் சிறந்த வழியாக கருதப்படுகிறது. இப்படி செய்வதால் நாய்கள் துன்புறுத்தப்படுவதோ, அவற்றின் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதோ கிடையாது.

சில சமயங்களில் விஷ ஊசி போட்டு நாய்களை கொன்று புதைத்த சம்பவங்களும் நடைபெற்றன. அப்படி செய்வதற்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், விஷ ஊசிகளில் இருந்து நாய்கள் தப்பின.

ஆனால் இப்போது தெருநாய்களின் தொல்லை அதிகரித்து இருப்பதால், அவற்றின் மீது மக்கள் கடும் வெறுப்பாக இருக்கிறார்கள்.

வீட்டு நாய்கள் தெருநாய்களாக மாறும் அவலநிலை அதிகரித்து உள்ளது. பலர், ``நானும் நாய்க்குட்டி வளர்க்கிறேன்'' என்ற பெயரில் நாய்களை வளர்க்க ஆரம்பிக்கின்றனர். அப்புறம் பிடிக்காமல் தெருக்களில் விட்டு விடுகின்றனர். அந்த நாய்கள் குட்டி போட்டு பல மடங்கு இனப்பெருக்கம் செய்து விடுகின்றன. முறையான பராமரிப்பு இல்லாததால், தெருவில் அலையும் நாய்கள் கிருமி பிடித்து சொறிநாய்களாகவும், வெறி நாய்களாக வும் மாறி விடுகின்றன.

எவ்வளவுதான் செல்லமாக வளர்த்து வந்தாலும், தங்களுடைய வீட்டில் உள்ள நாய்களுக்கு சிறு பிரச்சினை என்றால், சிலர் அவற்றை கண்ணுக்கு எட்டாத தூரத்தில் கொண்டு போய், விட்டு விடுகின்றனர். வெகு நாட்கள் வீட்டுச் சூழ்நிலையிலேயே வளர்ந்துவிட்டு, திடீரென தனிமையில் தள்ளப்பட்டதால், அந்த நாய்கள் தங்களுடைய வசிப்பிடம் எது என்பது தெரியாமலேயே அங்கும் இங்குமாக தெருக்களில் சுற்றித் திரிகின்றன. குப்பைக் கூளங்களில் கிடக்கும் உணவுகளை சாப்பிட்டு தங்களுடைய பசியை போக்கிக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகின்றன. வெளியில் உள்ள சூழ்நிலையில் வசிப்பதும் அந்த நாய்களுக்கு சிரமமானதாக மாறி விடுகிறது. நான்கு சுவர்களுக்குள் பாதுகாப்பாக வளர்ந்த அந்த நாய்களுக்கு வீட்டின் உரிமையாளர்களைத் தவிர வேறு யாரையும் தெரியாது என்பதால் தெருக்களில் போவோர் வருவோரையெல்லாம் பார்த்து குரைக்க ஆரம்பித்து விடுகின்றன. வெறி கொண்ட சில நாய்கள், பொதுமக்களை கடிக்கவும் பாய்கின்றன.

வேப்பேரி, அம்பத்தூர், ஜெ.ஜெ.நகர், போரூர், வில்லிவாக்கம், பல்லாவரம், வடபழனி உள்ளிட்ட சென்னையின் சில பகுதிகளில் தெரு நாய்களின் தொல்லை தாங்க முடியவில்லை. இரவு நேரங்களில் நாய்கள் நடமாட்டம் அதிகம் இருப்பதால், வெளியில் தனியாக செல்ல பெண்களும் குழந்தைகளும் பயப்படுகிறார்கள். நாய்கள் விடும் ஊளை சத்தத்தால், நிம்மதியாக தூங்கவும் முடிவதில்லை என்று புலம்புகிறார்கள்.

மேலும் சென்னை நகர தெருக்களில் சிற்றுண்டி விற்பனை செய்யும் தள்ளுவண்டி கடைகளுக்கு பஞ்சம் இல்லை. வயிற்றை நிரப்ப ஏதாவது மிச்சம் மீதி கிடைக்காதா? என்று தெருநாய்கள் அந்த கடைகளை சுற்றி வருவதை சாதாரணமாக பார்க்கலாம். மேலும் ஓட்டல்கள் மற்றும் கோழி இறைச்சி விற்பனை செய்யும் கடைகளில் உள்ள கழிவுகளை அருகில் உள்ள குப்பை தொட்டிகளில் வீசிவிடுகிறார்கள். அவற்றை தேடியும் நாய்கள் அங்கு உலவுகின்றன. உணவு போட்டியில் சில சமயங்களில் அவை தங்களுக்குள் அடித்துக் கொள்வதும் உண்டு. அந்த சமயத்தில் யாராவது அந்த இடத்தில் சிக்கிக் கொண்டால் அவற்றின் கடியில் இருந்து தப்புவது சிரமம்.

தெருவில் சுற்றித் திரிந்து கொண்டிருந்த வெறிநாய் ஒன்று கடித்துக் குதறியதால், சமீபத்தில் சென்னை அம்பத்தூரில் சிறுவன் ஒருவன் பலியான பரிதாப சம்பவம் நிகழ்ந்தது. இந்த சம்பவம் பெற்றோர்கள் மனதில் தெருநாய்களை பற்றிய அச்ச உணர்வை ஏற்படுத்தி உள்ளது. இதனால் தெரு நாய்களை ஒழிக்க வேண்டும் என்ற குரல் மீண்டும் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்து இருக்கிறது.

இதனால் விழித்துக் கொண்ட மாநகராட்சி ஊழியர்கள், சில நாட்களுக்கு முன்பு சுமார் 25 தெரு நாய்களை பிடித்து கொன்று புதைத்து விட்டனர். இதற்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் தெரு நாய்களை கொன்ற 3 மாநகராட்சி ஊழியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு தற்போது அவர்கள் சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

விலங்குகள் நல அமைப்பைச் சேர்ந்தவர்கள் மற்றும் செல்லப் பிராணிகள் மீது அன்பு செலுத்துபவர்களுடைய எதிர்ப்புகள் ஒரு பக்கம் இருந்தாலும், தொல்லை கொடுக்கும் தெரு நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என்பதில் பாதிக்கப்பட்டவர்கள் உறுதியாக இருக்கிறார்கள். அந்த அளவிற்கு சென்னை நகரில் நாளுக்கு நாள் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது.

வெறிநாய்களுக்கு கருணை காட்டி வரும், புளூகிராஸ் போன்ற விலங்குகள் நல ஆர்வலர்களை பாதிக்கப்பட்ட மக்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள். வெறிநாய்களை கொன்றால் எதிர்க்கும் இவர்கள், அந்த நாய்களை பிடித்துக் கொண்டுபோய் தங்களுடைய வீடுகளில் வைத்து வளர்க்க வேண்டியதுதானே என்று கேள்வி கேட்கின்றனர்.

"புளூகிராஸ் அமைப்பைச் சேர்ந்த சிலர், தெருவில் சுற்றித் திரியும் நாய்களுக்கு கறிச் சோறும், பிஸ்கெட்டும் போட்டு விட்டு செல்கின்றனர். இதனால், அந்த நாய்கள் தெருக்களை விட்டு செல்லாமல் அங்கேயே சுற்றி திரிகின்றன. அவர்களுக்கு நாய்கள் மீது இரக்கம் இருந்தால், வீட்டுக்கு கொண்டு சென்று சோறு போட்டு வளர்க்கட்டும். தெருக்களில் போட்டு, அங்கேயே திரிய விட வேண்டாம்" என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

தெரு நாய்களுக்கு ஆதரவு ஒருபுறம், எதிர்ப்பு ஒருபுறம் என்று இருக்கும் நிலையில், மாநகராட்சி நடுநிலையோடு செயல்பட்டு இந்த பிரச்சினைக்கு ஒரு நல்ல தீர்வு காண்பதோடு, நாய் தொல்லையில் இருந்து சென்னைவாசிகளை பாதுகாக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

***

நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு

சென்னை மாநகராட்சி பகுதியில், தற்போது ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தெரு நாய்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டு உள்ளது.

வீடுகளில் நாய்களை வளர்ப்போர், முறையாக தடுப்பூசி போட்டு அதை வெளியில் விடாமல் பாதுகாத்து வருகின்றனர். ஆனால், தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களுக்கு சரியான பராமரிப்பு இல்லாததால், அவை கிருமி தொற்று ஏற்பட்டு வெறி நாய்களாகி விடுகின்றன.

அந்த மாதிரியான நாய்கள் கடித்தால், `ரேபிஸ்' என்ற நோய் ஏற்படுகிறது. எனவே, நாய் கடித்து விட்டால் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும். இல்லையெனில் நாய்க்கடி விஷத்தால் தலைவலி போன்றவை உண்டாகி மரணம் ஏற்படும் ஆபத்து உள்ளது.

சென்னை நகரில் தினமும் 75-க்கும் மேற்பட்டோர் வெறிநாய் கடியால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவதாகவும், அம்பத்தூர் சிறுவனையும் சேர்த்து இந்த ஆண்டில் மட்டும் 4 பேர் நாய்க்கடிக்கு பலியாகி இருப்பதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டில் 21 பேரும், அதற்கு முந்தைய ஆண்டில் 12 பேரும், 2009-ம் ஆண்டில் 13 பேரும் நாய்க்கடிக்கு பலியாகி உள்ளனர்.

ஆண்டுக்கு சுமார் 40 ஆயிரம் தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடப்படுவதாகவும், தெரு நாய்களை பிடித்து குடும்ப கட்டுப்பாடு செய்வதற்கென்று தனியாக 6 வாகனங்கள் வைத்திருப்பதாகவும், நாய்கள் தொல்லை குறித்து பொதுமக்கள் 1913 என்ற தொலைபேசி எண்ணுக்கு புகார் தெரிவிக்கலாம் என்றும் மாநகராட்சி அதிகாரிகள் கூறி உள்ளனர்.

***
நாய் வளர்க்க லைசென்சு

வீட்டில் நாய் வளர்க்க வேண்டும் என்றால் பல நாடுகளில் லைசென்சு வாங்க வேண்டும்.

மும்பை நகரில் கூட அந்த கட்டுப்பாடு உள்ளது. மும்பை மாநகராட்சி சட்டத்தின் 191-ஏ பிரிவின்படி, 6 மாதத்திற்கு மேற்பட்ட வயது கொண்ட நாய்களை வைத்திருக்கும் உரிமையாளர்கள், ரூ.100 செலுத்தி உரிமம் வாங்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. அந்த நாய் உயிருடன் இருக்கும் வரை ஒவ்வொரு வருடமும் ரூ.100 செலுத்தி உரிமத்தை புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

எப்படியெனில், ஒருவர் 7 வயதான நாய் ஒன்றை வைத்திருக்கிறார் என்றால், முதல் தடவை அவர் ரூ.700 செலுத்தி உரிமம் பெற வேண்டும். பின்னர் ஒவ்வொரு ஆண்டும் ரூ.100 செலுத்தி அந்த உரிமத்தை புதுப்பித்து வர வேண்டும்.

உரிமம் வாங்குவதற்கு நாய்களின் அடையாள புகைப்படங்களையும், கொண்டு செல்ல வேண்டும்.