-கட்டெறும்பு-
நான் ஆறாம் வகுப்பு முதல் அந்தப் பள்ளி விடுதியில் தான் இருக்கிறேன்.
என்னுடன் படிக்கும் நண்பர்கள் சிலரும் அந்த விடுதியில் தான் தங்கியிருந்தார்கள். என் அப்பா அம்மா இருவருமே பள்ளிக்கூட ஆசிரியர்கள். ஊரிலேயே நல்ல வசதியான குடும்பத்தில் எங்கள் குடும்பமும் ஒன்று. பரம்பரை பரம்பரையாக வசதிக்கு ஒன்றும் குறைவில்லை.
நான் அந்த குடும்பத்தில் மூத்த மகன் எனக்கு பிறகு இரண்டு தம்பிகளும் ஒரு தங்கையும் உண்டு. நான்கு பேரையும் ஆசிரியையாக இருக்கும் என் தாயார் கவனிக்க இயலாத காரணத்தால் என்னை விடுதியில் சேர்த்து விட்டார்கள்.
மாதம் ஒரு ஞாயிறு என்னை அழைத்துப்போக டிரைவர் மாமா வருவார்.அந்தக் காலத்தில் கௌரவமாக கருதப்பட்ட காண்டசாவில் வந்து என்னை அழைத்துச் செல்வார். காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு; விடுமுறைகளிலும் பண்டிகை நாட்களிலும் டிரைவர் மாமாதான் வந்து என்னை அழைத்துச் செல்வார்.
வீட்டிலேயே இருந்து பழகிய எனக்கு விடுதி புதிதாக இருந்தது. ஒவ்வொருவருக்கும் தனி அறை தனி படுக்கை. நான் எனது அறையின் ஜன்னலில் நின்று கொண்டு அடிக்கடி வெளியில் இருக்கும் மரம் செடிகளை பார்த்து ரசித்துக்கொண்டிருப்பது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.
அந்த நேரங்களில் ஜன்னலில் எறும்புகள் வரிசையாக தன் உணவைத் தேடிச் சென்று கொண்டிருக்கும். நான் அதை கவனிக்க ஆரம்பித்தேன். நான் சாப்பிட்டு போடும் பிஸ்கட்டிலிருந்து சிதறிய துண்டுகளையும் கடலைமிட்டாயிலிருந்து சிதறிய துண்டுகளையும் எடுத்துக்கொண்டு செல்வதற்காக வரும். வாரம் ஒருமுறை விடுதியில் எறும்புகளைக் கொல்ல எறும்பு பொடி தருவார்கள். நான் மட்டும் சென்று வாங்க மாட்டேன். எறும்புகள் என் அறையில் மிகக் குறைவாக இருந்தது ஒரு காரணம் என்றால், அதையும் தாண்டி எறும்புகளை மருந்து வைத்துக் கொல்வதில் எனக்கு விருப்பமில்லை. எறும்புகளை ரசிக்க ஆரம்பித்தேன்.
மணிக்கணக்கில் எறும்புகள் வரிசையாக சென்று கொண்டிருப்பதை பார்த்துக் கொண்டே இருப்பேன். எனக்கு அந்த நேரத்தில் ஒரு சந்தேகம் தோன்றியது. எறும்புகள் எப்போதும் ஒரு இடத்திற்குப் போகும் போது ஒரே வழியாகப் போகுமா? அல்லது வேறு வழியாக சென்று விடுமா? என்று.
ஒருமுறை வந்த இடத்திற்கு திரும்ப வர மாதக் கணக்கில் ஆகும்போது முதலில் வந்த அதே வழியாக வருமா? இல்லை வேறு பாதையில் செல்லுமா? என்ற சந்தேகம் நீண்ட நாட்களாக இருந்தது.
அதற்காக சாக்பீஸ் ஒன்றை எடுத்து எறும்புகள் வந்த வழியை நான் இரண்டு கோடுகள் போட்டு குறித்து வைத்துக்கொண்டேன்.
அவைகள் வந்து சென்று ஒரு சில மாதங்களுக்குப் பிறகு திரும்ப வந்தாலும் அதே வழியில் வருவது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அந்த எறும்புகள் உணவுகளை எடுத்துச் செல்லும்போது எதிரே வரும் எறும்புகளோடு முகத்தோடு முகம் வைத்து ஏதோ ஒன்று பேசிக்கொள்ளும். அதை நான் தொடர்ந்து கவனித்து வந்தேன். அதைப் பார்க்க எனக்கு அவ்வளவு பிடிக்கும். அது உணவு அங்கு உள்ளது சென்று எடுத்துக்கொள் என்றும் உணவு அங்கு இல்லைதிரும்பி வா என்றும் கூறி இருக்குமோ என்று எண்ணிக்கொள்வேன்.
வேகமா போ உணவு இன்னும் இருக்கு என்று கூறும் என்றும் எண்ணிக் கொள்வேன். அந்த நேரத்தில் நான் ஒரு சிறு எறும்பு ஒன்று என் ஜன்னலின் அருகில் அலைமோதிக் கொண்டிருந்தது. அது தன் அம்மா அப்பாவை தொலைத்துவிட்டு தேடுகிறது என்று நினைத்தேன். நான் என்னிடம் இருந்த காலியான ஒரு ஊறுகாய்ப் பாட்டிலை எடுத்து அதில் அதற்கு உணவு கொடுத்து வளர்க்க ஆரம்பித்தேன்.
நண்பர்கள் வந்து அதை சிலர் ஆச்சரியமாகவும் சிலர் கிண்டலாகவும் பேசுவார்கள். எப்படி இங்கிருந்து போகாமலேயே இருக்கு? என்று கேட்பார்கள். கடிக்குமா? என்பார்கள். அந்த நேரத்தில் எனக்கு மிகவும் பெருமையாக இருக்கும்.
உடனே நான் கடிக்காது என்று சர்வசாதாரணமாக என் கைகளில் அழகாக எடுத்து என் தொடை மீது வைத்து விடுவேன். அங்குமிங்கும் ஓடும் விளையாடும். பிறகு எடுத்து கண்ணாடி பாட்டிலில் விட்டுவிடுவேன்.
இது எப்படியோ என ஆசிரியர்களின் காதுகளுக்குப் போனது. என்ன எறும்பு வளர்கிறயாமே என்று கேட்பார்கள். தமிழாசிரியர் பிலீப் அடிக்கடி என்னை பார்த்து எறும்புகளைப் பற்றி ஏதாவது கேட்டுக்கொண்டே இருப்பார். உன்ன மாதிரியே உன்னுடைய எறும்பும் குள்ளமா இருக்குமோ? எறும்புக்குச் சாப்பாடு வச்சுட்டு நீ வீட்டுப்பாடம் பண்ண மறந்துட்டியே என்றும் கேட்பார்.
இப்படியாக இரண்டு வருடங்களுக்கு மேல் என்னிடமே வளர்ந்த சிறிய எறும்பு வளர்ந்து முழு கட்டெறும்பாக வளர்ந்திருந்தது. வழக்கம் போல முழு ஆண்டு விடுமுறை தொடங்கிய நாளில் என்னை அழைத்துப்போக டிரைவர் மாமா வந்தார். காரில் எனது பொருட்களை ஏற்றி பிறகு மிக பத்திரமாக எனது எறும்பு பாட்டிலையும் காரின் இருக்கையில் வைத்தேன்.
இரண்டு வருடங்களுக்கு மேல் என்னோடு வாழ்ந்த ஒரு நட்பின் இழப்பு எவ்வளவு வலி மிக்கது என்பதை உணர முடிந்தது.