Pages

Wednesday, June 29, 2011

காணாமல் போன பிரான்ஸ் நாட்டு நாயை தேடும் தம்பதியர்

பதிவு செய்த நாள் : ஜூன் 29,2011,23:59 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=266832

புதுச்சேரி:காணாமல் போன வளர்ப்பு நாயை, பிரெஞ்சு குடியுரிமை பெற்ற பெண், வீதி வீதியாக தேடி வருகிறார்.புதுச்சேரி, முத்தியால்பேட்டை ரொசாரியோ வீதியைச் சேர்ந்தவர் இருசப்பன், 50. இவரது மனைவி பஸ்தே பரிமளா, 47. பிரெஞ்சு குடியுரிமை பெற்ற இருவரும், பிரான்ஸ் நாட்டில் தனியார் கம்பெனியில் பணியாற்றி வந்தனர். கடந்த 15 நாட்களுக்கு முன், இருவரும் புதுச்சேரியில் உள்ள தங்கள் வீட்டிற்கு வந்தனர்.பிராணிகள் மீது அதிக பற்று கொண்ட பரிமளா, பிரான்சிலிருந்து வரும் போது, வளர்ப்பு நாய் ஒன்றை உடன் அழைத்து வந்தார். இதற்காக, சென்னையில் உள்ள மத்திய வன விலங்கு மையத்தில் அனுமதியும் பெற்றுள்ளார். புதுச்சேரியில் உள்ள வீட்டில் பாதுகாப்பாக வளர்க்கப்பட்டு வந்த இந்த நாய், திடீரென கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு காணாமல் போய் விட்டது.

இடது காலில் காயம்பட்ட நாயை, மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்குள், காணாமல் போய் விட்டது. இது குறித்து முத்தியால்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். ஆனால், அவர்கள் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை.அந்த நாய் கழுத்தில் நெம்பர் பதித்த பெல்ட் இணைக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் நாயை தேடியும் கிடைக்கவில்லை. நாயை கண்டுபிடித்து தருவோருக்கு சன்மானம் வழங்கப்படும் என, (நாயின் படம் பதித்த) பிரசுரங்களை அச்சிட்டு, வீடு வீடாக கொடுத்து, தேடி வருகின்றனர்


Tuesday, June 28, 2011

பனப்பாக்கம் அருகே ஏரியில், லட்சக்கணக்கான மீன்கள் செத்து மிதந்தன


பனப்பாக்கம் அருகே ஏரியில், லட்சக்கணக்கான மீன்கள் செத்து மிதந்தன
விஷம் கலக்கப்பட்டதா? போலீஸ் விசாரணை

பனப்பாக்கம், ஜுன்.29-
http://dailythanthi.com/article.asp?NewsID=656341&disdate=6/29/2011&advt=2

பனப்பாக்கம் அருகே ஏரியில் லட்சக்கணக்கான மீன்கள் செத்து மிதந்தன. ஏரியில் விஷம் கலக்கப்பட்டதால் இது நடந்ததா? என்று, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஏரியில் மீன் வளர்ப்பு

வேலூர் மாவட்டம் பனப்பாக்கத்தை அடுத்த உளியநல்லூர் கிராமத்தில் பெரிய ஏரி உள்ளது. பொதுப்பணித்துறைக்கு சொந்தமான அந்த ஏரியில் எப்போதும் தண்ணீர் நிறைந்திருக்கும். அந்த ஏரியை, அதே கிராமத்தை சேர்ந்த தனசேகரன் என்பவர் ஒரு ஆண்டு காலத்திற்கு குத்தகைக்கு எடுத்திருந்தார்.

அவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு, வாலாஜா அருகே உள்ள ஒரு தனியார் மீன் பண்ணையில் இருந்து சுமார் 85 ஆயிரம் மீன் குஞ்சுகளை வாங்கி வந்து, அந்த ஏரியில் விட்டு வளர்த்து வந்தார். நாளடைவில் குஞ்சுகள் வளர்ந்து, இனப்பெருக்கம் செய்து, லட்சக்கணக்காக பெருகின. ஜிலேபி, கட்லா, ரோகு, சீசீ, புல்கந்த், கண்ணாடி போன்ற பலவகை மீன்கள் ஏரியில் இருந்து வந்தன.

செத்து மிதந்தன

தனசேகரன் தினமும் காலையில் வந்து, ஏரியில் இருந்து பெரிய மீன்களை பிடித்து விற்பனை செய்வது வழக்கம். நேற்று காலை 6 மணியளவில் தனசேகரன் வழக்கம்போல் தனது நண்பர்களுடன் மீன் பிடிப்பதற்காக ஏரிக்கரைக்கு வந்தார். அப்போது, ஏரியில் இருந்த மீன்கள் செத்து கரை ஒதுங்கி கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

சிறிய மீன் குஞ்சு முதல், சுமார் 2 கிலோ எடை வரை உள்ள லட்சக்கணக்கான மீன்கள் கரையில் ஒதுங்கி கிடந்தன. உடனே ஊருக்குள் சென்று, அதுபற்றி கிராம மக்களுக்கு தகவல் கொடுத்தார். கிராம மக்கள் திரண்டு வந்து, ஏரியில் மீன்கள் செத்து கரை ஒதுங்கி கிடந்ததை பார்த்து வருத்தம் அடைந்தனர்.

பரிசோதனைக்கு

பின்னர் இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரிக்கும், சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும், நெமிலி போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் மதியரசன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜன், கிராம நிர்வாக அதிகாரி குப்புராமன் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஏரிக்கரைக்கு வந்தனர்.

அவர்கள் ஏரியில் செத்து மிதந்த மீன்களை பார்வையிட்டு, அவை இறந்ததற்கான காரணம் என்ன? என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். மீன்கள் செத்ததற்கான காரணத்தை அறிவதற்காக, ஏரி தண்ணீரை 2 பாட்டில்களில் சேகரித்தனர். அவை பரிசோதனைக்காக சென்னை ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என்று, சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

விஷம் கலப்பா?

விரோதம் காரணமாக விஷமிகள் யாரேனும் ஏரி தண்ணீரில் விஷம் கலந்து விட்டார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணத்தினால் மீன்கள் செத்து மிதந்தனவா? என்பது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும், செத்து மிதந்த மீன்கள் அனைத்தையும் சேகரித்து, அதே ஏரிக்கரையில் புதைப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.

இளைஞர்கள் காவல்

ஏரி தண்ணீரின் பரிசோதனை அறிக்கை வரும்வரை ஆடு, மாடுகள் ஏரி தண்ணீரை குடித்து விடாதபடி பாதுகாப்பதற்காக, உளியநல்லூர் கிராமத்தை சேர்ந்த இஞைர்கள் சிலர், ஏரிக்கரையில் காவல் காத்து வருகின்றனர்.

கிராம ஏரியில் லட்சக்கணக்கான மீன்கள் செத்து மிதந்த சம்பவம், அந்த கிராம மக்களை வருத்தம் அடைய செய்துள்ளது.

பூனைக்கு பால் கொடுக்கும் நாயின் தாய்ப் பாசம்


பூனைக்கு பால் கொடுக்கும் நாயின் தாய்ப் பாசம் கிராம மக்களை வியப்பில் ஆழ்த்திய பாசப் பிணைப்பு

அந்திïர், ஜுன். 29-
http://dailythanthi.com/article.asp?NewsID=656419&disdate=6/29/2011&advt=2

அந்திïர் அருகே பூனைக்கு பால் கொடுக்கும் நாயின் தாய்பாசத்தை பொதுமக்கள் வியப்பாக பார்த்து செல்கிறார்கள்.

நாயும்- பூனையும் நண்பர்கள்

ஈரோடு மாவட்டம் அந்திïர் அருகே உள்ள தவுட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் பழனியம்மாள். இவர் அதே பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். பழனியம்மாள் தன்னுடைய டீக்கடையில் ஒரு நாய் வளர்த்து வந்தார். இந்த நிலையில் ஒரு பூனைக்குட்டியையும் எடுத்து வந்து வளர்த்தார்.

இயற்கையாகவே பூனையும், நாயும் எதிரிகள். ஆனால் இதற்கு மாறாக டீக்கடையை சுற்றிவந்த பூனைக்குட்டி நாயுடன் நெருக்கமாக பழகத்தொடங்கியது. நாயும் நட்புடன் பழகத்தொடங்கியது. அதன்பின்னர் நாயும், பூனையும் அடிக்கடி டீக்கடையில் விளையாடத்தொடங்கின. டீக்கடை வாசலிலும், அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்திலும் நாயும், பூனையும் எப்போது ஒன்றாக விளையாடியபடி இருக்கும்.

பூனைக்கு பால் கொடுக்கிறது

இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு நாய் 5 குட்டிகள் போட்டது. நாய்க்குட்டிகள் தாயிடம் பால் குடிப்பதை பார்த்த பூனைக்குட்டி தானும் நாயிடம் சென்று பால் குடித்தது. நாயும் பூனையை விரட்டாமல் தன்னுடைய குட்டிகளுக்கு பால் கொடுப்பது போலவே பூனைக்கும் பால் கொடுத்தது.

பூனைக்கு, நாய் தாய்மை உணர்வுடன் பால் கொடுப்பதை அந்தப்பகுதி பொதுமக்கள் ஆச்சரியத்துடன் வந்து பார்க்கிறார்கள். சிலர் அந்த காட்சியை தங்களுடைய செல்போனிலும் படம் பிடித்து செல்கிறார்கள். பூனை மீது நாய் காட்டும் தாய்ப்பாசத்தை கண்டு கிராமத்து மக்கள் வியப்போடு பார்த்து செல்கின்றனர்.

வாயில்லா ஜீவன்களுக்கு வாழ்வு தரும் பெண்மணி: அரசின் உதவித் தொகை கேட்டு அலையும் பரிதாபம்


பதிவு செய்த நாள் : ஜூன் 29,2011,01:12 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=266353





இயந்திரமயமான உலகில் மனிதாபிமானம், இரக்கம் என்பதெல்லாம் மிகவும் அரிதாகிவிட்டது. ஆனால், சென்னையை அடுத்த வண்டலூரில் வசிக்கும் ஒரு பெண்மணி, வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்து, பராமரித்து வருகிறார். அவர் பெயர் சாந்தா சிவராமன். வயது 56. நவரத்ன வியாபாரம் செய்து வந்த கணவர் சமீபத்தில் இறந்துவிட்டார். குழந்தைகள் இல்லை. தற்போது 11 நாய்களும், 35 பூனைகளும் இவரின் பராமரிப்பில் உள்ளன.

இது குறித்து சாந்தா சிவராமன் கூறி யதாவது:எனது 17 வயதில் இருந்தே வாயில்லா ஜீவன்களுக்கு உதவ வேண் டும். அவை துன்பப்படும் போது மனது பதைபதைக்கும். அவற்றை வீட்டிற்கு எடுத்துவந்து, உணவளிப்பதை வழக்கமாக கொண்டேன். திருமணத்திற்கு பின்னும் எனது இந்த பழக்கம் தொடர்ந்தது. வீதிகளில் கேட்பாரன்றி கிடக்கும் நாய், பூனை உள்ளிட்டவைகளை எடுத்து வந்து, பராமரிக்க துவங்கினேன்.வீட்டு விலங்குகளை பராமரிக்க முடியாதவர்களும் அவற்றை என்னிடம் கொண்டு வந்து விடுவர். குட்டியில் இருந்தே பழகுவதால் அவை என் மீது மிகவும் பிரியமாக இருக்கும். ஒரு கட்டத்தில் எங்கள் வீடு, ஆதரவற்ற செல்லப் பிராணிகளின் சரணாலயமாகவே மாறிவிட்டது. பிறக்கும் குட்டிகளுக்கு நட்சத்திரம் பார்த்து பெயர் வைப்பேன். கருவுற்ற நாய், பூனைகளுக்கு சீமந்தம் நடத்துவேன்.

எங்கள் குழந்தைகளைப் போலவே அவற்றை வளர்த்து வருகிறேன். ஆனால், எனது கணவர் இறந்த பின், இந்த பிராணிகளை பராமரிப்பது கஷ்டமாகிவிட்டது. இவற்றை பராமரிக்க எனது தங்கை தான் அவ்வப்போது பணம் தருகிறாள். எனது சாப்பாட்டிற்கே சிரமமாகிவிட்ட நிலையில், என்னை நம்பியுள்ள இந்த வாயில்லா ஜீவன்களை பற்றித் தான் கவலையாக உள்ளது. வருமானம் எதுவும் இல்லாமல் போய்விட்டதால், அரசின் முதியோர் உதவித் தொகை பெற முயற்சி செய்து வருகிறேன். ஆனால், பெற முடியவில்லை. அலைக்கழிப்பு தான் மிச்சம்.

வீட்டில் இத்தனை உயிர்களை விட்டுவிட்டு, வெளியில் செல்ல முடியவில்லை. இருப்பினும், வறுமையிலும் இந்த வாயில்லா ஜீவன்களை வாடாமல் வைத்துள்ளேன். அவைகளுக்கு தேவையான பிஸ்கட், பால் போன்றவைகளை யாராவது கொடுத்தால் அவர்களுக்கு நன்றியுள்ளவளாக இருப்பேன், என்றார். ஒரு காலத்தில், நல்ல வருமானத்துடன் இருந்த சாந்தா சிவராமன், தற்போது ஒருவேளை சோற்றுக்கே தடுமாறுகிறார். மூட்டை மூட்டையாக அரிசி வாங்கி வைத்து பழக்கப்பட்ட இவர், தற்போது இலவச அரிசிக்காக ரேஷன் கடையில் போய் நிற்க வேண்டியுள்ளது."நான் இறந்த பின் இந்த குழந்தைகள் (நாய், பூனை உள்ளிட்டவைகளை அவர் குழந்தைகள் என்றே அழைக்கிறார்) என்ன செய்யப் போகிறார்களோ' என்று அவர் கேட்கும் போது, ஒரு தாயின் பாசம் தெரிகிறது. அரசு அதிகாரிகள் அவருக்கு முதியோர் உதவித் தொகை கிடைக்கச் செய்தால், அது ஓரளவிற்கு உதவும்.

தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் உதவ முன் வரலாம். அவரின் தொடர்பு எண்: 97911 73134. கடந்த 35 ஆண்டுகளாக வாயில்லா ஜீவன்களோடு வாழ்ந்து வரும் இவர், கடைசி காலத்தில் வறுமையில் சிக்கியுள்ளது பெரும் சோகமே.

*பராமரித்து வரும் நாய், பூனைகளுக்கு செல்லக்குட்டி, குட்டிமா, கண்ணா என விதவிதமாக பெயர் சூட்டி, அழைக்கிறார் சாந்தா சிவராமன்.
*வீட்டிற்கு வருபவர்களை அவர் வரவேற்கும் முன்னரே, அங்குள்ள நாய்கள் "வாங்க வாங்க' என்பது போல இரண்டு முன்னங்கால்களையும் தூக்கி வரவேற்கின்றன.
*சாப்பாடு தயார் என்றவுடன் ஒரு சிறிய தட்டைக் கொண்டு சுவரில் தட்டவும், எங்கெங்கோ இருந்த பிராணிகள் அடுத்த வினாடி அங்கு ஆஜர் ஆகிவிடுகின்றன.

Thursday, June 9, 2011

வனத்துறையின் அலட்சியத்தால் நாய்களுக்கு இரையாகும் மான்கள்


பதிவு செய்த நாள் : ஜூன் 09,2011,03:08 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=254698

உளுந்தூர்பேட்டை : உளுந்தூர்பேட்டை அருகே வனத்துறையின் அலட்சியத்தால் மான்கள் நாய்களுக்கு இரையாகி வரும் பரிதாப நிலை தொடர்கிறது. விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை வன சரகத்திற்குட்பட்டு 5,000 ஏக்கர் பரப்பளவில் காப்பு காடுகள் உள்ளன. இப்பகுதியில் அதிகளவில் மான்கள் உள்ளன. சில வகை மயில், நரி, காட்டு பன்றிகளும் உள்ளன. ஆனால் வன சரகத்தின் சார்பில் இந்த வன விலங்குகளுக்கு எந்தவித பாதுகாப்பு வசதிகளும் செய்யப்படவில்லை. வன பகுதியில் குடிநீர் வசதி கூட செய்து தராததால், கோடை காலத்தில் தண்ணீரை தேடி கிராம மக்கள் வசிக்கும் பகுதிக்கு அதிகளவில் வருகின்றன. இதனால் நாய்களிடமும், வாகனங்களிலும் மான்கள் சிக்கி உயிரைவிடும் சம்பவங்கள் ஆண்டுதோறும் நிகழ்ந்து வருகின்றன. நேற்று காலை பாண்டூர் காப்பு காட்டு பகுதியில் இருந்து ஆண் புள்ளி மான் ஒன்று தண்ணீரை தேடி உ.கீரனூர் கிராம ஏரிக்கு வந்தது. அங்கு வந்த நாய்கள் மானை விரட்டி கடித்து குதறியதில் பரிதாமாக இறந்தது. இது போல் கடந்த சில மாதங்களுக்கு முன் வண்டிப்பாளையம் கிராமத்திற்கு தண்ணீரை தேடி வந்த மானை நாய்கள் கடித்ததால் இறந்தது. கடந்தாண்டு கூ.கள்ளக்குறிச்சியில் தண்ணீரை தேடி வந்த மான் வாகனம் மோதி இறந்தது. எறைஞ்சி பகுதியில் அதிகளவில் மான்கள் தண்ணீரை தேடி வந்து விளைச்சலை பாதிப்பு ஏற்படுத்தி வருவதாக விவசாயிகள் கலெக்டரிடம் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் இது வரை வன அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. வன அதிகாரிகளின் இந்த அலட்சியபோக்கால் உளுந்தூர்பேட்டை வன காப்பு காட்டில் மான்கள் அழித்து வரும் போக்கு அதிகரித்து வருகிறது. கோடை காலங்களில் தண்ணீரை தேடி மான்களை உயிரிழப்பதை தடுக்க வன அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுப்பது அவசியம்.


Tuesday, June 7, 2011

மன்னார் வளைகுடா தீவுகளை சுற்றுலாத்தலமாக்கும் திட்டம் இல்லை



பதிவு செய்த நாள் : ஜூன் 07,2011,23:19 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=253736

தூத்துக்குடி : ""மன்னார் வளைகுடா தீவுகளை, சுற்றுலாத்தலமாக்கும் திட்டம் இல்லை,'' என, மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பக இயக்குனர் சேகர் குமார் நீரஜ் தெரிவித்தார். தூத்துக்குடியில், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் சார்பில், அரிய உயிரினமான கடல் பசு, அதன் வாழ்விடங்களை காப்பது குறித்து, இரண்டு நாள் தெற்காசிய கருத்தரங்கம் நடந்தது. அதில் கலந்து கொண்ட உயரதிகாரிகள், ஆராய்ச்சியாளர்கள், நேற்று படகில் வான்தீவு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் ஆய்வு நடத்தினர்.

பின், மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பக இயக்குனர் சேகர் குமார் நீரஜ் கூறியதாவது: மன்னார் வளைகுடா, 1986ல், தேசிய கடல் பூங்காவாகவும், 1989ல், உயிர்கோள காப்பகமாகவும் அறிவிக்கப்பட்டது. இதில் ராமநாதபுரத்தில் துவங்கி, தூத்துக்குடி வழியாக குமரி வரை, 10,500 சதுர கிலோ மீட்டரில் 21 தீவுகள் இருந்தன. அவற்றில் இரண்டு தீவுகள் கடலில் மூழ்கின. வான்தீவு, 115 எக்டேரில் அமைந்துள்ளது. கடல் அரிப்பு காரணமாக, இத்தீவின் பரப்பும் குறைந்து வருகிறது.

எட்டு ஆண்டுகளுக்கு முன், இப்பகுதியில் பவளப் பாறைகள் சட்டவிரோதமாக வெட்டி எடுத்து கடத்தப்பட்டன. தடை செய்யப்பட்ட பின், பவளப்பாறைகள் வெட்டியெடுக்கப்படுவது இல்லை. மீன்களின் உறைவிடமான பவளப்பாறைகளை வளர்க்கும் பணி ஆறு தீவுகளில் நடந்து வருகிறது. மன்னார் வளைகுடா தீவுகளை சுற்றுலாத்தலமாக்கும் திட்டம் இல்லை. பொதுமக்கள் இப்பகுதிக்கு வந்து வண்ண மீன்களை கண்டு ரசிப்பதற்காக, கண்ணாடிப் படகு இயக்கும் திட்டம், பரிசோதனை அடிப்படையில் ராமேஸ்வரத்தில் நடைமுறையில் உள்ளது. இவ்வாறு சேகர் கூறினார்.