Pages

Saturday, October 31, 2020

 -கிறிஸ்துமஸ் கோழி-


பள்ளிக்கூடம் விட்டதும் எப்பவுமே நண்பர்களுடன் விளையாடிக் கொண்டே வீடு வருவேன். வீட்டிற்கு அருகில் இருக்கும் பள்ளியில் தான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அன்றும் வழக்கம்போல நான் வளர்க்கும் இரண்டு கோழிகளோடு  தெருவில் நண்பர்களுடன் விளையாடச் சென்றேன்.

என் கோழிகளை எனக்கு மிகவும் பிடிக்கும். நாங்களெல்லாம் எப்படி கோழி வளர்க்க  ஆரம்பிச்சோம்ன்னா....

நான்  தினமும் வீட்டில் கொடுக்கும் 50 பைசா 25 பைசா ஒரு ரூபாய் காசுகளை சஞ்சய்கா  திட்டத்தில் பள்ளிக்கூடத்தில் சேர்த்து வைப்பேன். பள்ளிக்கூடத்தில் ஒரு ஆசிரியர் இந்தத் திட்டத்தை நிர்வகிப்பார். அவரிடம் சென்று நாங்கள் எங்களிடம் இருக்கும் காசுகளைக் கொடுத்தால் அவர் அட்டை ஒன்றில் வரவு வைத்துக் கொண்டு அட்டையை எங்களிடம் கொடுத்துவிடுவார்.

பிறகு அவர் அதை தபால் நிலையத்தில் எங்கள் கணக்கில் கட்டிவிடுவார். நான் இப்படி மட்டும் பணத்தைச் சேமிக்கவில்லை.

ஸ்டாம்ப்  சேர்த்து வைத்து அதை மொத்தமாக கொடுத்தும் பணம் சேமிப்பேன். ஆறாம் வகுப்பு வரை சிறுவன் என்பதால்  பள்ளியிலேயே தருவார்கள். ஒரு ரூபாய்  , இரண்டு ரூபாய் என்று ஸ்டாம்புகளை வாங்கி வைத்துக்கொள்வேன்.

ஆறாம் வகுப்புக்கு மேல் பள்ளிக்கு அருகில் இருக்கும் தபால்நிலையம் சென்று வாங்க வேண்டும். நான்  ஏழாம் வகுப்பு வந்துவிட்டதால் பள்ளிக்கு அருகில் இருக்கும் தபால்நிலையத்திற்கு சென்று வாங்க வேண்டியதாகிவிட்டது. நான் சராசரி உயரத்திற்கு சற்றே குறைவு அதனால் நான் தபால்நிலையம் செல்லும் போதெல்லாம் முக்காலியைக் கையில் தூக்கிக் கொண்டு சென்று தபால் நிலையத்தின் பணம் கொடுக்கும் வளையத்திற்கு இடையில் கையை நீட்டி பணத்தை கொடுப்பேன்.

அட பாருடா! இந்த சின்ன பையனை என்று அங்கிருந்த ஊழியரும் என்னைச் செல்லமாகக் கன்னத்தை  தட்டுவார்.  இப்படியாக பணம் சேர்க்கும் முறையை பள்ளி கற்றுக்கொடுத்தது.

நானும் சேகரிக்க ஆரம்பித்தேன். பணம் மட்டும் சேமித்தால் போதுமா? அடுத்தகட்டமாக பணத்தை எப்படி சம்பாதிப்பது என்பதை கற்றுத் தருகிறோம் என்று பணியில் இறங்கியது பள்ளி.

பள்ளியில் கைத்தொழில் ஆசிரியர் என்று ஒருவர் இருந்தார். அவர் பள்ளி மாணவர்களுக்கு முழுஆண்டு விடுமுறை முடிந்து ஜூன் மாதம் பள்ளி தொடங்கும் நேரத்தில் முட்டைகளை வாங்கிக் கொடுத்து அதை விற்று வரும் லாபத்தை வைத்துக் கொண்டு அசலை திருப்பி தர சொல்வார்.

பிறகு அந்த முட்டையை விற்றதில் வந்த லாபத்தை வைத்துக் கொண்டு திரும்பவும் முட்டைகளை வாங்கி விற்கச் சொன்னார். அதை சேமித்து வைக்கும் படி கூறுவார்.

இப்ப எட்டாம் வகுப்பு என்பதால் முட்டைகளுக்கு அடுத்த கட்டமாக கோழிகள்.

ஒரு பெரிய தட்டு போன்ற கூடையைக் கட்டிக் கொண்டு கலர் கலராக கோழிகளை விற்று வருவோரிடம் மாணவர்களுக்கு கோழிகளை வாங்கித் தந்தார். அந்தக் கோழிகளை அவரவர் வீடுகளில் கொண்டு சென்று வளர்க்கச் சொன்னார். விடுதியில் இருக்கும் மாணவர்களுக்கு அவர்களுக்கென தனியாக ஒதுக்கப்பட்ட இடத்தில் கோழிகளை வளர்க்கச் சொன்னார். அப்படி வளர்த்து வருவதுதான் நான் வைத்திருக்கும் கோழிகளும் என் நண்பர்கள்   வைத்திருக்கும்  கோழிகளும்.

கோழிகளை வளர்க்க ஆரம்பித்த உடன் எனக்கு கோழிகள் மீது இனம் புரியாத அன்பு ஏற்பட ஆரம்பித்தது. கோழிகளையும் என் நண்பர்களாகக்  கருதி அதோடு பேசுவேன்,விளையாடுவேன். கோழிகளும் நான் பள்ளியிலிருந்து வரும் வரை காத்திருந்து வந்தவுடன் என்னிடம் ஒட்டிக் கொண்டு விளையாடும்.

டிசம்பர் 24 விடிந்தால் கிறிஸ்துமஸ் இரவு முழுவதும் சர்ச்சில் நடந்த ஆட்டம், பாட்டம், குழந்தை ஏசு பிறப்பு நிகழ்வு  கொண்டாட்டம் எல்லாம் முடித்துக்கொண்டு எல்லோரும் படுக்கையறைக்குப் போனோம். காலை எழுந்து வந்து குளித்துவிட்டு சாப்பிட ஆரம்பித்தேன். சாப்பிட்டு முடித்த பின் தான் தெரிந்தது நான் சாப்பிட்டது நான் வளர்த்த கோழிக‌ள் என்று. துடிதுடித்து சத்தமாகஅழுதேன்.  அழுவதைத் தவிர  வேறொன்றும் தெரியலைஎனக்கு.

அதற்காக அடுத்த வருடம் நான் கோழி வாங்குவதை நிறுத்த வில்லை. அடுத்த வருடமும் இரண்டு கோழி வாங்கி வளர்க்க ஆரம்பித்தேன்.

அந்தக் கோழிகளை கிறிஸ்துமஸ் க்கு  ஒரு வாரம் முன்பு நானும் நண்பர்களும் குளிக்க செல்லும் தாமிரபரணி ஆற்றுக்கு அருகில் உள்ள தென்னந்தோப்பில் கொண்டுசென்று விட்டுவிட்டு வந்துவிட்டேன். அடுத்தநாள் என் வீட்டார் கோழிகளைத் தேடும் போது நானும் அவர்களோடு  சேர்ந்து  கோழிகளைத்  தேட ஆரம்பித்தேன்.

தென்னந்தோப்பில் கோழிக‌ளை விட்ட நாளுக்கு அடுத்த நாளில் இருந்து தினமும் கோழிகளை அந்தத் தோப்பில் சென்று தேடுவேன். ஆனால் அதை ஒரு முறை கூட நான் பார்க்கவில்லை.

இப்ப நான் 40 வயதை கடந்த‌ பிறகும் நம்புகின்றேன் அந்தக் கோழிகள் அந்த தோப்பில் வாழ்கின்றன என்று. அந்த கோழிகளின் நிறம், உருவம், நடக்கும் விதம் எல்லாம் இன்னமும் எனக்கு ஞாபகம் இருக்கு. இது தான் நான் வள‌ர்த்த கடைசிக் கோழி. இப்பவரைக்கும் நான் கோழிகளை என்  நண்பர்களாகத் தான் பார்க்கின்றேன். உணவாக அல்ல‌.