மசினகுடியில் யானைக்கு தீ வைத்தவர்கள் மீது குண்டர் சட்டம்!:
நீலகிரி: உதகை அருகே மசினகுடியில் காட்டு யானையை தீ வைத்து கொன்றவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார். மசினகுடி பகுதியில் பல ஆண்டுகளாக சுற்றித்திரிந்த 50 வயது மதிக்கத்தக்க ஒற்றை ஆண் காட்டுயானை கடந்த ஜனவரி 3ம் தேதியன்று மாவனெல்லா பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் புகுந்தது. இதனால் ஆத்திரமடைந்த விடுதி உரிமையாளர் ரேமண்ட் மற்றும் கூலி தொழிலாளி பிரசாத் ஆகியோர் யானை மீது எரியும் துணியை வீசியுள்ளனர். இதில் யானையின் காது மடல் கிழிந்து பிளிறியபடி வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது.
இதனை தொடர்ந்து யானைக்கு ரத்தப்போக்கு ஏற்பட்ட நிலையில் கடந்த ஜனவரி 19ம் தேதி வனத்துறையினர் தெப்பக்காடு முகாமுக்கு கொண்டுசெல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தது. தொடர்ந்து, யானை தீ பற்றி வலியில் பிளிறியபடி ஓடிய காணொலி காட்சிகள் வெளியாகி பெருமளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை அடுத்து விடுதி உரிமையாளர் மற்றும் தொழிலாளி கைது செய்யப்பட்டு குன்னூர் கிளைசிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் யானைக்கு தீ வைத்தவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்குமாறு நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார்.
நன்றி தினகரன்