Pages

Monday, November 28, 2011

சரணாலயத்தை விட்டு இடம் பெயரும் வெளிநாட்டு பறவைகள்

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=356491
பதிவு செய்த நாள் : நவம்பர் 26,2011,21:23 IST
 
ராமநாதபுரம் : சரணாலயங்களில் போதிய தண்ணீர் வசதி இல்லாததால், அடைக்கலம் தேடி வந்த வெளிநாட்டு பறவைகள், வெளி இடங்களுக்கு இடம் பெயர்ந்து வருகின்றன. ராமநாதபுரம் மாவட்டத்தில் சித்திரங்குடி, காஞ்சிரங்குளம், மேல செல்வனூர், கீழ செல்வனூர், தேர்த்தங்கால் ஆகிய பறவைகள் சரணாலயம் உள்ளது. இந்த சரணாலயங்கள் கண்மாயை அடிப்படையாக கொண்டு அமைந்தவை. ஆஸ்திரேலியா, ரஷ்யாவின் சைபீரியா மற்றும் கடுங்குளிர் பிரதேசங்களிலிருந்து, பிளமிங்கோ, உள்ளான் வகை பறவைகள், உள்பட ஏராளமான வெளிநாட்டு மற்றும் வடநாட்டு பறவைகள் வருகின்றன. நவம்பர், டிசம்பரில் வரும் பறவைகள், ஜூன், ஜூலை வரை தங்கியிருந்து, இரண்டு முதல் மூன்று முறை வரை இனப்பெருக்கத்தில் ஈடுபடும்.

இந்த கண்மாய்கள் தூர்வாரப்பட்டு ஏழு ஆண்டுகள் ஆகின்றன. மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் 100 செ.மீ.,க்கும் மேலாக மழை பெய்து வரும் நிலையில், கமுதி, முதுகுளத்தூர், கடலாடி பகுதிகளில் 30 முதல் 40 செ.மீ.,க்குள்தான் மழை பெய்துள்ளது. கடந்தாண்டு மாவட்டம் முழுவதும் அக்டோபர் வரை 1180 மி.மீ. மழை பெய்திருந்தது. இந்தாண்டு அக்டோபர் வரை 461.71 மி.மீ., மற்றும் அக்டோபரில் 265.32 மி.மீ., மழை பெய்தது. இதனால் கண்மாய்களில் சிறு குட்டை போன்ற அளவில்தான் தண்ணீர் உள்ளது. இங்கு கூடு கட்டாமல் ராமநாதபுரம், கீழக்கரை, மண்டபம், உச்சிப்புளி போன்ற இடங்களுக்கு இடம் பெயர்ந்து வருகின்றன. சில பறவைகள் வெளிநாடுகளுக்கு திரும்பி செல்கின்றன.

அரசு பஸ் மோதி காளை மாடு பலி: உடன் திரிந்த மாடு பாசப்போராட்டம்

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=357889
பதிவு செய்த நாள் : நவம்பர் 29,2011,00:47 IST
 

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரியில் அரசு பஸ் மோதி காளை மாடு இறந்தது. உடன் திரிந்த மாடு, இறந்த மாட்டை தலையால் முட்டி எழுப்பியதை பார்த்தவர்களின் நெஞ்சம் நெகிழ்ந்தது.

கிருஷ்ணகிரி ஆவின் மேம்பாலம் அருகே, சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மாலை 5 மணிக்கு, இரண்டு காளை மாடுகள் ரோட்டில் முட்டி மோதி விளையாடித்திரிந்தன.அப்போது, பெங்களூருவில் இருந்து விழுப்புரம் நோக்கி வந்த அரசு பஸ் சாலையில் ஓடி திரிந்த மாடுகளில், ஒரு காளை மாடு மீது மோதியது. இதில், தலையில் பலத்த காயமடைந்த மாடு, சாலையில் விழுந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியது. உடன் இருந்த மாடு பெரும் சத்தத்துடன் சாலையில் விழுந்த மாட்டை தலையில் முட்டி எழுப்பியது. தொடர்ந்து, விபத்தில் காயமடைந்த மாட்டை மற்றொரு மாடு சுற்றி சுற்றி வந்து தலையால் முட்டி எழுப்பியது.மனிதர்கள் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தாலும், அந்த வழியே செல்வோர் பார்த்தும் பார்க்காமல் போகும் இந்தக் காலத்தில், கால்நடைகள் மனிதாபிமானத்துடன் உடன் வந்த மாடு இறந்ததை அறியாமல் முட்டி எழுப்பியதை பார்த்தவர்கள் நெஞ்சம் நெகிழந்தனர்.

விபத்தில் சிக்கிய மாடு இறந்ததால், உடன் வந்த காளை மாடு பெரும் சத்தம் போட்டு அந்த பகுதியில் வேடிக்கை பார்க்க குவிந்த பொதுமக்களை துரத்தியது. இதனால், அந்த பகுதியில் நின்று வேடிக்கை பார்த்த பொதுமக்கள், நாலாபுறமும் சிதறி ஓடினர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது.பொதுமக்கள் ஒன்று சேர்ந்து அந்த இடத்தில் இருந்து, காளை மாட்டை விரட்டி அடித்தனர். ஆனால், மாடு சிறிது தூரம் ஓடி சென்று அந்த பகுதியையே சுற்றி சுற்றி வந்தது. சாலையில் இறந்த காளை மாட்டை பொதுமக்கள் அகற்றினர்.

Friday, November 25, 2011

நண்பேன்டா...! டீ மாஸ்டருடன் விளையாடும் அணில்: ஆச்சர்யப்பட வைக்கும் பாசப் பிணைப்பு


http://www.dinamalar.com/News_Detail.asp?Id=354769
பதிவு செய்த நாள் : நவம்பர் 24,2011,01:17 IST

விழுப்புரம் : விழுப்புரத்தில், ஒரு டீ கடைக்காரருடன் விளையாடியபடி நட்புடன் பழகி வரும் அணிலின் பாசப் பிணைப்பு, ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம், கணபதி நகரை சேர்ந்தவர் வேல்முருகன். திருச்சி நெடுஞ்சாலையில் மகளிர் கல்லூரி எதிரே, டீ கடை வைத்துள்ளார். எப்போதும் இவருடன் விளையாடிக் கொண்டிருக்கும் அணிலைப் பார்த்து, கடைக்கு வரும் மக்கள் ஆச்சர்யப்படுகின்றனர்.பங்க் கடையில் விற்பனை, டீ போடும் போதும், அவரது தோளிலும், கைகளிலும் திரிந்தபடி விளையாடிக் கொண்டிருக்கிறது அந்த அணில். கண்ணில் பட்டவுடன் ஓடிவிடும் சுபாவம் கொண்ட அணில், ஒருவருடன் நட்புறவாக ஒட்டிக்கொண்டுள்ளது, அனைவரையும் ஆச்சர்யப்பட வைக்கிறது.அவர் கொடுக்கும் உணவுகளை சுவைத்தபடி சுற்றி வரும் அந்த அணில், டீ கடை மேல் கூரை, பங்க் கடை பகுதிகளில் உலவுகிறது, காஞ்சன் என செல்லமாக அவர் அழைத்த குரலுக்கு, உடனே ஓடி வந்து, அவர் தோள் மீது உட்கார்ந்து விளையாடுகிறது. அவருடன் சண்டை கூட போடுகிறது.

அணிலுடன் ஏற்பட்ட நட்பு குறித்து வேல்முருகன் கூறியதாவது:கடந்த இரண்டு மாதங்களுக்கு முன், கடையின் அருகே இருந்த மரத்தின் கூட்டிலிருந்து, இந்த அணில் குஞ்சு கீழே விழுந்து கிடந்தது. கண் திறக்காமல் இருந்த அணில் குஞ்சை எடுத்து, பால் வாங்கி ஊற்றி வளர்த்தேன்.பால், பிஸ்கட், சாதம் ஆகியவற்றை உணவாகக் கொடுத்து வந்தேன். அணில் என்னுடனே ஒட்டிக் கொண்டது. காலையில் கடை திறந்தவுடன், என் மீது அமரும். மாலை இருள் சூழ்ந்தவுடன், 6 மணிக்கு, கடையின் உள்ளே சென்றுவிடும்; வெளியே வராது. மறு நாள் காலை கடையைத் திறந்தவுடன், என்னுடன் வந்துவிடும்.பால், பிஸ்கட், சாதம், வறுகடலை, மணிலா பயிறு வடை என, நான் கொடுப்பது அனைத்தையும் சாப்பிடும். சிக்கன், மட்டன், மீன் உணவையும் இது ருசித்துள்ளது. நான் டீ போடும் போதும், விற்பனை செய்யும் போதும், என் மீது விளையாடிக் கொண்டிருக்கும். எந்த பொருளையும் வீணடிக்காது; நான் கொடுப்பதை மட்டுமே சாப்பிடும்.மற்றவர்கள் மீது விட்டால், நுகர்ந்து பார்த்து விட்டு, உடனே திரும்பி என் மீது ஒட்டிக் கொள்ளும். நான் வெளியூர் செல்லும் போதும், என்னுடன் பைக்கில் பலமுறை பயணித்துள்ளது. உறவினர் திருமணத்திற்கு வெளியூர் சென்ற போது, என் பாக்கெட்டினுள் பயணித்து, திரும்பி வந்துள்ளது.இவ்வாறு வேல்முருகன் கூறினார்.இந்த பாசப் பிணைப்பை பொதுமக்கள் பலரும் பாராட்டிச் செல்கின்றனர்.

எலியைப் பிடித்தால் சன்மானம்: நாய்பிடிக்க இலவச பயிற்சி:மாநகராட்சி புது முயற்சி

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=355361
பதிவு செய்த நாள் : நவம்பர் 25,2011,00:37 IST

சென்னை: சுதந்திரமாக உலா வரும் எலி, நாய்களை பிடித்துக் கொடுத்தால், சன்மானமாக பணம் தரப்படும் என, மாநகராட்சி அறிவித்துள்ளது. ஆர்வமுள்ளோருக்கு எலிப்பிடிக்க பயிற்சியும் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை மாநகரில், தெருநாய்களின் ஆதிக்கம் மட்டுமல்ல, எலி மற்றும் பெருச்சாளிகளின் தொல்லை, அதிகமாகவே உள்ளது. தெரு நாய் கடியால் "ரேபிஸ்' நோய் பரவும் என்பதால், அவற்றைப் பிடித்து இனப்பெருக்கக் கட்டப்பாடு அறுவைச் சிகிச்சை செய்து, ரேபிஸ் தடுப்பூசி போட்டு, பிடித்த பகுதியிலேயே கொண்டு போய் விடும் பணியை, மாநகராட்சி செய்து வருகிறது. பேசின்பாலம் சாலையில், நாய் இனப்பெருக்கக் கட்டுப்பாடு மையம் செயல்படுகிறது. புகார்களின் அடிப்படையில், தெருநாய்கள் பிடித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. நாய் பிடிக்கும் வாகனங்கள் ஆறும், இதில் நிரந்தர பணியாளர்கள் நான்கு பேரும், ஒன்பது தனியார் தொழிலாளர்களும் உள்ளனர். சராசரியாக மாதத்திற்கு, 1,200 நாய்கள் வரை பிடிக்கப்படுகின்றன.

எலி மற்றும் பெருச்சாளிகளால் ஏற்படும் தொல்லைகளைக் கட்டுப்படுத்த, கிடங்குகள், காய்கறி அங்காடிகள், உணவு விடுதிகள், குப்பை கொட்டும் இடங்களில் எலியை ஒழிக்க விஷம் வைக்கப்பட்டு, கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. தெரு நாய்கள் மற்றும் எலி, பெருச்சாளிகளைக் கட்டுப்படுத்த, பொது நோக்குடைய தனியாரை பயன்படுத்த, மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இவை தொடர்பான மாநகராட்சி அறிவிப்புகள்:

நாய் பிடிக்க இலவச பயிற்சி:
* தெரு நாய் பிடிக்கும் பணியில் ஈடுபடும் தனியாருக்கு, நாய் ஒன்றுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையை, 25 ரூபாயிலிருந்து, 50 ரூபாயாக உயர்த்தப்படுகிறது.
* தன்னார்வமுள்ளவர்களுக்கு, நாய் பிடிக்கும் பயிற்சி இலவசமாக வழங்கப்படும். அவர்கள் பிடிக்கும் நாய்களுக்கு, 50 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
* தன்னார்வம் கொண்டவர்கள் பிடித்துக் கொடுக்கும் பெருச்சாளி, மற்றும் நகர எலிகளுக்கு, எண்ணிக்கை அடிப்படையில், ஊக்கத்தொகை வழங்கவும் மாநகராட்சி முடிவு செய்துள்ளது. நேற்று முன்தினம் நடந்த, "கிரேட்டர்' சென்னையில் முதல் கூட்டத்தில், இதற்கான ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது.

Monday, November 21, 2011

இறந்தது இந்தியாவின் கடைசி சைபீரிய புலி


http://www.dinamalar.com/News_Detail.asp?Id=353155
பதிவு செய்த நாள் : நவம்பர் 21,2011,09:27 IST


டேராடூன் : உத்தர்காண்ட் மாநிலத்தில் உள்ள நைனிடால் உயிரியல் பூங்காவில், இந்தியாவின் கடைசி சைபீரிய புலியான குணால் மரணமடைந்துள்ளது உயிரியல் ஆர்வலர்களை பெரும் கலக்கமடைய செய்துள்ளது. 1997ம் ஆண்டு, குணால் மற்றும் மகேஷ் எனும் 2 சைபீரிய புலிகள், டார்ஜிலிங் உயிரியல் பூங்காவிலிருந்து நைனிடால் உயிரியல் பூங்காவிற்கு கொண்டு வரப்பட்டன. இதில், ‌மகேஷ் பெயர் கொண்ட புலி, கடந்த 2001ம் ஆண்டில் மரணமடைந்தது. இந்நிலையில், இந்தியாவில் உள்ள கடைசி சைபீரிய புலி என்ற பெருமையை குணால் புலி பெற்றது. வயது மூப்பு காரணமாக, குணால் புலியும் மரணமடைந்துள்ளதாக பூங்கா அதிகாரிகள் தெரிவித்தனர்

Saturday, November 19, 2011

பூங்காவில் ஐந்து புலிக்குட்டிகள் இறந்தன


பதிவு செய்த நாள் : நவம்பர் 20,2011,06:02 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=352590

புவனேஸ்வர் : நந்தன்கண்ணன் விலங்கியல் பூங்காவில் ஒரு வெள்ளை புலி குட்டி உள்பட ஐந்து புலிக்குட்டிகள் இறந்தன. கடந்த புதனன்று பிறந்த இந்த புலிக்குட்டிகள், ஊழியர்களின் கவனக்குறைவால் பராமரிப்பில் ஏற்பட்ட குறையினால் இறந்தன. இது குறித்து பூங்கா நிர்வாகத்தினர், தாய் புலி, பால் தராததால் குட்டிகளுக்கு தேவையான சத்துகள் கிடைக்காமல் இறந்ததாக கருத்து தெரிவித்தனர்

கிணற்றில் விழுந்த மாடு மீட்பு


பதிவு செய்த நாள் : நவம்பர் 17,2011,22:50 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=350927

குஜிலியம்பாறை : சின்னலுப்பை ஊராட்சி தோப்பாகவுண்டனூரை சேர்ந்தவர் கருணாநிதி, 45. இவர், வளர்த்து வந்த எருமை மாடு, தோட்டத்து கிணற்றில் விழுந்தது. வேடசந்தூர் தீயணைப்பு நிலைய அலுவலர் தண்டபாணி தலைமையிலான வீரர்கள் உயிருடன் மீட்டனர்.

Monday, November 7, 2011

பக்ரீத் அன்று பசுக்களை கொல்லாதீங்க: துணைவேந்தர் நவ்மானி வேண்டுகோள்


பதிவு செய்த நாள் : நவம்பர் 06,2011,21:47 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=344535

தியோபந்த்:""இந்துக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், பக்ரீத் பண்டிகைக்காக, பசுக்களை கொல்வதை முஸ்லிம்கள் தவிர்க்க வேண்டும்,'' என, தாரூல் உலூம் தியோபந்த் பல்கலைக்கழக துணை வேந்தர் மவுலானா அபு காசிம் நவ்மானி கூறியுள்ளார்.

பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, நவ்மானி கூறியதாவது: இந்துக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், பக்ரீத் பண்டிகைக்காக முஸ்லிம்கள் பசுக்களை கொல்வதை தவிர்க்க வேண்டும். பண்டிகையின் போது, சுகாதாரத்தை பேணி காக்க சுகாதாரத் துறையினருக்கு முஸ்லிம்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மேலும், பிறந்த நாள் கொண்டாடுவது மேற்கத்திய கலாசாரம் என்பதால், அதை கொண்டாடுவதை தவிர்க்க வேண்டும். பிறந்த நாள் கொண்டாடுவது ஷரிஅத் சட்டத்திற்கு எதிரானது.இவ்வாறு அபு காசிம் நவ்மானி கூறினார்.