Pages

Saturday, March 31, 2012

சேற்றில் சிக்கி பலியான யானையை தேடி அணையை சுற்றிவரும் குட்டி


http://www.dinamalar.com/News_Detail.asp?Id=438699
பதிவு செய்த நாள் : மார்ச் 31,2012,23:33 IST

உடுமலை: உடுமலை அமராவதி அணை சேற்றில் சிக்கி பலியான பெண் யானையின் குட்டி, தாயைத் தேடி அணைப் பகுதியைச் சுற்றிச் சுற்றி வருகிறது. இந்த பாசப் போராட்டத்தை பார்த்த பொதுமக்கள் கடும் வேதனைக்குள்ளாகியுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே அமராவதி அணையில், கடந்த 29ம் தேதி பிற்பகல், குட்டியுடன் தண்ணீர் குடிக்க வந்த பெண் யானை, சேற்றில் சிக்கியது. யானையை மீட்கச் சென்றபோது, யானைக்குட்டி வனத்துறையினரை விரட்டியது. பின்னர், யானைக்குட்டி வனப்பகுதிக்குள் விரட்டப்பட்டு மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டும் பலனில்லாமல் யானை இறந்தது. இந்நிலையில், தாய் யானையை தேடி, குட்டி யானை, அமராவதி அணைப்பகுதியில் முகாமிட்டுள்ளது. தாய் யானை இறந்த கோம்பு பீட் பகுதியில், கடந்த இரண்டு நாட்களாக, யானைக்குட்டி தொடர்ந்து சுற்றி வருகிறது. கூட்டத்திலிருந்து பிரிந்து வந்துள்ள யானைக்குட்டி, அணைப்பகுதியில் தண்ணீர் அருந்தி விட்டு, அருகிலுள்ள புல்வெளியில் மேய்கிறது; தொடர்ந்து பல மணி நேரம், ஒரே இடத்தில் நின்ற படி உள்ளது. மாலை நேரத்தில், யானைகள் கூட்டம், அமராவதி அணைக்கு தண்ணீர் குடிக்க வரும் போதும், அவற்றுடன் யானைக்குட்டி செல்லவில்லை. இது குறித்து தகவல் கிடைத்ததும், வனத் துறையினர், கண்காணிப்பு பணிகளை துவக்கினர். இறந்து போன தாய் யானையைத் தேடி, குட்டி யானை நடத்தி வரும் பாசப் போராட்டம், அப்பகுதி மக்களை வேதனைக்குள்ளாக்கியுள்ளது. வனப்பகுதிக்குள் குட்டி யானை, தானாகச் செல்லும் வரை அதை விரட்டும் திட்டம் ஏதுமில்லை என்று வனத்துறையினர் கூறினர்.