Pages

Friday, September 26, 2014

நாய்களைக் கொன்ற 'மனித நேயர்!'
மரக்காணம் அதிர்ச்சி
http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=99108
நன்றி என்ற வார்த்தைக்கு இனி மரக்காணத்தில் இடம் இல்லை. காரணம், காலம் காலமாக மனிதர்களின் சக தோழனாக, பாதுகாப்பாளனாக, நன்றி என்ற வார்த்தைக்கு அடையாளமாகத் திகழ்ந்த நாய்களை மரக்காணம் பேரூராட்சி கொத்துக் கொத்தாகக் கொலை செய்திருக்கிறது.  
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பேரூராட்சியில் உள்ள நாய்களுக்கு கருத்தடை செய்யவேண்டும் என்று கூறி பேரூராட்சி ஊழியர்கள் கடந்த சில வாரங்களாக நாய்களைப் பிடித்துச் சென்றுள்ளனர். பிடித்துச் செல்லப்பட்ட நாய்கள் திரும்பிவர இல்லை.
மரக்காணத்தைச் சேர்ந்த கர்ணன், ''10 ஆண்டுகளுக்கு முன் மகாபலிபுரத்துல இருந்து 'சிண்டு’னு ஒரு நாயை வாங்கிட்டு வந்து ஆசையா வீட்டுல வளர்த்திட்டு வந்தேன். போன வாரம் நான் வீட்டுல இல்லாத நேரத்துல, கட்டிப்போட்டிருந்த நாயை பேரூராட்சி ஊழியர்கள் பிடிச்சிட்டுப் போயிட்டாங்க. வழக்கமா பேரூராட்சி நிர்வாகம் தெரு நாய்கள மட்டும் கருத்தடை பண்ண பிடிச்சிட்டுப் போவாங்க. வீட்டுல வளர்க்கற நாய்களுக்கு டோக்கன் கொடுத்து பத்திரமா பார்த்துக்க சொல்வாங்க. இந்த முறை நாய்களைப் பிடிக்கறது பத்தி பொது மக்களுக்கு எந்தத் தகவலும் தரல. வீட்டு நாய்களுக்குத் தர வேண்டிய டோக்கனும் தரல. வீட்டுல கட்டியிருந்த நாயைப் பிடிச்சிட்டுப் போக அவர்களுக்கு என்ன உரிமை இருக்கு?'' என்று தழுதழுத்தார்.


நாய்கள் கொல்லப்பட்டது குறித்து ப்ளூ க்ராஸுக்குத் தகவல் தெரிவித்த சமூக ஆர்வலர் ஹமீத் நம்மிடம், ''மரக்காணத்தில் நாய் தொல்லை அதிகமாக இருப்பதாகக் கூறி, தெரு நாய்களைப் பிடித்து கருத்தடை செய்ய வேண்டும் என்று பேரூராட்சி சார்பில் தீர்மானம் நிறைவேற்றினார்கள். கருத்தடை செய்வதற்காக ஒரு நாய்க்கு 750 ரூபாய் என நிதியும் ஒதுக்கினார்கள். மரக்காணம் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து 200-க்கும் மேற்பட்ட நாய்களைப் பிடித்துச் சென்றார்கள்.
நாய்கள் இரண்டு மூன்று நாட்களாகியும் திரும்பி வரவில்லை. தீர்த்தவாரி பகுதியில் துர்நாற்றம் வீசியதால் அங்கே சென்று பார்த்தபோது, அங்கு ஒன்பது இடங்களில் மண் உள்வாங்கியிருந்தது. இங்கு நாய்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் இருந்ததால் அதனை புகைப்படம் எடுத்து ப்ளூ க்ராஸுக்கு அனுப்பினேன். ப்ளூ க்ராஸ் இந்தியாவுக்கான பொது மேலாளர் ஜான் வில்லியம்ஸ் தலைமையில் ஒரு குழு வந்து குழிகளைத் தோண்டிப் பார்த்ததில் கொத்துக் கொத்தாக நாய்களின் சடலங்கள். பிரேத பரிசோதனைக்காக இரண்டு சடலங்களைக் கொண்டு சென்றதுடன், காவல் துறையிடமும் புகார் அளித்துவிட்டு சென்றார்.
கருத்தடை செய்தால் ஒவ்வொரு நாய்க்கும் 750 ரூபாய் செலவாகும் என்பதால் விஷ ஊசி போட்டு கொலை செய்துள்ளனர். குடும்பக் கட்டுப்பாடு செய்தது போல கணக்குக் காட்டி மோசடி செய்வதுதான் அவர்களின் திட்டம்.
நாய்களை சித்ரவதை செய்து கொலை செய்ய உத்தரவிட்ட பேரூராட்சித் தலைவர் சேகர் தமிழக கவர்னர் ரோசய்யாவிடம் 'மனித நேயர்’ விருது பெற்றவர்'' என்றார்.  
இதுகுறித்து மரக்காணம் பேரூராட்சித் தலைவர் சேகரிடம் கேட்டபோது, ''மரக்காணம் அரசு மருத்துவமனையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 35 பேர் நாய் கடிக்கு ஊசி போட்டிருக்கிறார்கள். இந்த எண்ணிக்கையைப் பார்க்கும் போதே மரக்காணத்தில் நாய்களின் தொல்லை எப்படி உள்ளது என்பது தெரியும். அதனால் பேரூராட்சியில் போட்ட தீர்மானத்தின்படி 55 நாய்களைப் பிடித்து கருத்தடை செய்து விட்டுவிட்டோம். வெறி பிடித்த சில நாய்களை ஊழியர்கள் கொன்று புதைத்துள்ளனர்'' என்றார்.
மரக்காணம் காவல் நிலைய ஆய்வாளர் சந்திரசேகர், ''வில்லியம்ஸ் அளித்த புகாரின் பெயரில் பேரூராட்சி மன்றத் தலைவர் சேகர், பஞ்சாயத்து ஊழியர்கள் உள்பட ஒன்பது  பேர் மீது விலங்குகளைச் சித்ரவதை செய்வது உள்ளிட்ட ஐந்து பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளோம்'' என்றார்.
விலங்குகள் வதைப்படுவதைத் தடுக்க வேண்டும்.
ஆ.நந்தகுமார்
படங்கள்: தே.சிலம்பரசன்